இருமொழிக் கொள்கை, தமிழ்ப்பள்ளியை ஆங்கில மயமாக்கும்! – அ. பாண்டியன்

najib_tamil_school22016- ஆம் கல்வி ஆண்டு தொடங்க இன்னும் சில வாரங்கள் இருக்கும்  நிலையில் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் குறித்த மிக முக்கிய விடையம் ஒன்று மிக அமைதியாக சில தரப்புகளால் முன்னெடுக்கப்பட்டு (மாற்று கருத்துகளுக்கு இடமளிக்காமல்) தங்களுக்குச் சாதகமான முடிவுகளும் செய்யப்பட்டுவிட்டிருப்பதை அறிய முடிகிறது.

சில மாதங்களுக்கு முன் கல்வி அமைச்சு ஒரு திடீர் அறிவிப்பைச் செய்தது. அதன்படி, 2016-ஆம் ஆண்டுமுதல் பள்ளிப்போதனை முறையில் இரு மொழிக் கொள்கையைக் கடைபிடிக்க சில பரிச்சார்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்பதே அச்செய்தியின் சாரம். இக்கொள்கையின் படி ஆரம்பப்பள்ளிகளில் நான்காம் ஆண்டு தொடங்கி அறிவியல், கணிதம், தொழில் நுட்பம், புத்தாக்கம் ஆகிய நான்கு பாடங்களை மலாய் அல்லது ஆங்கிலம் வழி போதிக்க பள்ளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது.

தனது பள்ளி இப்புதிய ஆங்கில போதனா முறைக்கு தகுதி உடைய பள்ளி என்பதையும் தனது பள்ளியில் அதற்குறிய ஆங்கில போதனா பயிற்சி ஆசிரியர்கள் உண்டு என்பதையும் தனது பள்ளி மாணவர்கள் ஆங்கில மொழியில் போதிய தகுதிகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உறுதி செய்தால் அப்பள்ளி மேற்கண்ட நான்கு பாடங்களையும் ஆங்கிலத்திலேயே  போதிக்க வசதி செய்து தரப்படும். ஆகவே இப்பரிச்சார்த்த முயற்சிக்கு 300 மலாய் தொடக்கப்பள்ளிகளை நாடு முழுவதும் அரசாங்கம் தேர்வு செய்துள்ளது.

நிற்க, இந்தத் திட்டம் இப்போதைக்குத் தேசியப் பள்ளிகளில் மட்டுமே அமல் செய்யப்படும் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. ஆனால், தமிழ்ப் பள்ளிகளில் இப்போதே இதன் தாக்கம் வேகமாக பரவத்தொடங்கி விட்டது.

tamil_schoolமுதலாவதாக, இத்திட்டத்தை வழக்கம் போல சீனப் பள்ளிகள் முற்றாக புறக்கணித்து விட்டன. அரசாங்கமும் இதை யூகித்துதான் தேசியப் பள்ளிகளை மட்டும் இத்திட்டத்திற்கு உட்படுத்தியுள்ளது. மலாய் சமூகத்திலும் இது பல்வேறு சந்தேக மற்றும் எதிர்ப்பு அலைகளைத் தோற்றுவித்துள்ளது. குறிப்பாக இந்த இரு மொழிக் கொள்கையின் நோக்கம் மாணவர்களின் ஆங்கில மொழி ஆற்றலை மேம்படுத்துவது என்று அரசாங்கம் கூறியுள்ளதை அவர்கள் விமர்சிக்கின்றனர்.

ஒரு மொழியின் மீதான ஆற்றலை மேம்படுத்த வேண்டும் எனில் அந்த மொழியைப் போதிக்கும் நேரத்தைக் கூட்ட வேண்டும் அல்லது ஆங்கில பாடத்தைப் போதிக்க சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதை விடுத்து மற்ற பாடங்களை ஆங்கிலத்திற்கு மாற்றுவது மலாய் மொழிப் பள்ளிகளின் தேசிய மொழிக் கொள்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் என்று மலாய் கல்விமான்கள் கூட மாற்றுக் கருத்தை முன்வைக்கின்றனர்.

