இனவாதம் ஒரு குற்றம், ஆனால் தண்டிப்பதில் சுணக்கம்! கி. சீலதாஸ்

siladassஇனவாதத்தைக்  கிளப்புவது,  பிற   இனத்தவர்களை  இழிவுப்படுத்திப்   பேசுவது,  மற்ற  சமயத்தினரின்  நம்பிக்கைகளை  கேலி  செய்வது  போன்ற  நடவடிக்கைகள்  அறிவுள்ளோர்  மேற்கொள்ளமாட்டார்கள்.   மேற்சொன்ன  செயல்கள்,  நடத்தைகள்  யாவும்  குற்றமென  சட்டம்  கூறுவது  உண்மை;  ஆனால்,  இன்று   மலேசியாவில் இதுபோன்ற  நடவடிக்கைகள்  தொடர்வது   வெட்கக்கேடானதாகும்.

இருபத்தோராம்   நூற்றாண்டில்  வாழ்கின்ற  நாம்,  முன்னேறிய  நாடுகளோடு  சேர்ந்துவிடவேண்டும்  என்கின்ற  உத்வேகம்  நாட்டில்  பரவலாகக்   காணப்படும்போது   இனத்துவேஷம்,   பிற  இனங்களை  அவமதிப்பதும்,  மற்ற   சமயங்களை  இழிவுப்  படுத்துவதும்  நாகரிகமான   செயலாகக்  கருத  முடியாது.

முன்னேற்ற  நாடுகள்  என்ற  பட்டியலில்  சேர்த்துக்கொள்ளும்போது  வெறும்  பொருளாதார  செழிப்பை   அடைந்துவிட்டதை   தரப்படுத்தப்பட்ட  அளவாக  மட்டும்  கருதாமல்  நாட்டில்  பிற   இனங்களுக்கும்,  பிற  சமயங்களுக்கு  கொடுக்கப்படும்  மரியாதையைப்  பற்றியும்   கவனத்தில்  கொண்டிருக்க   வேண்டும்  என்பது  என்  கருத்து.

நம்  நாட்டின்  அரசமைப்புச்  சட்டம்  சில  அடிப்படை  உரிமைகளுக்குப்   பாதுகாப்பு  அளிக்கிறது.  குறிப்பாக  இஸ்லாம்தான்  கூட்டரசின் சமயம்  என்றபோதிலும்  மற்ற  சமயங்கள்  அமைதியுடனும்,  இணக்கத்துடனும்  வழிபடலாம்  என்கிறது  அரசமைப்புச்  சட்டத்தின்  3ஆம்  ஷரத்து.

அடுத்து,  எல்லோரும்  சட்டத்தின்  முன்  சமம்,  சட்டத்தின்  சமமானப்  பாதுகாப்பு  உண்டு  என்கிறது  அரசமைப்புச் சட்டத்தின்   8ஆம்  ஷரத்து.  இதன்  பொருள்  என்ன?  இங்கு  கொடுக்கப்பெற்ற  பாதுகாப்பு  இரண்டு வகையாகும்.  ஒன்று  சட்டத்தின்  முன் எல்லோரும்  சமம்.  அடுத்து  சமமானப்  பாதுகாப்பு.  எனக்குப்  பாதகம்  நேராத  வகையில்  சட்டம்  பாதுகாக்க  வேண்டும்.  சட்டத்தின்  சரிசமமான  பாதுகாப்பு எனக்கு  உண்டு.  அதேவேளையில்  எனக்குத்  தீங்கு  செய்பவர்க்கு   சட்டம்  சரிசமமான  கடமையைச்   செய்து  தண்டனை   வழங்கவேண்டும்.

இனத்துவேஷம்   ஒன்றும்  புதிதல்ல,  சமயத்  தகராறு  சமயங்கள்  முலைத்தக்  காலந்தொட்டு  வளர்க்கப்பட்ட  கலையாகும். ஆனால்,  பிற  சமயங்களை  இழிவுப்படுத்துவதை  கடிந்து,  தடை  செய்தார்   அசோக  சக்கரவர்த்தி   ஈராயிரம்  ஆண்டுகளுக்கு   முன்பு.

இனத்துவேஷம்,  பிற  சமயங்களை  கேலி  செய்வது   இவை  அனைத்தும்  நாகரிக  உலகில்,  கட்டுப்பாடான,  சுபிட்சமான  வாழ்வுக்கு  பொருந்தாது  என்பது  ஒருபுறமிருக்க;  இவை  கட்டுப்படுத்தப்படாமல்  விட்டால்  பொருளாதாரத்திலும்   பின் தங்கும்  நிலை  ஏற்படலாம்  என்பதை   உணர்ந்த   வெள்ளைக்காரர்  காலனித்துவ வாதிகள்,  இனத்துவேஷம்,  சமயத்துவேஷம்  போன்ற  நடவடிக்கைகள்  சட்டவிரோதச் செயல்கள்   என்று   சட்டத்தை  வகுத்தனர்.  அதுவே  தண்டனைச்  சட்டம் (Penal  Code).

