எமது சமூகத்தைப் புகலிடமற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன: சீ.வி.விக்னேஸ்வரன்

jaff_laibrary_vikneswarn_001காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாக கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன்.

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரசகுடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன.

அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தோமானால் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன அமைப்பில் மாற்றங்களை இழைக்க வேண்டும் என்ற இழிவான கரவெண்ணமே அக்குடியேற்றங்களின் காரணம் என்பது தெரியவரும்.

மேற்கண்டவாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்.பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிலமும் நாங்களும் என்னும் கருப்பொருளிலான போருக்கு பின்னைய கால காணி பிரச்சினைகளை புரிந்து கொள்ளல் தொடர்பான கருத்தாடல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

முதலமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

ஒரு முக்கியமான விடயத்தை எடுத்துக் கையாளும் மாலையாக இன்றைய மாலை பரிணமித்துள்ளது. “நிலமும் நாங்களும்” என்ற பொருள்பற்றி ஆராயக்கிடைத்துள்ளது.

ஒரு பாரம்பரிய சமூகத்தின் அடையாளமே அது வாழ்ந்து வரும் நிலந்தான். பாரம்பரிய நிலத்தில் இருந்து சமூகத்தைப் பிரித்தால் பிரிக்கப்பட்ட சமூகம் அநாதையாகிவிடும்.

அதன் உறுப்பினர்கள் அகதிகளாகிவிடுவர். அகதிகள் என்றால் புகலிடம் அற்றவர் என்று அர்த்தம். கதி என்ற சொல்லுக்கு ஒரு அர்த்தம் “புகலிடம்”. ஆகவே அ(சக)கதி என்றால் புகலிடம் அற்றவர் என்று பொருள்படுகிறது.

எமது பாரம்பரிய சமூகத்தைப் புகலிடம் அற்றவர்கள் ஆக்கவே பல நடவடிக்கைகள் அண்மைக்காலங்களில் எடுக்கப்பட்டு வருகின்றன.

2009ம்ஆண்டு மே மாதம், யுத்தமானது முடிவுக்கு வந்தது. யுத்த ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்களுக்குப் படையெடுத்து வந்தவர்கள் யுத்தம் முடிந்ததென்று தங்கள் இடங்களுக்குத் திரும்பிச் செல்லவில்லை.

எமது பாரம்பரிய நிலங்களில் பாரிய பகுதியைப் படைகள் தம் வசம் பற்றிவைத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

அந்நிலங்களில் உரிமையுடன் வாழ வேண்டியவர்கள் நிராதரவாக, நிர்க்கதியினராக பிறர் நிலங்களில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள் இருபது வருடங்களுக்கு மேலாக இவ்வாறான இடர் வாழ்க்கையில் இருந்து வருகின்றார்கள்.

இங்கு மட்டுமல்ல, இந்தியாவிலும் இதர நாடுகளிலும் வாழும் இப்பேர்ப்பட்ட மக்கள் தமது பாரம்பரிய இடங்களைப் பறி கொடுத்துவிட்டே அங்கு வாழ்ந்து வந்து கொண்டிருக்கின்றார்கள்.

தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் துயருற்ற எமது அகதிகளக்கு அண்மைக் காலமாகப் பல்வித உறுதி மொழிகளை அளித்து வந்திருந்தாலும் அவர்களைத் தத்தமது பாரம்பரியக் காணிகளில் மீள்க்குடியமர்த்துவதில் சிக்கல்களும் தாமதங்களுமே மிஞ்சி இருக்கின்றன.

இடம்பெயர்ந்த எம் மக்களைக் குடியமர்த்த வேண்டும் என்பதில் அதிகாரத்தில் உள்ளோருக்குப் போதிய கரிசனை இருக்கின்றதோ என்பதில் எமக்குச் சந்தேகமாக இருக்கின்றது.

காணிகளை விடுவிப்போம் என்றார்கள். அதில்த்தாமதம். அரசியல் கைதிகளை விடுவிப்போம் என்றார்கள். இப்பொழுது விசேட நீதிமன்றம் அமைக்கப் போவதாகக் கூறுகின்றார்கள். ஆகவே எங்கள் சந்தேகங்கள் நியாயமானவை.

காணிகளை இராணுவம் கையேற்று வைத்திருப்பதை நான் காலத்தின் கோலமாகக் கருதவில்லை. காலாதிகாலமாகக் கரவாகக் கடையப்பட்ட கருத்துக்களின் கடை நிலையாகவே நான் அவர்களின் நடவடிக்கைகளைக் காண்கின்றேன்.

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்க முன்னரே அரசகுடியேற்றங்கள் ஆரம்பமாகிவிட்டன. அதன் அர்த்தம் என்ன என்று ஆராய்ந்தோமானால் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த இடங்களில் இன அமைப்பில் மாற்றங்களை இழைக்க வேண்டும் என்ற இழிவான கரவெண்ணமே அக்குடியேற்றங்களின் காரணம் என்பது தெரியவரும்.

1983ம் ஆண்டின் இனக் கலவரத்தின் பின்னர் 1985ம் ஆண்டில் பிரித்தானிய பாராளுமன்ற மனித உரிமைகள் குழு தயாரித்த தனது அறிக்கையில் அது பின் வருமாறு கூறியது,

அதாவது “ஐயமின்றி எம்மால் ஒன்று கூறமுடியும். அரசாங்கமானது தமிழ் மக்களின் வாழ்விடங்களில் சிங்கள மக்களைக் கொண்டு வந்து குடியிருத்த முனைந்துள்ளது.” என்றார்கள்.

இதற்கான காரணங்களை அரசாங்கத்திடம் கேட்ட போது அவர்கள் அன்று அளித்த காரணம் “இலங்கை ஒற்றையாட்சிக்குட்பட்ட ஒரே நாடு. வளங்களைத் தேடிச் சென்று இலங்கை வாழ் மக்கள் அவற்றைப் பகிர விடப்பட்டுள்ளார்கள்” என்பது.

இது தவறு. அதாவது வளமுள்ள இடங்களுக்கு மக்கள் ஆற்றுப்படுத்தப்பட்டார்கள் என்று கூறியது தவறு. இந் நாட்டிற்குச் சுதந்திரம் கிடைக்க முன்பிருந்தே ஈரலிப்பான வளம் மிகுந்த இடங்களில் இருந்து வரண்ட வளம் குறைந்த இடங்களுக்கே பல்லாயிரம் மக்கள் “குடியானவர்கள் குடியிருத்தல் திட்டங்களின்” கீழ்க் குடியமர்த்தப்பட்டார்கள்.

இவ்வாறான குடியேற்றத் திட்டங்களால் பாரம்பரியமாகத் தமிழ்ப்பேசும் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் அவர்களினிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்டன.

உதாரணத்திற்கு திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் தொகையானது 1911ல் இருந்து 1981 வரையான காலகட்டத்தில் 3.8 சதவிகிதத்தில் இருந்து 33.6 சதவிகிதத்திற்கு மேலேழுந்தது. அதே காலகட்டத்தில் தமிழ் மக்களின் தொகையானது 56.8 சதவிகிதத்தில் இருந்து 33.7 சதவிகிதத்திற்குக் கீழிறங்கியது.

அதே காலகட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மக்களின் சனத் தொகை 7 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதத்திற்கு மேலெழுந்தது. தமிழ்ப் பேசும் மக்களின் தொகை 37 சதவிகிதத்தில் இருந்து 20 சதவிகிதத்திற்கு கீழிறங்கியது. இது 1983ம் ஆண்டுக்கு முன்னைய புள்ளி விபரங்கள்.

இவ்வாறான இன அடிப்படையிலான மாற்றங்கள் தான் சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சேருவில, அம்பாறை போன்ற தேர்தல்த் தொகுதிகள் 1976ம் ஆண்டில் உருவாக வழியமைத்தன.

இதே மாதிரியான மாற்றங்கள் தற்பொழுது வட மாகாணத்தின் தென் பகுதிகளிலும் ஆரம்பமாகிவிட்டன. இன அழிப்பு பற்றி நாங்கள் கொண்டுவந்த பிரேரணையை எதிர்ப்பவர்கள் இவை பற்றியெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தமிழ் இளைஞர்கள் வன்முறையில் இறங்கியதைக் காரணமாகக் காட்டி இவ்வாறான இன விரட்டல்க் காரியங்கள் மேலும் உக்கிரப் படுத்தப்பட்டன.

அதாவது கிளர்ச்சிகளைத் தவிர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளாகக் காட்டி 1980ம் ஆண்டுகளில் பாதுகாப்பு நிலையங்களை உருவாக்குவது பற்றியதான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

முதலில் பாதுகாப்பு நிலையம் அமைத்து அதன் பின் அதனைச் சுற்றிய இடங்களைப் பாதுகாப்பு வலையங்கள் ஆக்கி அதன்பின் அதியுச்சப் பாதுகாப்பு வலையங்கள் தாபிக்கப்பட்டன.

