யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விகிதம் வீழ்ந்ததா?வீழ்த்தப்பட்டதா?

kula-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், நவம்பர் 29, 2015.

 

2015 ஆம் ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் யுபிஎஸ்ஆர் தேர்வின் முடிவுகளில் 767 மாணவர்கள் 7A க்கள் பெற்றனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இதனால் சமுதாயம் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. மொத்த தேர்ச்சி விகிதத்திலும் தமிழ்ப்பள்ளிகள் இவ்வருடம் பின்னடைவையே சந்தித்துள்ளன.

 

2013 ஆம் ஆண்டு வாக்கில் பிரதமர் தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறித்து மிகவும் புகழ்ந்து பேசினார். அதனைத் தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளின் நிலைமை தொடர்ச்சியாக வீழ்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக தேசிய மொழிப்பாடமும் ஆங்கிலமும் தமிழ்ப்பள்ளிகளில் வீழ்ச்சி கண்டுள்ளன. பிரதமர் பேசியதற்கும் தமிழ்ப்பள்ளிகளின் கவலையளிக்கும்najib flays palanivelu வீழ்ச்சிக்கும் ஏதும் தொடர்பு உள்ளதா?

அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி ஆதரவு கொடுத்திருந்தும் அதன் பலனை தமிழ் மாணவர்கள் முழுமையாக அடையாமல் போனதற்கு சதிநாச வேலைகள் ஏதும் காரணமா என்பது போன்ற பல சந்தேகங்கள் எழுகின்றன.

 

மலேசிய தேர்வு ஆணையம் சுதந்திரமாக செயல்படுகின்றதா என்ற கேள்வியும் இங்கு எழ வாய்ப்புள்ளது.

 

அரசாங்கம் 2012 லிருந்து 2015 வரை ஏறத்தாழ 45 கோடி ரிங்கிட்டை தமிழ்ப்பள்ளிகளுக்காக  ஒதுக்கியுள்ளது. இவ்வளவு பெருந்தொகையைப் பெற்ற பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் ஏறுமுகமாக இருக்கவேண்டும் என்பது எதிர்பார்த்த ஒன்று. ஆனால் நிலைமை தலைகீழாக உள்ளது. செலவு செய்யபட்ட  பணம் விழலுக்கிறைத்த நீராகிப் போகிறதோ என்ற கவலை ஏற்படுகிறது.

 

தமிழ்ப் பள்ளிகளில் போதனாமுறை, ஆசிரியர்களின் முயற்சி, பெற்றோர்களின் அக்கறை, மாணவர்கள் கல்விமேல் கொண்டுள்ள ஈடுபாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டும் போகும் வேளையில், யுபிஎஸ்ஆர் தேர்வில் மட்டும் எப்படித் தமிழ்ப்பள்ளி மாணவர்களின்  தேர்ச்சி நிலை கீழ் நோக்கி போய்க் கொண்டிருக்கின்றது?

 

தமிழ்ப் பள்ளிகளே தங்களின் முதல் தேர்வாக இருக்கவேண்டும் என்று சமுதாயத்தில் உள்ள பலர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இது போன்ற தேர்ச்சி நிலை மக்கள் மத்தியில் ஒரு ஏமாற்றத்தையும் வெறுப்பையும் தமிழ்ப்பள்ளிகளின் மேல் உண்டாக்காதா?

 

இதைத்தான் ஒரு குறிப்பிட்ட தரப்பினர் விரும்புகின்றனரா? ஒருவேளை இது திட்டமிட்டே தமிழ்ப்பள்ளிகளின் தேர்ச்சி நிலையைக் குறைக்கும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியா?

 

தேசியப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் மட்டும் வருடா வருடம் ஏறிக்கொண்டே போகிறது. இதையே காரணமாக காட்டி தேசிய பள்ளிகளுக்கு மற்ற இன மாணவர்களை சுண்டி  இழுக்கும் மறைமுக முயற்சியாக இது இருக்குமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.

 

kamalanatahanதுணைக் கல்வி அமைச்சர் கமலநாதனின் தொகுதியான உலு சிலாங்கூரிலேயே ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் கூட சிறந்த அடைவுநிலையை எட்டவில்லை. மஇகாவின் முக்கிய தலைவராகவும் துணைக் கல்வி அமைச்சராகவும் இருக்கும் கமலநாதன் தொகுதியில் ஏற்பட்ட இந்த மாபெரும் பின்னடைவுக்கு அவரின் பதில் என்ன?

கல்வித் துணை அமைச்சர் கமலநாதனோ என் எஸ் ராஜேந்திரனோ உடனியாக ஒரு வட்ட மேசை  கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதில்அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமிழ்ப்பள்ளிகளின் மேல் அக்கறையுள்ள எல்லா அரசு சாரா இயக்கங்களும், மலேசிய தேர்வு வாரிய அதிகாரிகள், தமிழ்ப்பள்ளி ஆர்வலர்கள், தலைமை ஆசிரியர்கள், உட்பட அனைவரும் இந்த கலந்துரையாடலுக்கு வரவேண்டும்.

 

தமிழ்ப்பள்ளிகளின் தொடர் வீழ்ச்சியை கட்டுப்படுத்த என்ன முயற்சிகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும், இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம்? அது அரசியலாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் திறந்த மனதுடன் நம் மாணவர்களின் எதிர்காலம் கருதி வெளிப்படையாக  விவாதிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

 

யு பிஎஸ்ஆர் தேர்வு முடிவுகளை மற்ற சில நாடுகள் போன்று A, B, C ,D, E என்று வரையறுப்பதற்கு பதிலாக மாணவர்கள் பெற்ற உண்மையான மார்க்குகளை வெளியிடும் யோசனையையும் இந்த வட்ட மேசையில் பரிசீலிக்கப்படலாம். இது பல விதமான சர்ச்சைகளுக்கு முடிவு கட்டும்  என்று  நான் நம்புகிறேன். மாணவர்கள் எடுத்த மார்க்குகள் தாங்கள் போட்ட உழைப்புகேற்ற புள்ளிகள்தானா என்று சுய மதிப்பீடு செய்ய உதவும். இரண்டாவதாக, இது போன்ற வெளிப்படையான செயல்  நமது கல்வியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்று நான் எண்ணுகிறேன்.

 

பல இந்திய பெற்றோர்கள் குடும்பத்தின்  எதிர்ப்புக்களுக்கிடையேயும் போராட்டங்களுக்குப் பிறகே தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். இது போன்ற பின்னடைவுகள் அவர்களின் மனநிலையை தமிழ்ப்பள்ளிகளுக்கு எதிராக மாற்றக் கூடும். சில அம்னோ அரசியல்வாதிகள் விருப்பதிற்கேற்ப இது  அமைவதோடல்லாமல் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.

 

இந்த கருத்தரங்கை துணை அமைச்சர் உடனடியாக ஏற்பாடு செய்யவில்லை என்றால், சில இந்தியப் பெற்றோர்கள் தமிழ்ப்பள்ளிகளிலிருந்து விலகி தேசியப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்ப இது வழிகோலும் என்று நான் அஞ்சுகிறேன்.

.