அதில்   504ஆம் பிரிவின்படி   யாராவது  பொது  அமைதிக்குலைவு  ஏற்படுவதற்கு  காரணியாக  இருப்பின்  ஈராண்டுவரை  நீடிக்கும்  சிறைத்தண்டனை  அல்லது  அபராதம்  அல்லது  இரண்டும்   விதிக்கப்படலாம்.  அது  ஒருபுறமிருக்க,  பொதுத்  தீங்கு  விளைவிக்கும்   நோக்கத்தோடு  நடந்து  கொண்டால்   அதுவும்  குற்றமென்கிறது  தண்டனைச்   சட்டத்தின்  505(b),  (1)பிரிவு.  இந்தச் சட்டத்தின்படி  ஈராண்டு  சிறைத்தண்டனை,  அல்லது  அபராதம் அல்லது   இரண்டுக்குமே  ஆளாகலாம்.

சமய   உணர்வுகளைப்  பாதிப்புறச்  செய்யும்   சொற்கள்,  பேச்சு  நடவடிக்கைகள்  யாவும்   குற்றமென்கின்றன  தண்டனைச்  சட்டத்தின்  298, 298A   பிரிவுகள்.

1948ஆம்  ஆண்டின்  நிந்தனைச்   சட்டத்தின்   3(e)ஆம்  பிரிவின்படி   இனத்துவேஷ   நடவடிக்கை  குற்றமாகும்.  குற்றம்  நிரூபிக்கப்பட்டால்  முதல்முறை   குற்றத்திற்கு   ஐயாயிரம்   வெள்ளியும்  மூன்றாண்டுவரை  சிறைத்   தண்டனை  அல்லது   இரண்டும்   விதிக்கப்படலாம்.

சட்டம்   இருக்கிறது, அது  அமலாக்கப்பட்டால்தானே   அதன்  வலிவும்,  அது  தரும்  வலியும்  தெரியும்.  வெறும்  உதட்டளவில்  இனத்  துவேஷ,  சமயச்  சர்ச்சையை  கிளப்பும்  அசிங்கமான  நடவடிக்கை  கண்டிப்பதால்   பலன்  இல்லை.  அதோடு,  சட்டத்தால்  மட்டும்  இந்த  இனத்  துவேஷ,  சமயத்  துவேஷ   நடவடிக்கைகளை   கட்டுப்படுத்த   இயலாது.  மாறாக  இவற்றிற்கு  எதிர்  நடவடிக்கைகளை  மேற்கொள்ளவேண்டும்.  குறிப்பாக  பள்ளிக்கூடங்களில்  இன  சமய  ஒற்றுமையை  வலியுறுத்தும்   பாடங்களை  கற்பிக்கவேண்டும்;  நடவடிக்கைகள்   மேற்கொள்ளவேண்டும்.

இன, சமய  ஒற்றுமையின்  அவசியத்தை,  முக்கியத்துவத்தை  ஒரு   கடமையாகக்  கொண்டு  நாடு  முழுவதும்   பிரச்சாரம் செய்யவெண்டும்.  இன  சமய  ஒற்றுமை   செய்தியைப்  பரப்பவேண்டும்.  இதை  அரசுதான்  செய்யவெண்டும்.  பொது  இயக்கங்களும்,  பொது  மக்களும்  இதில்  பங்குபெறலாம்.  உதாரணத்திற்கு  லஞ்ச  ஒழிப்பு,  போதைப்  பொருள் தடுப்பு  போன்ற   செய்தி   மக்களிடம்   சேர   சுவரொட்டிகள்,  திரைப்பட   துணுக்குகள்,  போன்ற   செய்திகள்  பரப்புவதுபோல்   இனத்  துவேஷம்,  சமய  எதிர்ப்பு  நடவடிக்கைகள்   நாட்டின்   நலனைக்   கொடுக்கும்  என்று   வலியுறுத்தும்  செய்திகள்   இலக்கியங்கள்    படைக்கப்பட்டால்  நன்மை பயக்கும்.

நிரந்தர   சுபிட்சத்துக்கும்,  நாட்டில்  அமைதி  நிலவ   இன,  சமய,  நல்லிணக்கம்   தேவை.  இதைப்  புரியாமல்  நடந்துகொள்பவர்கள்,  செயல்படுபவர்கள்   நாட்டுக்குத்   தீங்கு    விளைவிக்கும்  சக்திகளாவர்.