மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகம் மூடுவிழா காணுமா?

university-malayaமலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ் நூலகம் இனி அங்கு பயிலும் மாணவர்களுக்கு மட்டும்தான் என்ற விதிமுறை அமலாக்கப்பட்டுள்ளது. இந்த அமலாக்கம்  அதன் பயன்பாட்டை வெகுவாக குறைக்கும். பிறகு படிப்படியாக அது மூடப்படும் சாத்தியத்தையும் உருவாக்கும் என்ற அச்சம் உருவாகியுள்ளது.

இது சார்பாக கருத்துரைத்த ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி ஒருவர் தன் ஆதங்கத்தை வெளியிட்டார்.  தமிழ் இலக்கியத்தின்பால் ஆர்வம் கொண்ட அவர் தமது முதுகலைப் பட்டப்படிப்புக்காக அவ்வப்போது மலாயாப் பல்கலைக்கழக தமிழ் நூலகத்தை நாடிச்செல்வது வழக்கம் என்றும், பேராக் மாநிலத்தைச் சேர்ந்த அவர் இருவாரங்களுக்கு முன் அந்த நூலகத்தை நாடிச்செல்கையில் அந்நூலகத்தை உபயோகிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றதாக கூறினார்.

ஓர் ஆசிரியராக பணியாற்றும் அவர் இது தொடர்பாக அங்கு பொறுப்பில் உள்ளவர்களிடம் கேட்டபோது அது நூலக நிர்வாகத்தின் முடிவு என அதிகாரப்பூர்வக் கடிதத்தைக் காட்டியதாக தெரிவித்தார்.  அதில், இனி மலாயாப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே நூலகம் உபயோகிக்க அனுமதி என்றும் வெளியில் உள்ள உயர்க்கல்விக்கூட மாணவர்களுக்குத் தடை உள்ளதாகவும் எழுதப்பட்டிருந்தது என்றார்.

um libraryஇது சார்பாக சிலரிடம் வினவியபோது,  இந்நிலையில் இது போன்ற சக உயர்க்கல்வி மாணவர் நலனை மட்டும் அல்லாமல் நூலகத்தின் நன்மையைக் கருதியும் சில கேள்விகளை முன்வைத்தனர்.

1. பொதுவாகவே, அரசாங்கப் பல்கலைக்கழக நூலகங்கள் அரசாங்கத்தின் இதர கல்விக்கூடங்களைச் சேர்ந்த மாணவர்கள் உபயோகிப்பதிற்கு தடைவிதிப்பதில்லை. அப்படி இருக்க, மிகச்சொற்பமாக உபயோகத்தில் உள்ள ஒரு தமிழ் நூலகத்திற்கு ஏன் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது?

2. ஏற்கனவே, தமிழ் மாணவர்கள் நூல்களை வாசிப்பது குறைவு எனப் பொது அமைப்புகளின் வருத்தம் ஒருபக்கம் இருக்க, வாசிக்க வருபவர்களையும் இவ்வாறு தடை செய்வது இளம் தலைமுறையின் ஆர்வத்தைக் கெடுக்காதா?

3. இவ்வாறு தடைவிதிக்க என்ன காரணம் இருப்பினும் அதை நிர்வாகத்தினர் அறிவுடமையுடன் மேற்கொள்ளாமல் பயனீட்டாளர்களைத் உள்ளே வரவிடாமல் தடைவிதிப்பது வளர்ந்து வரும் தமிழ்க்கல்விச் சூழலை பாதிக்காதா?

4. வெளி மாணவர்களுக்கு இப்போது அந்நூலகத்தை உபயோகிக்க ரிம20 வசூலிக்கப்படுகிறது. ஒரு கல்லூரி மாணவனிடம் நூலகத்தைப் பயன்படுத்த அவ்வாறு பணம் வசூலிப்பதென்பது பயன்பாட்டுக்குத் தடையாக இருக்காதா?

5. தமிழுக்காக உருவாக்கப்பட்ட துறையில் தமிழ் நூலகம் அமைப்பதற்கு இன்னொரு எழுச்சி இயக்கம் முன்னெடுக்கப்பட்டதும், அமரர் கோ.சா ‘தமிழ் எங்கள் உயிர்’ எனும் முழக்கத்தோடு நிதி திரட்டும் இயக்கத்தைத் தொடங்கி, திரட்டப்பட்ட  நிதியைக் கொண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் தமிழ் நூலகத்தை வெற்றியோடு உருவாக்கியது இப்படி பயன்படுத்த ஆள் இன்றி நூலகத்தைக் கிடப்பில் போடவா?

மேலும், இது விட்டுவிடக்கூடிய எளிய விடயமல்ல. முதலில் திட்டமிட்டே அந்த நூலகத்தின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. பின்னர் பயன்பாடு குறைந்ததால் நூலகம் மூடுவிழா காணப்படுமேயானால் நாம் கண்ணீர் சிந்தி பலனில்லை என்கிறார் இதில் பயின்ற ஒரு முன்னாள் மாணவர்.

வருங்காலச் சமூகத்துக்குச் சேர்த்துவைக்கப்பட்ட தமிழ் நூல்கள் பரவலான பயன்பாட்டுக்குச் செல்ல உரிய நடவடிக்கையை உரியவர்கள் எடுக்க வேண்டும் என செம்பருத்தி. கோம் கேட்டுக்கொள்கிறது.