நீர்தான் கோழை: ஐஜிபியைச் சாடினார் கோபிந்த்

gobindபோலீஸ் காவலில் நிகழ்ந்த  இறப்புச்  சம்பவங்களுக்குப்  பொறுப்பான  போலீஸ்காரர்களுக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்காத  இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்  காலிட்  அபு  பக்காரைச்  சாடிய  கோபிந்த்  சிங்  டியோ(டிஏபி- பூச்சோங்),  அவரை  ஒரு  கோழை  என்று வருணித்தார்.

கடந்த  ஆண்டு  ஜோகூர்  போலீஸ்  லாக்- அப்பில்  சைட்  முகம்மட்  அஸ்லான்  சைட்  முகம்மட்  நோர்  மரணமுற்றதற்கு   போலீஸ்தான்  காரணம்  என்று  அமலாக்க நிறுவன நேர்மை ஆணையம்(EAIC) விசாரணை  செய்து  கூறியிருந்ததை   அவர்  சுட்டிக்காட்டினார்.

“நான் ஐஜிபி-யைக்  கேட்கிறேன்,   மற்றவர்களைக்  கோழைகள்  என்று  அழைக்கிறீர்களே,  போலீஸ்  நிலையத்தில்  நிகழ்ந்த  இச்சம்பவத்துக்கு  எதிராக  என்ன நடவடிக்கை  எடுக்கப்பட்டது.

“ஏன்  நடவடிக்கை  எடுக்கப்படவில்லை? இறந்து  போனவரின்  குடும்பத்தினருடன்  பேசும்  துணிச்சல்  ஐஜிபிக்கு  உண்டா?  அவர்களை  அவர் தொடர்பு  கொண்டதுண்டா?

“ஐஜிபி  வெட்கப்பட  வேண்டும். நீங்கள், நீங்கள்தான்  கோழை”, என நாடாளுமன்றத்தில்  2016  பட்ஜெட்டில்  உள்துறை  அமைச்சுக்கான  ஒதுக்கீடு  மீதான  விவாதத்தில்  கலந்துகொண்டு  பேசியபோது  கோபிந்த் கூறினார்.

முக்கியமான  புள்ளிகளைக்  குற்றவாளிகளாகக்  குறிப்பிடும்  சத்திய  பிரமாணத்தைச்  செய்து விட்டு  நாட்டைவிட்டுத்  தப்பியோடிய  சார்ல்ஸ்  மொராய்ஸைக்  கோழை  என்று  காலிட்  வருணித்திருந்ததற்கு  எதிர்வினையாக  கோபிந்த்  அவ்வாறு  கூறினார்.