தமிழ்ப் பள்ளிகளிலும் இப்பிரச்சனை தொடர்பாக இருவேறு தரப்புகள் உருவாகியுள்ளன.

முதல் தரப்பு, தமிழ்ப்பள்ளிகளையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளவேண்டும் என்று கோரும் தரப்பாகும். தமிழ்ப்பள்ளிகளில் தொடர்ந்து ஏற்பட்டுவரும் மாணவர் எண்ணிக்கைச் சரிவைச் சரிசெய்யவும், எதிர்காலத்தில் தமிழ்ப்பள்ளிகள்  இந்நாட்டில் நிலைக்கவும், இத்திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் இணைந்து கொள்வது மிக முக்கியம் என்று இத்தரப்பினர் கருதுகின்றனர். மேலும் நாட்டில் பிற இன மாணவர்களுடன் போட்டியிட்டு முன்னேறவும்  உலக சவால்களை எதிர்கொள்ளவும் அறிவியல் கணிதப் பாடங்களை ஆங்கிலத்தில் கற்பதே நல்லது என்றும் கூறுகின்றனர்.

மேலும் இத்திட்டத்தின் வழி தமிழ்ப்பள்ளி பக்கம் தலைவைக்காது இருக்கும் தமிழ்க்கல்வி இல்லாத மேல் தட்டு மக்களைக் கணிசமான அளவுக்குத் தமிழ்ப்பள்ளியின் பால் ஈர்த்துவிட முடியும் என்றும் இத்தரப்பு நம்புவதாகப்படுகிறது. இத்தரப்புக்கு பேரா. என் .எஸ் ராஜேந்திரன் தலைமைதாங்குகிறார். தனக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்களையும் தலைமையாசிரியர்களையும் தொடர்புகொண்டு மேற்படி இருமொழிக் கொள்கையில் தங்கள் தமிழ்ப்பள்ளிகளையும் இணைத்துக்கொள்ளும்படி கல்வி அமைச்சரிடம் விண்ணப்பிக்கக் கேட்டுக் கொண்டு வருவதாகவும் அறிகிறேன்.

tamil school children1இரண்டாவது தரப்பு, அரசாங்கம் முன்மொழியும் இருமொழி திட்டம் தமிழ்ப்பள்ளிகளுக்குத் தேவையற்றது என்று கூறும் தரப்பாகும். இத்தரப்பினர், இத்திட்டத்தால் தமிழ்ப்பள்ளிகளில் நேரக்கூடிய தமிழ்மொழி சார்ந்த வீழ்ச்சிகள் குறித்தும், தமிழ்ப்பள்ளிகளின் பாரம்பரியமாக இந்நாட்டில் கடந்த இருநூறு ஆண்டுகளாக கட்டிக்காத்து வந்த தமிழ் வழிக் கல்வி என்ற சாராம்சங்கள்  மெல்ல சிதைக்கப்படுவது  குறித்தும், தமிழாசிரியர்கள் எதிர்நோக்கக்கூடிய வேலை இழப்புகள் குறித்தும் கவலை தெரிவிக்கின்றனர்.

தமிழ்ப்பள்ளிகளில் நான்கு பாடங்களை ஆங்கிலத்தில் போதிக்கும் சூழல் நேர்ந்தால் அப்பாடங்கள் தாங்கி நிற்கும் நூற்றுக்கணக்கான துறைசார்ந்த தமிழ் கலைச்சொற்கள் பயன்பாடற்று அழிந்து போகும் என்பதையும் அப்பாட நூல்களை இயற்றவும், (யூ.பி.எஸ்.ஆர் போன்ற தேர்வுகளுக்கு) அப்பாடங்கள் தொடர்பாக கேள்விகள் தயாரிக்கவும், கேள்வித்தாட்களைத் திருத்துவதற்கும் இதுவரை தேவைப்பட்ட இந்திய ஆசிரியர்கள் குறைக்கப்படலாம் அல்லது தேவை இன்றிப் போகலாம்  என்கிற அபாயத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.

