அம்னோவே என் பல்கலைக்கழகம்: குறைகூறுவோருக்கு பாஷாவின் பதிலடி

basபடிக்காதவர்  எப்படி  மந்திரி  புசாராகலாம்  என்று  குறைகூறுவோருக்கு   “அம்னோதான்  என்  பல்கலைக்கழகம்”  எனப்  பதில்  கூறியுள்ளார்  புதிய  கெடா  மந்திரி  புசார்  அஹ்மட்  பாஷா  முகம்மட்  ஹனிபா.

22 வயதிலேயே  குடும்பப்  பொறுப்பை  ஏற்க  வேண்டியதாயிற்று  என பாஷா  பெரித்தா  ஹரியானுக்கு  வழங்கிய  நேர்காணலில்  கூறினார். தம்  தந்தையார் காலமானதை  அடுத்து  அக்காள்  ஒருவரையும்  இளைய  உடன்பிறப்புகள்  மூவரையும்  கவனித்துக்  கொள்ளும்  பொறுப்பு  தம்மை  வந்து  சேர்ந்தது  என்றாரவர்.

“அவர்களின்  படிப்பிலிருந்து  திருமணம்வரை  நான்தான்  கவனித்துக்  கொண்டேன். நான் 35-வது  வயதில்தான்  மணம்  செய்து  கொண்டேன்

“என்  இளைய  உடன்பிறப்புகள்  எல்லாருமே  உயர்க்  கல்வி  கற்றவர்கள். ஆனால்,  நான்  பல்கலைக்கழகம்  சென்றதில்லை. அதனாலென்ன,  அவர்கள்தான்  முக்கியம்”, என்றாரவர்.

பல்கலைக்கழகம்  செல்லவில்லையே  தவிர  பல  ஆண்டுகளாக  கெடா  அம்னோவில்  இருந்தது  போதுமான  அனுபவத்தையும்  தலைமைத்துவத்  திறனையும்   அவருக்குக்  கொடுத்துள்ளது.

“தொடக்கக்  காலத்தில்  அம்னோவில்  முக்கிய  பதவி  வகித்த  என்  தந்தையே  எனக்குப்  பலவற்றைக்  கற்றுத்  தந்தார். அவர்   கெடா  அம்னோவின்  பொருளாளராக  இருந்தார்.

“கெடா  அரசியல்  அரங்கில்  நீண்ட  காலமாக  இருந்து  வந்திருப்பவன்  நான்”, என  பாஷா  கூறினார்.