பாதுகாப்பு நிலையங்ளைச் சுற்றிய பிரதேசங்களை அண்டிய பல சதுர கிலோ மீற்றர் காணிகள் பாரம்பரிய மக்களை அங்கு குடியிருக்க விடாமல் தடுத்து வைக்கும் இடங்களாக மாற்றப்பட்டன.

அது மட்டுமல்லாமல் இடைநிலைப் பாதுகாப்பு வலையங்கள் அல்லது Buffer Zones என்று கூறி மக்களை விரட்டிப் படையினர் கைவசம் அவர்களின் காணிகளைக் கையேற்கும் இன்னொரு கைங்கரியமும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இராணுவ முகாம்கள் இருந்த இடத்தில் இருந்து ஆயிரம் மீற்றர் தூரத்திற்கு ஆட்கள் எவரும் இருக்கப்படாது என்று பிரகடனம் செய்ததால் பலாலி போன்ற இடங்களில் சுற்றுவட்டார மக்கள் யாவரும் குடிபெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது காலஞ் செல்லச் செல்ல பல இடங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.  இது உள்நாட்டில் காணிகளுக்கு ஏற்பட்ட விபத்து. மக்களுக்கு ஏற்பட்ட விரட்டு.

அதே போல் கடற்படை கண்காணிப்பு வலையங்கள் வடக்கு, கிழக்கு, வடகிழக்குக் கரையோரப் பகுதிகளில் 1985ம் ஆண்டில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதனால் கரையோரத் தமிழ்ப் பேசும் மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி, இந்தியா போன்ற நாடுகளில் தஞ்சம் புக வேண்டி வந்தது.

இவ்வாறு கடற்கரையோரங்களில் இருந்தும் உள் நாட்டில் பல இடங்களில் இருந்தும் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய நிலங்களில் இருந்து விரட்டப்பட்டதன் காரணத்தை அறிய விளைவோம்.

“1971ம் ஆண்டு தொடக்கம் 1987ம் ஆண்டு வரையிலான காலத்தில் இலங்கையில் அரசியல் வன்முறை” என்ற நூலில் பேராசிரியர் காமினி சமரநாயக்க என்பவர் வடமாகாணத்தைச் சுற்றி 2 இலட்சம் குடியானவர்களைக் குடியேற்றுவது என்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவு பாதுகாப்பையும் அபிவிருத்தியையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட முடிவு.

அதனால் வடக்கைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வலையத்தை உண்டாக்க வேண்டும் என்றே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

அவரின் கூற்றை உறுதிப்படுத்துவது போல் பெப்ரவரி 1985ல் ஒன்பது அரச சார்பற்ற நிறுவனங்களினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 41வது அமர்வின் போது பின் வருமாறு கூறப்பட்டது.

அதாவது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் தேசிய சனத்தொகை விகிதமான சிங்களவர் 75 சத விகிதம் மற்றையவர் 25 சத விகிதம் என்ற உண்மையைப் பிரதிபலிக்குமுகமாக தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலுஞ் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இச்செய்கையானது தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த இடங்களில் அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வண்ணமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

ஒரு முக்கிய உண்மையை சிங்கள அரசியல்வாதிகள் என்றென்றும் மறந்து விடுகின்றார்கள். இரண்டாயிரம் ஆண்டுகாலம் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்ப் பேசும் மக்கள் தான் பெரும்பான்மையினராக இருந்து வந்துள்ளனர்.

வேறெவரும் அங்கு அவ்வாறு பெரும்பான்மையினராக இருந்ததில்லை. இதைச் சிங்களத் தலைவர்கள் கூட 1919ம் ஆண்டில் ஏற்றுக் கொண்டிருந்தனர். இலங்கை நாடானது ஒற்றை நிர்வாகத்தின் கீழ் ஆங்கிலேயரால் 1833ம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டது.

அதற்கு முன்னர் இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக வட கிழக்கில் தமிழ்ப் பேசும் மக்களே பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கென்று இராச்சியங்களும் இருந்தன.

அப்படியிருந்தும் தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களை மதிக்காது மேற்படி தீர்மானமானது திரு.ஜே.ஆர். ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது.

அதன் காரணமாக யுத்தம் நீடிக்கத் தொடங்கியதும் அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதில் கண்ணாய் இருந்து வந்துள்ளார்கள். அதனைத் தமது இராணுவப் பாதுகாப்புச் சித்தாந்தத்தின் கொள்கையாகவும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளார்கள்.