மேலும் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விடையாக,  அது மலேசிய இந்தியர்களிடையே ஏற்பட்டிருக்கும் பிறப்பு விகிதாச்சார வீழ்ச்சியால் நேர்ந்ததே அன்றி தமிழ்ப்பள்ளிகளின் கல்வி தொடர்பாக இந்திய மக்கள் அடைந்த அதிருப்தியின்  விளைவு  அல்ல என்கிற வாதமும் கவனிக்கத் தக்கதே. இக்கருத்துகளை அழுத்தமாகக் கூறும் தரப்பாக தமிழ் அறவாரியமும் மேலும் சில மொழி சார்ந்த இயக்கங்களும் செயல்படுகின்றன.

ஆக இரு தரப்பிலும் உடன்பாடான கருத்துகளும் எதிர்மறை கருத்துகளும் இருப்பது தெளிவு. நிலைமை இவ்வாறு இருக்க,

கடந்த வாரம் முதல் சில மாநிலங்களில் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியையும் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளும் படி கோரும் விண்ணப்பக் கடித்தத்தை அவசர அவசரமாக கல்வி அமைச்சுக்கு அனுப்பியிருப்பது பெரும் வியப்பையும் வருத்தத்தையும் அளிப்பதாக உள்ளது.

தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களின் இச்செயல் அவசரகதியில், பின் விளைவுகளைப் பற்றி தீர ஆராயாமல் முன்னோக்கு சிந்தனை இன்றியோ அல்லது வேறு ஏதாகினும் கண்ணுக்குப் புலப்படாத நிர்பந்தங்களுக்குப் பணிந்தோ எடுக்கப்பட்ட முடிவு என்றே எண்ணத் தோன்றுகிறது.

காரணம் சீன மொழிப் பள்ளிகள் ஒதுக்கி விட்ட ஒரு திட்டத்தை, மலாய் கல்வி மான்களே கேள்வி எழுப்பும் ஒரு திட்டத்தை, அரசாங்கம் கூட முழுமையான திட்ட வரைவைக் கொண்டிராத ஒரு திட்டத்தை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் எந்த அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது புரியாதப் புதிராக உள்ளது.

இந்த இரு மொழிக் கொள்கையை ஏற்பதா இல்லையா என்ற வினாவிற்கு முன் நாம் சில முக்கிய விடையங்களைக் கருத்தில் கொள்வதும் சிந்திப்பதும் அவசியமாகிறது. அவை :-

1.  மேற்கண்ட நான்கு பாடங்களை இருமொழிகளில் போதிக்கும் திட்டத்தை அரசாங்கம் இன்னும் முழுமைப்படுத்தவில்லை. அதன் செம்மையான செயல்திட்டமும் எதிர்கால நிலைகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.  அரசாங்கம் தற்போது பரிச்சார்த்த முறையில் இத்திட்டத்தை தேசியப்பள்ளிகளில் பரிசோதிக்க முனைந்துள்ளது. இதன் பின்னரே பூர்வாங்க ஆய்வு முடிவுகள் வெளிவரக்கூடும். ஆகவே, அதன் உண்மை நிலையும் இச்செயல்பாட்டு திட்டங்களால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளும் விவாதிக்கப்படாமல் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் தாமே இத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது.

2.  இதுநாள்வரை தமிழ்ப்பள்ளிகளுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர், அந்தப் பள்ளியின் சூழலிலும் போதனை முறைகளிலும் நம்பிக்கை வைத்தே அனுப்புகின்றனர். தங்கள் பிள்ளைகள் அறிவியல் கணிதப் பாடங்களைத் தமிழில் கற்பதில் அவர்களுக்கு எந்தவித எழுத்துப்பூர்வமான புகாரும் இருந்ததில்லை. ஆகவே, பள்ளி போதனை முறையில் இதுபோன்ற தடாலடி மாற்றங்கள் நிகழ்த்தும் முன் பள்ளி நிர்வாகம் முழுமையாக பெற்றோர்களிடம் திட்டக் கொள்கையை விளக்கி , கலந்து பேசி முடிவெடுத்திருக்க வேண்டும். பள்ளி வாரியக் குழுவுக்கும் இந்த மாற்றங்கள் குறித்த தெளிவு இருக்க வேண்டும். ஏனெனில் இன்று தமிழ்ப்பள்ளிகளில் ஏற்படும் மாற்றங்கள் இனிவரும் பல ஆண்டுகளுக்கு இந்நாட்டில் தமிழ் வழிக் கல்வியைப் பாதித்து நிற்கும் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளல் வேண்டும். ஆனால் எனக்குத் தெரிந்து பள்ளிகளில் அவ்வகையான கூட்டங்களோ கலந்துரையாடல்களோ  இதுவரை  நிகழ்த்தப்படவில்லை.

najib_tamil_school53.  இத்திட்டத்திற்கு ஆதரவு தரும் தரப்பும் மாற்று கருத்தாளர்களும் நாடுதழுவிய அளவில் கருத்தரங்குகளும் விளக்கக் கூட்டங்களும் நடத்தியிருக்க வேண்டும். பெற்றோருக்கும் பொதுமக்களுக்கும் தமிழ்ப்பள்ளிகளின் நிலைபாடுகள் குறித்த போதுமான புள்ளி விபரங்களும், விளக்கங்களும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அக்கூட்டங்களில் கிடைக்கப்பட்ட ஆய்வடங்களை அடிப்டையாக வைத்தே பள்ளிகள் தங்களுக்குப் பொருத்தமான போதனா முறையைத்  தேர்வு செய்ய சுதந்திரம் தந்திருக்க வேண்டும்.

4.  இத்திட்டத்தில் சீனப் பள்ளிகள் பங்கேற்க மறுப்பது ஏன் என்ற ஆய்வை ஆதரவு தரப்பு செய்யவேண்டியது  மிகவும் அவசியம். அதோடு, இப்புதிய திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் மீது அரசாங்கத் தரப்பில் இருந்து எந்தவொரு அழுத்தமும் வைக்கப்படவில்லை என்பதே உண்மை. ஆகவே இத்திட்டத்தை அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளின் மீது சுமத்தாத போது அவசரப்பட்டு இத்திட்டத்தில் நாமே இணைய வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்விக்குப் போதுமான ஆதாரங்களும் விளக்கங்களும் தேவைப்படுகின்றன. துணைக் கல்வி அமைச்சர் கமலநாதன், பேரா. என் எஸ் ராஜேந்திரன் தரப்பினர் தாங்களே முன்வந்து இத்திட்டத்தில் இணைந்துகொள்ள போராடுகின்றனர். அவர்களின் போராட்டம் சரியானது என்றே எடுத்துக் கொண்டாலும், மாற்றுக் கருத்தாளர்கள் முன்வைக்கும் பல சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் அவர்கள் தெளிவான விரிவான பதில் தரவேண்டியது அவசியம்.

5.  ஆரம்பப் பள்ளிகளில், ஆங்கிலத்தில் போதிக்கப்படும் கணிதமும், அறிவியலும், தொழில் நுட்பமும் இடை நிலைப் பள்ளியிலும் தொடரும் என்ற உறுதிப்பாடு ஏதும் அரசிடம் இருந்து வந்துள்ளதா? அப்படியே வட்டாரத்திற்கு ஓரிரு இடை நிலைப்பள்ளில் ஆங்கிலத்தில் போதிக்கப்படுமேயானால் நமது மாணவர்கள் அனைவரும் அந்தப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படக் கூடிய சாத்தியங்கள் உள்ளனவா? இல்லை என்றால் மற்ற பின் தங்கிய மாணவர்கள் அரை குறை ஆங்கிலத்தோடு மலாய் வழி கணித அறிவியல் பாடங்களை இடை நிலைப் பள்ளிகளில் தொடர்கையில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்க மாட்டார்களா? என்ற கேள்விகளுக்கும் இன்னும் யாரும் பதில் காண முடியவில்லை என்பதையும் சிந்திக்க வேண்டும்.

