மலாக்கா சிஎம்-முக்கு ரிம990 ஆயிரம் செலவில் ஆடம்பர கார்கள் ஏன்?

malaccaமலாக்கா  முதலமைச்சர்  இட்ரிஸ்  ஹருன்   மூன்று கார்களை,  அவற்றில்  இரண்டு  ஆடம்பர  கார்கள்,  வைத்திருப்பது  அவ்சியம்தானா  என  டிஏபி ஆயர்  குரோ  சட்டமன்ற  உறுப்பினர்  கூ  போய்  தியோங்  வினவினார்.

மாநில அரசின்  தலைவர்  என்ற  வகையில்  ஏற்புடைய  அதிகாரத்துவ  கார்  ஒன்றைப்  பெற்றிருக்க  அவர்  உரிமை  பெற்றிருக்கிறார்.  அதற்காகவே  ஹொண்டா  எக்கோர்ட்  வழங்கப்பட்டுள்ளது. ஆனால்,  மூன்று  அதிகம்  என  கூ  குறிப்பிட்டார்.

முதலைமைச்சரிடமுள்ள  மற்ற  இரண்டு  கார்களில்  ஒன்று  மெர்சிடிஸ்  பென்ஸ்  எஸ்400,  இன்னொன்று  லெக்ஸஸ் ஆர்350.

அக்கார்கள்  பற்றி  சட்டமன்றத்தில்  கேள்வி  எழுபியதாக கூ  கூறினார்.

அவரது  கேள்விக்கு  வழங்கப்பட்ட  எழுத்துப்பூர்வமான பதிலில்  முதலமைச்சரின்  அதிகாரப்பூர்வ  கார்  வாடகைக்கு  எடுக்கப்பட்டது என்றும்  மற்ற  இரண்டும்  மாநில  அரசுக்குச்  சொந்தமான  நிறுவனங்கள்  வாங்கியவை  என்றும்  கூறப்பட்டது.

மெர்சிடிஸ்  பென்ஸ்  காரை  மலாக்கா   மாநில  மேம்பாட்டு  நிறுவனம் (பிகேஎன்எம்) ரிம592,450க்கு  வாங்கியது.  லெக்ஸஸ் ரிம402,507-க்கு  மலாக்கா  நீர்  நிறுவன( எஸ்ஏஎம்பி)த்தால்  வாங்கப்பட்டது.

பிகேஎன்எம்-முக்கும்  எஸ்ஏஎம்பி-க்கும்  மலாக்கா  முதலமைச்சர்    என்ற  முறையில்   இட்ரிசே  தலைவராவார்.

தங்கள்  தலைவர்  என்பதால்  அப்பதவியின்  மதிப்பை  நிலைநிறுத்தும்  வகையில்  பென்ஸ்  கார்  வாங்கப்பட்டதாக பிகேஎன்எம்  விளக்கமளித்தது.

அதேபோல் லெக்ஸஸ்  கார்  வாங்கப்பட்டதையும்  மாநில்  அரசு  தற்காத்துப்  பேசியது. மலாக்காவில்  உள்ள  நீர்பிடிப்புப்  பகுதிகளைப்  பார்வையிடச்  செல்கையில்  உதவியாக  இருக்கும்   என்று  அது  கூறிற்று.

ஆனால்,  கூ  அவ்விளக்கங்கள்  “ஏற்கத்தக்கவை  அன்று”  என்றார்.

நீர்  விநியோக  நிறுவனத்திடமே  போதுமான  வாகனங்கள்  உள்ளன. அவற்றில்  சென்று  நீர்ப்பிடிப்புப்  பகுதிகளைப்  பார்வையிடலாம் என்றார்.

“நீர்ப்பிடிப்புப்  பகுதிகளைப்  பார்வையிட  ஆடம்பர  கார்  வாங்க  வேண்டிய  தேவையில்லை”, என  கூ  கூறினார்.

இட்ரிஸ்  மெர்சிடிஸ்  கார்  வைத்திருப்பது  முதலீட்டாளர்களைக்  கவர  உதவும் என்ற  விளக்கத்தையும்  ஒதுக்கித்  தள்ளிய  கூ,  முதலைமைச்சர்  என்ற  முறையில்  அது  அவரது  கடமையாகும்  என்றார்.

“ஆடம்பர  மெர்சிடிஸ்  வைத்திருப்பது (முதலீட்டாளர்களின்  பார்வையில்)  அவரது  மதிப்பை  உயர்த்தும்  என்பதும்  சரியல்ல. அவர்கள்  மாநிலத்தின்  கொள்கைகளையும்  முதலீட்டுச்  சூழலையும்தான்  பார்ப்பார்கள்.

“போடும்  முதலுக்கு  ஆதாயம்  கிடைக்குமா  என்றுதான்  பார்ப்பார்களே  தவிர   என்ன ஆடம்பரக்  கார்  வைத்திருக்கிறீர்கள்  என்று  பார்க்க  மாட்டார்கள்”, என்றாரவர்.