தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக முதல்வர் ஆக வேண்டும்: மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள்

vaiko-thirumaபுதுச்சேரி: தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை புதுச்சேரியில் நடைபெற்றது. கூட்டத்தில் மக்கள் நலக் கூட்டணியின் இணையதளத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ துவங்கி வைத்தார். குறைந்தபட்ச செயல்திட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பெற்றுக் கொண்டார்.

மாற்று அரசியல், மதச்சார்பின்மை, ஊழல் தடுப்பு உள்ளிட்ட கொள்கைகளை வைத்து மக்கள் நலக் கூட்டணி துவங்கப்பட்டுள்ளது. எங்கள் கூட்டணியை அழிக்க அசுர சக்திகள் முயற்சி செய்கின்றன.

மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நான் நியமிக்கப்பட்டுள்ளேன். ஒரு தாய் தனது குழந்தையை பத்திரமாக பாதுகாப்பது போன்று நான் இந்த கூட்டணியை பார்த்துக் கொள்வேன்.

தமிழக மக்களில் 21 சதவீதம் பேர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவர் தான் தமிழக முதல்வராக தேர்வு செய்யப்படுவார்.

புதுச்சேரி மண்ணுக்கு தனிச்சிறப்பு உள்ளது. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து இல்லாமல் இருப்பதால் எதற்கு எடுத்தாலும் மத்திய அரசின் உதவியை நாட வேண்டி உள்ளது.

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி முதல்வர் ரங்கசாமி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தும் ஒன்றும் நடக்கவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தும் தனி மாநில அந்தஸ்து கிடைக்க வழிவகை செய்யப்படவில்லை. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரிய ஆளுநர் வீரேந்திர கட்டாரியா தூக்கி வீசப்பட்டார். தற்போது புதுச்சேரிக்கு என தனியாக ஆளுநர் இல்லை.

மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வாங்கிக் கொடுப்போம். பலம் வாய்ந்த கட்சிகளை எதிர்த்து நிற்கிறோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் லோக் ஆயுக்தா சட்டத்தை கொண்டு வருவோம், ஊழலை ஒழிப்போம். மதுவை ஒழிப்போம், தொழிலாளர்களின் கண்ணீரை துடைப்போம், வேலையில்லா வாலிபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்றார் வைகோ.

தேர்தல் கூட்டணிக்கு யாராவது நம்மை அழைக்க மாட்டார்களா என்று நாங்கள் ஒன்றும் ஏங்கவில்லை. மக்களின் நலன் கருதியே இப்படி ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிறோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நலக் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கு முதல்வர் ஆகும் தகுதி இருக்கிறது. தலித் சமூகத்தை சேர்ந்த யாராவது ஒருவர் முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழகம் மற்றும் புதுச்சேரியை மது அரக்கனிடம் இருந்து காப்போம் என்கிறார் திருமா.

மக்கள் நலக் கூட்டணி எப்பொழுது தான் உடையும் என எதிர்பார்க்கிறார்கள். இது மகத்தான கூட்டணி. நம்பிக்கையுடன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

tamil.oneindia.com

TAGS: