ஏஜி முன்மொழிந்த ஓஎஸ்ஏ திருத்தங்கள் நஜிப்பின் பெயரைக் கெடுக்கும்

zanசட்டத்துறைத்   தலைவர்  முகம்மட்  அபாண்டி,  அதிகாரப்பூர்வ  இரகசிய  சட்ட(ஓஎஸ்ஏ)த்தின்கீழ்  கடுமையான  சட்டங்களைக்  கொண்டு  வருவது  பிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  நல்லது  செய்வதாக  இருக்காது  என்கிறார்  முன்னாள்  அமைச்சர்  ஒருவர்.

ஓஎஸ்ஏ-யை  வலுப்படுத்துவது  நஜிப்பின்  பெயரைக்  கெடுக்கும்  என  முன்னாள்  தகவல்  அமைச்சர்  சைனுடின்  மைடின்  கூறினார்.

“அது, நம்  நாடு  ஜனநாயகத்தை  மிகவும்  போற்றிவரும்  நாடு  என்று   உலகுக்குக்  காண்பிக்க  முயன்று  கொண்டிருக்கும்  நஜிப்பின்  பெயரைக்  கெடுப்பதாகத்தான்  அமையும்.

“அபாண்டியின்  அறிவிப்பு   நஜிப்புக்கு  எந்த  வகையிலும்  உதவாது. அன்னிய  சக்திகள்  நம்  சட்டங்களில்  தலையிட  அது  வழிகோலும்”, என  சைனுடின்  சினார்  ஹரியானிடம்  இன்று  தெரிவித்தார்.

கடந்த  சனிக்கிழமை  சின்  சியு  டெய்லி-இடம்  பேசிய   சட்டத்துறைத்  தலைவர்,  அரசாங்கத்  தகவல்களைக்  கசிய  விடுவோருக்கு   ஆயுள்  தண்டனையும்  10  பிரம்படிகளும்  கொடுக்கும்  வகையில்  ஓஎஸ்ஏ-இல்  திருத்தம்  கொண்டுவர  எண்ணியிருப்பதாகக்  குறிப்பிட்டார்.

இரகசிய  தகவல்களை  வெளியிடும்  செய்தியாளர்கள்  தகவல்கள்  கிடைத்த  மூலத்தைத்  தெரிவிக்காவிட்டால்  அவர்களுக்கும்  கடும்  தண்டனைதான்.

இதை  உத்துசான்  மலேசியாவின்  முன்னாள்  தலைமைச்  செய்தியாசிரியரால்  தாங்கிக்  கொள்ள  முடியவில்லை.

“அரசாங்க  இரகசியங்கள்  அம்பலப்படுத்தப்படுவதை  நானும்  எதிர்க்கிறேன்.  எதிரணியினர்  எப்போதும்  அதைத்தான்  செய்கிறார்கள். ஆனால்,  அதற்குச்  சட்டத்தைத்  திருத்தி  ஆயுள்  தண்டனை  கொடுப்பது  தீர்வாகாது”,  என்றாரவர்.

எதிரணியினர்   அம்பலப்படுத்தும்  தகவல்களை  வெளியிடுவதற்காக  ஊடகங்களைத்  தண்டிப்பதும்  முறையாகாது. அவர்கள்  “கூறப்படுகிறது”  “சொல்லப்படுகிறது”  எனப்  பழைய  செய்திகளைத்தான்  எடுத்துக்  கூறுகின்றனர்.

அரசாங்க  இரகசியங்களை  வெளியில்  தெரிவிப்போருக்கு  சீனாவில்  இதைவிடவும்  கடுமையான   தண்டனைகள்  விதிக்கப்படுவதாக  அபாண்டி  கூறியதையும்  சைனுடின்  சாடினார்.

“மலேசியாவின்  ஜனநாயகம்  எப்படிப்  பட்டது? நாம்  யாரைப்  பின்பற்றுகிறோம்-  சீனாவையா, மேற்கத்திய  நாடுகளையா,  அரபு  நாடுகளையா? நமக்கென  சொந்த  வழிமுறை  இல்லையா?”, என்ரவர்  வினவினார்.

இப்போது,  அரசாங்க  இரகசியத்தைக்  கசிய  விடுவோருக்கு  ஓஎஸ்ஏ-இன்கீழ்  ஒன்று  முதல்  ஏழாண்டுகள்வரை  சிறைத்  தண்டனை  விதிக்கப்படுகிறது.