‘பாஷாவுக்குப் படிப்புக் குறைவு ஆனால், பிரதமருடன் நேரடித் தொடர்புண்டு’

dpmகெடா மந்திரி  புசார்  அஹ்மட்  பாஷா  முகம்மட்  ஹனிபாவுக்கு  உயர்ந்த  கல்வித்  தகுதி  இல்லை  எனறாலும்  மந்திரி  புசார்  பதவிக்கு  அவரே  பொருத்தமானவர். பிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்குடன்   நேரடியாக தொடர்புகொண்டு  பேசக்  கூடியவர்   பாஷா  என்பதால்  கெடாவின்  மேம்பாட்டை  அவரால்  விரைவுபடுத்த  முடியும்.

“கெடாவின்  மேம்பாட்டுக்கு  உதவிகேட்டு  பிரதமரிடம்  அவரால்  நேரடியாக  பேச  முடியும்”, என   பெரித்தா  ஹரியானிடம்  தெரிவித்த  துணைப்  பிரதமர்  ஜாஹிட்  ஹமிடி  பாஷாவுக்குக்  கல்வித்  தகுதி  இல்லை  என்று   குறைசொல்ல  வேண்டாம்  எனப்  பொதுமக்களைக்  கேட்டுக்கொண்டார்.

சீனாவின் பெய்ஜிங்குக்கு  தம்  அதிகாரத்துவ  பயணத்தை  முடித்துக்கொண்ட  பின்னர்  செய்தியாளர்களிடம்  பேசிய  ஜாஹிட்,  பாஷா புத்ரா  ஜெயாவுடன்  நெருக்கமான  தொடர்பு   வைத்திருப்பதால்  இனி  அந்த  வடக்கத்தி  மாநிலத்துக்கு  முதலீடுகள்  நிறைய  செல்வதற்கு  வாய்ப்பிருக்கிறது  என்றார்.

பாஷா  பல  ஆண்டுகளாக  அரசியலில் இருந்து  வருவதைத்  துணைப்  பிரதமர்  சுட்டிக்காட்டினார்.

“அரசியல்வாதிகளைக்  கல்வித்  தகுதியை  வைத்து  மட்டும்  எடை  போடக்  கூடாது.  மற்ற  துறைகளையும்  பார்க்க  வேண்டும்.

“ஏளனம்  செய்வதையும் மட்டம்  தட்டுவதையும்  நிறுத்துங்கள்.  அவருக்கு  ஒரு  வாய்ப்பு  கொடுங்கள்.  குறைகளை  மட்டுமே  பார்த்துக்  கொண்டிருந்தால்  உண்மையைக்  காண  முடியாது”,  என்றார்.