அதியுச்ச பாதுகாப்பு வலையங்களானவை காணிகளைச் சுவீகரித்தது மட்டுமல்லாமல் பொதுமக்களை அங்கிருந்து அகற்றி அவர்களின் வருகைக்குத் தடை விதிப்பதாகவும் அமைந்தது.

இதனால்தான் எமது உள்நாட்டுக் குடி பெயர் மக்களின் அவலங்கள் தொடர்ந்திருந்து கொண்டு வருகின்றது. அதி உச்சப் பாதுகாப்பு வலையங்கள் என்று யுத்த காலத்தில் அடையாளம் காட்டப்பட்ட இடங்கள் இப்பொழுதும் அவ்வாறே குறிப்பிடப்படுவது பிழையென்று தெரிந்துதான் சில இடங்களை விசேட அபிவிருத்தி வலையங்கள் என்று பெயர் மாற்றித் தாமே அங்கு தொடர்ந்திருந்து வருகின்றார்கள் இராணுவத்தினர்.

இவ்வாறான இராணுவ செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் பலர். உதாரணமாக,

1. உயர் பாதுகாப்பு வலையங்களினால் உள்நாட்டினுள்ளேயே குடிபெயர்ந்த மக்கள்

2. இந்தியா, மேலைநாடுகள் போன்றவற்றிற்கு மேற்படி உயர் பாதுகாப்பு வலையங்களின் நிமித்தம் புலம் பெயர்ந்து சென்ற மக்கள்

3. போரில் பலவற்றையும் இழந்து தமது காணிகளுக்கான உரிமையாவணங்களையும் இழந்து நிற்கும் மக்கள்.

4. சுனாமியால் இடம் பெயர்ந்த மக்கள்

5. காலாவதிச் சட்ட ஏற்பாடுகளின் கீழ் பல வருடகாலமாகத் தமது காணிகளில் இராமையினால் பாதிக்கப்பட்ட மக்கள்

6. வேறு விதங்களில் இராணுவத்தினால் கையேற்கப்பட்டிருக்கும் வியாபாரக் காணிகள் அத்துடன் வீடுகளை இழந்து நிற்கும் மக்கள்.

புலம் பெயர்ந்த மக்களுள் முஸ்லீம் மக்களும் அடங்குவர். ஆண் துணைகளை இழந்த பெண்களும் அவர்தம் குடும்பங்களும் அடங்குவர்.

எனவே இன்று நாம் “நிலமும் நாங்களும்” என்ற தலையங்கத்தின் கீழ் பல விடயங்களை அவதானித்துள்ளோம். முக்கியமாக அரசியல், இராணுவ, இனரீதியான சிந்தனைகள் காரணமாக பாரம்பரிய வாழ்விடங்களைத் தொலைத்துவிட்ட நிலையில் எமது மக்களுள் பலர் அவல வாழ்க்கை வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்கள் மட்டுமல்லாமல், அவர்களைத் தற்காலிகமாக வாழ இடமளித்த நிலங்களின் சொந்தக்காரர்கள் கூட எதுவும் செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளார்கள்.

காணியிருந்துங் காணியற்ற வாழ்வை அவற்றின் உரிமையாளர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இவ்வாறான இடம்பெயர்ந்த மக்களின் உரித்துக்கள் பற்றி ஐக்கிய நாடுகள் பத்து வருடங்களுக்கு மேலாக ஆராய்ந்து “பின்ஹெய்ரோ கேட்பாடுகள்” என்ற தலையங்கத்தின் கீழ் உள்நாட்டு இடம் பெயர் மக்களினதும், அகதிகளினதும் வீடுகள் காணிகள் போன்றவற்றைத் திரும்பப் பெறுவது பற்றிய சில கோட்பாடுகளை இயற்றியுள்ளார்கள்.

பொருட்கோடல் உள்ளடங்கலாக 23 கொள்கைக் கருத்துக்களை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.

அவற்றில் இருந்து ஒரேயொரு கொள்கைக் கருத்தை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அதாவது முக்கியமான இரண்டாவது கொள்கைக் கருத்து பின்வருமாறு அமைகின்றது.