6. மலேசிய பள்ளிகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களின் தரம் மிகவும் குறைவாக உள்ளது என்பது அண்மையக் காலமாக ஊடகங்களில் பெரிய தலைப்புகளில் வெளிவந்த நிதர்சன உண்மையாகும். மேலும் மலேசிய பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தக்க திறன் பெற்ற ஆசிரியர் போதாமையால் ஓய்வு பெற்ற ஆங்கில ஆற்றல் பெற்ற ஆசிரியர்களை மீண்டும் ஆங்கில போதனைக்குப் பணியில் அமர்த்த திட்டம் வைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிலை மலேசிய தமிழ்ப்பள்ளிகளுக்கும் பொருந்தும். ஆக ஆங்கில மொழி ஆற்றல் குறைந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்த இரு மொழிக் கல்விக் கொள்கை நடத்தப் படுமேயானால் நன்மைக்குப் பதில் பாதகமே விளையும். என்பதையும் நினைவில் கொள்வது நல்லது. சாதாரணமாக தமிழ் அல்லது மலாய் மொழியில் போதனா பயிற்சி பெற்ற ஓர் ஆசிரியர் திடுதிப்பென ஆங்கிலத்தில் பாடத்தை நடத்த முடியாது என்பது கடந்த கால PPSMI நமக்கு கற்பித்த பாடமாகும். ஆக இந்த இரு மொழிக் கொள்கைக்கு அடித்துப் பிடிக்கும் தமிழ்ப்பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் போதுமான அளவு கணித அறிவியல் பாடங்களுக்கு ஆங்கில வழி போதனா பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் உண்டு என்பதை நிரூபிக்க முடியுமா? அல்லது அதற்கு மாற்றுத் திட்டம் என்ன என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

7.  2011-உடன் ‘மென் முடிவுற்ற’ (soft landing) PPSMI திட்டம் 2002-ல் அவசரமாக அமலுக்கு வந்ததில் அரசியல் அதிகாரம் நிரம்ப இருந்ததை மறைக்க முடியாது. முன்னால் தலைவர்கள் மகாதீரும் சாமிவேலும் அதில் முக்கிய பங்காற்றியதாக அந்தக் காலக் கட்டத்தில் பரவலாக பேசப்பட்டது. அத்திட்டதில் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் அறிவியல் கணிதப்பாடங்களைப் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆகவே மாணவர்கள் தங்கள் மொழி ஆளுமைக்கேற்ப ஒரு மொழியைப் பயன்படுத்தி அப்பாடங்களைப் பயின்றனர். ஆனால், இத்திட்டம் MBMMBI எனப்படும் புதிய மொழிக் கொள்கைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள போதனாமுறையாகும். ஆகவே இத்திட்டம் மலாய் அல்லது ஆங்கிலத்திற்கு மட்டுமே முன்னுரிமை தரும் என்பது தெளிவு. எனவே இந்த புதிய இருமொழிக் கொள்கை திட்டத்தில் தமிழ் சீனம் போன்ற தாய்மொழிகளின் நிலைப்பாடு புதிராகவே உள்ளது. மேலும் தமிழ்ப்பள்ளிகளில் ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை இந்தக் கல்விக் கொள்கையால் என்னாகும் என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படாமலேயே இத்திட்டத்தைத் தமிழ்ப்பள்ளிகளுக்குள் கொண்டுவருவது நம் இன மாணவர்களுக்கு நாமே இழைக்கும் துரோகமாகும்.

இறுதியாக, இதுவரை தமிழ்ப்பள்ளி விவகாரங்களில் மிக மெத்தனமாக செயல்படும் பலர், தமிழ்ப்பள்ளிகளை ஆங்கில மயமாக்களில் மட்டும்  இரவோடு இரவாக தமிழ்ப்பள்ளிகளின் மொத்த கட்டமைப்பையும் தங்கள் விருப்பத்துக்கு வடிவமைத்துக் கொள்ள துடிப்பது வியப்பிலும் வியப்பாக இருக்கிறது. ஆகவே, தமிழ்ப்பள்ளிகளின் தலைவிதியை முடிவுசெய்யக்கூடிய ஒரு மிக முக்கியத் திட்டத்திற்கு, போதுமான ஆய்வுகள் இன்றி வெற்று உணர்ச்சிகளின் அடிப்படையிலோ, அதிகார அழுத்தங்களுக்கு பணிந்து போகும் முகமாகவோ செயல்படுவது ஓர் இனத்திற்கே செய்யும் பிழையாக முடியக்கூடும். முறையான உரையாடல்கள் வழியும் ஆய்வுகள் வழியும் எது சரியானதோ அதைச் செய்வதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.