இருமொழிக் கொள்கை தமிழ்ப்பள்ளிக்கு ஆபத்தாக அமையும்!

K. Arumugam_suaramஅரசாங்கம் தற்போது அறிமுகம் செய்துள்ள இரு மொழித் திட்டம் வழி ஆங்கில மொழியில் கணிதம் அறிவியல் பாடங்களைத் தொடக்கப்பள்ளிகளில் போதிக்க வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்பைத் தமிழ்ப்பள்ளிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற வகையில் கருத்துக் கணிப்பு நடக்கிறது. இது சார்பாக கருத்துரைத்த தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம், அதை ஏற்றுக்கொள்வது தமிழ்ப்பள்ளிக்கு ஆபத்தாக அமையும் என எச்சரிக்கிறார்.

தமிழ்ப்பள்ளி வேண்டும், தமிழ்க்கல்வி நமது உரிமை, தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு என்பது நமது முழக்கம். இப்படி நாம் முழங்க காரணம் தமிழ்க்கல்வி மீது நாம் கொண்டுள்ள பற்றும் நம்பிக்கையும்தான்.

இது உணர்ச்சி வசப்பட்டு உருவாக்கப்பட்டது அல்ல என்கிறார் ஆறுமுகம்.

இருமொழி கொள்கைகள் தமிழ்ப்பள்ளிக்கு உகந்தது என்ற வாதத்தை முன்வைக்கும் தரப்பினர், ஆங்கில மொழியின் வழி அறிவாற்றல் அதிகமாகும் என்றும் மேலும் இடைநிலைப்பள்ளிக்கு போகும்போது மாணவர்கள் சிரமம் இல்லாமல் அறிவியல் கணிதப் பாடங்களை கற்க இயலும் என்றும் கருதுகின்றனர்.

‘ஆங்கில மொழிதான் அறிவியல் மொழி. அதுதான் அறிவாற்றலுக்கு வித்திடும் என்றால் நாம் தமிழை எதற்காக கற்க வேண்டும்?’, என்று வினவும் ஆறுமுகம், தமிழும் வேண்டும்,  ஆங்கிலமும் வேண்டும் என்பவர்கள், எந்த அளவுக்கு  தமிழ் வேண்டும் என்பதை விளக்க வேண்டும் என்கிறார்.

தமிழ்ப்பள்ளி வேண்டும் என்பது தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் காப்பதற்காகத்தான். அதன்வழிதான் தமிழர்களின் பண்பாட்டை ஓர் உயரிய வாழ்வியலுக்கு உயர்த்த முற்பட வேண்டும்.

வெறுமனே தமிழ்  வேண்டும்  என்ற எண்ணம், தமிழ்  மொழியின் வளர்ச்சிக்கு  உதவாது. எனவே தமிழ் மொழி சார்பாக விவாதிக்கும் போது, விவாதங்கள் மொழியின் பயன்பாட்டை ஒரு முழுமையான மானிட வாழ்வியலுக்கு தேவைப்படும் உயிரோட்டமுள்ள தொடர்பாக கருத  வேண்டும் என்கிறார் அவர்.

tamil school children2தொடக்கக்கல்வியை தாய்மொழியில் கற்பதுதான் மொழி வளர்ச்சிக்கும் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் உகந்தது என்கிறது ஐக்கிய நாட்டு சபையின் கீழ் இயங்கும் யுனஸ்கோ என்ற ஆய்வு மையம். மேலும் அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை உற்றரிதல் வழிதான் கற்க இயலும். மாணவர்கள் இவற்றின் அடிப்படையில் கருத்தையும் தத்துவத்தையும் தாய்மொழியில்தான் தெளிவாக புரிந்து கொள்ள இயலும். தமிழ்ப்பள்ளி  வேண்டும்  என்பவர்களும் தமிழ்ப்பள்ளியே சிறந்த தேர்வு என்பவர்களும்  ஆங்கிலத்தில் அறிவியல்  கணிதம் வேண்டும் என்பது எந்த ஆய்வின் அடிப்படையில் என்பதை விளக்க வேண்டும்.

நமக்கு சிறந்த  தமிழ்க்கல்வி  வேண்டும் என்பதுதான் முக்கியம்.  அப்படிப்பட்ட  சிறந்த தமிழ்க்கல்வியை எப்படி ஆங்கில மொழி வழி பெற இயலும்?

tamil school children1அறிவியல் மற்றும் கணிதப் பாடங்கள் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டால், தமிழ்ப்பள்ளிகளின் அமைப்புமுறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவை தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்தாக முடியும் என்கிறார் ஆறுமுகம்.

மலேசியாவில் இருநூறு ஆண்டுகள் தமிழ்க்கல்வி விழாவை அடுத்த ஆண்டு கொண்டாட உள்ளோம். இருநூறு ஆண்டுகளாக படிப்படியாக பல போரட்டங்கள் வழி வளர்க்கப்பட்ட  தமிழ்ப்பள்ளிகள் இந்த இருமொழிக் கொள்கையால் பாதிப்படையக்கூடாது.

நமக்கு சிறந்த  தமிழ்க்கல்வி வேண்டும், அவற்றை வழங்கும் மையங்களாக தமிழ்ப்பள்ளிகள் உருவாக வேண்டும் என்ற வகையில்தான் நமது சிந்தனை இருக்க வேண்டும் என்கிறார் ஆறுமுகம்.