2.1. “எந்த ஒரு வீட்டில் இருந்தோ காணியில் இருந்தோ ஏதேனும் ஆதனத்தில் இருந்தோ எதேச்சாதிகாரமாகவோ அல்லது சட்டத்திற்கு மாறாகவோ எந்தவொரு அகதியோ அல்லது இடம்பெயர் நபரோ வெளியேற்றப்பட்டிருப்பின், அவர்கள் அவ்வீட்டிலோ காணியிலோ அல்லது ஆதனத்திலோ மீளக் குடியமர்த்தப்படுவதற்கு உரித்துடையவர் ஆவார்.

அத்துடன் ஏதேனும் ஒரு சுதந்திரமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைச் சபையொன்றினால் வீடோ, காணியோ, ஆதனமோ உண்மையில் திரும்பப் பெற முடியாத ஒரு நிலை எழுந்துள்ளதாகக் காணப்படுமிடத்து அதற்கான நட்ட ஈட்டை அவர் பெற உரித்துடையவராவார்.

2.2. மேலும் பின்வருமாறு கூறுகின்றது.

இடம்பெயர்வுக்குத் தக்க நிவாரணமாக அரசுகள் ஆதன மீளளிப்பையே முன்னுரிமைப்படுத்த வேண்டும். இதனையே மீளளிக்கும் நீதியின் மிக முக்கியமான கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

மீளளிப்புப் பெறும் உரித்தானது துல்லியமான ஒரு தனியுரித்து. வீடு காணி, ஆதனம் ஆகியவற்றிற்கு உரிமையுடைய அகதிகளோ, இடம்பெயர் நபர்களோ திரும்ப வந்தால் என்ன, வராதிருந்தால் என்ன மேற்படி உரித்தானது எந்த விதத்திலும் பாதிப்படையாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கொள்கைக் கருத்தானது மீள்க்குடியிருப்பு என்ற தனியுரித்து எந்தளவுக்குச் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

போர் முடிந்து ஏழாவது வருடம் நடந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில், மீள் குடியிருப்பு வேண்டிப் பதியப்பட்ட இரண்டாயிரம் பேரின் வழக்குகள் இன்னும் தாமதமடைந்திருக்கும் இந்நிலையில்,

எமது மக்களின் வாழ்வாதாரங்கள் ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டு அவர்கள் ஏதிலிகளாக எவரோ ஒருவர் காணியில், வீட்டில், ஆதனத்தில் கவனிப்பார் அற்று காத்துக் கிடக்கும் இவ்வேளையில்,

மேற்படி சர்வதேச கொள்கைக் கருத்தானது ஒரு ஒளிக்கீற்றை எம்மண்ணில் உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.

இன்றைய கருத்தரங்கம் இந்த பின்ஹெய்ரோ கோட்பாட்டுக் கருத்தை வலியுறுத்துவதற்காக ஏற்பாடு செய்த ஒரு கூட்டமாகாவே எனக்குத் தென்படுகின்றது.

மக்களின் பரிதவிப்பை நாங்கள் புரிந்துள்ளோம். ஆனால் அவர்களின் மீள்குடியேறும் உரித்தை உணர்ந்துள்ளோமா என்றால் பெருவாரியாக இல்லையென்றே கூற வேண்டும்.

இவ்வுரித்தின் தாற்பரியம் ஜனாதிபதி முதல் சகல மத்திய அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராணுவத் தளபதிகளுக்கும் மிகத் திடமாகத் தெரியவர வேண்டும்.

தெரியப்படுத்த வேண்டும். மக்களை அகதிகளாக்கி, தம் நாட்டிலேயே அன்னியர்களாக்கி வருடக்கணக்காக அவர்களை ஏதிலி வாழ்வு வாழ்விட சட்டம் இடம் கொடுக்கவில்லை என்ற கருத்தை நாங்கள் இன்று முன்வைப்போம்.

எங்கள் அரசாங்கங்களும் இராணுவத்தினரும் மக்களின் ஒரு முக்கியமான தனியுரித்தைப் பறித்து வைத்துப் பங்கம் ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கைகளைப் பாழ் படுத்தி வந்துள்ளார்கள் என்பதை எல்லோரும் கேட்டறியுமாறு இங்கிருந்து உரத்துக் கூறுவோம்.

நாங்கள் சட்டப்படி குற்றம் இழைத்து விட்டோம் என்று அரசாங்கத்தினரும் இராணுவத்தினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இன்றைய கூட்டம் அமைந்துள்ளது என்ற மனநிறைவுடன்,

ஆனால் எமது குடிபெயர்ந்த மக்களின் நிலையை நினைத்து மனவருத்தத்துடன் அவர்கள் வாழ்வில் வசந்தம் பரிணமிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

 -http://www.tamilwin.com
TAGS: