மதங்களுக்கிடையே நல்லுறவை வலுப்படுத்த புதிய கமிஷன்.. மோடி அரசு அதிரடி திட்டம்

moodiடெல்லி: இந்தியாவில் அனைத்து மதத்தினரும் பாதுகாப்புடனும், அச்சமின்றி வாழவும், மத ரீதியான மோதல்களுக்கு முடிவு காணவும் புதிய கமிஷன் ஒன்றை அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், ஐபி தலைவர் தினேஷ்வர் சர்மா ஆகியோருடன் இஸ்லாமிய அறிஞர்கள், மத குருக்கள் சந்தித்து அண்மையில் ஆலோசனை நடத்தினர். அப்போதுதான் இந்த புதிய கமிஷன் ஒன்றை அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.

அதாவது அனைத்து மதங்கள், மத நம்பிக்கைகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைக் கொண்டதாக இந்த ஆணையம் அமையும்; இதன் மூலம் மதரீதியான சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்பது மத்திய அரசு நம்பிக்கை. முதலில் தற்போது செயல்படாமல் உள்ள தேசிய சமூக நல்லிணக்க பவுண்டேஷனை மீண்டும் செயல்படுத்துவது; பிரதமர் தலைமையிலான தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சிலின் பணிகளை விரிவாக்கவும் செய்வது என்பதும் மத்திய அரசின் உடனடி நடவடிக்கையாக இருக்குமாம்.

உள்துறை அமைச்சக ஏற்பாடு

இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரிய உறுப்பினரும், டெல்லி சிறுபான்மையினர் ஆணைய முன்னாள் தலைவருமான கமால் பரூக்கி கூறுகையில், இக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சரே ஏற்பாடு செய்திருந்தார். அரசுக்கும், மக்களுக்கும் இடையிலான நம்பிக்கை அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். சிறுபான்மை சமூகத்தினரின் குறைகளைக் கேட்க அரசு தயாராக இருப்பதாக, காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

வழி ஏற்படுமே..

இன்று பாஜகவைச் சேர்ந்த யாரேனும் ராமர் கோவில் குறித்துப் பேசினால் எங்களுக்குப் பரிந்து பேச யாரும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதுபோன்ற சமயத்தில் இதுபோன்ற ஆணையங்கள் அதற்கு உதவும். இதுபோன்ற அமைப்பின் மூலம் மதரீதியாக ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்யவும், உறவுகளை மேம்படுத்தவும் வழி ஏற்படும் என்றார்.

அமெரிக்கா முன்னுதாரணம்

சமூக ஆர்வலரான பாஜகவின் எம்.ஜே. கான் கூறுகையில், பல நாடுகளில் இதுபோன்ற ஆணையங்கள் உள்ளன. அமெரிக்காவிலும் கூட உள்ளது. இதன் மூலம் பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்று அரசிடம் கூறியுள்ளோம். அரசும் உறுதியளித்துள்ளது என்றார்.

மாநில அரசுகளுக்கு மதிப்பெண்

மேலும் இக்கூட்டத்தில் ஆண்டுதோறும் சிறுபான்மையினர் நலன் தொடர்பாக மாநில அரசுகளுக்கு மதிப்பெண் வழங்கவேண்டும் என்றும் முஸ்லீம் தலைவர்கள் ராஜ்நாத் சிங்கிடம் கோரிக்கை வைத்தனர். இதன் மூலம் சிறுபான்மையினர் நலன் குறித்து அக்கறை காட்டாத அரசுகளை அடையாளம் காண முடியும். அந்த அரசுகளுக்கு அபராதம் உள்ளிட்டவையும் விதிக்கலாம் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அச்சமின்றி வாழ நடவடிக்கை

இதுகுறித்து மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், அனைத்து மதத்தினரும் பாதுகாப்புடனும், அச்சமின்றி வாழவும் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்றார்.

tamil.oneindia.com

TAGS: