ஆதங்கங்களுக்கு இன்று பதிலளிப்பேன்!- ஐ.நா. ஆணையர் ஹுசைன்

un-commissionerrஉங்களின் ஆதங்கங்கள் அனைத்திற்கும் செவ்வாய்க்கிழமை பதிலளிப்பேன். அதுவரை பொறுமையாக இருங்கள். நீங்கள் மிக முக்கியமான விடயங்களுக்கு என்னிடம் விடைகளை எதிர்பார்க்கின்றீர்கள் என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் நான் செவ்வாய்க்கிழமை உங்களின் ஆதங்கங்களுக்கு பதிலளிப்பேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார்.

கண்டி தலதா மாளிகைக்கு நேற்று சென்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைன் அஸ்கிரி, மற்றும் மல்வத்தை பீடாதிபதிகளை சந்தித்த பின் வெளியே வந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சந்திப்பை முடித்து விட்டு வெளியே வந்த மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைனை சூழ்ந்து கொண்ட ஊடகவியலளார்கள் கேள்விகளை எழுப்பினர்.

அதன் போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த அல் ஹுசைன் குறிப்பிடுகையில்,

என்னிடம் கேட்பதற்காக உங்களிடம் பல்வேறு கேள்விகளும் ஆதங்கங்களும் இருக்கின்றன என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். ஊடகங்கள் மிகவும் ஆர்வமான முறையில் நான் கூறும் விடயங்களை செவிமடுக்க காத்திருக்கின்றன என்பதையும் நான் புரிந்துகொள்கின்றேன்.

ஆனால் எனது சந்திப்புக்களை நான் முடித்து விட்டு செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றை நான் நடத்தவுள்ளேன். அந்த செய்தியாளர் மாநாட்டில் உங்களின் அனைத்து ஆதங்கங்களுக்கும் நான் பதிலளிப்பேன்.

எனவே அதுவரை உங்களை பொறுத்திருக்குமாறு கோரிக்கை விக்கின்றேன். இப்போது உங்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது மிகவும் சிரமமாகும். ஆனால் நாளைய தினம் (இன்று) கட்டாயம் நான் உங்கள் கேள்விகளுக்கும் ஆதங்கங்களுக்கும் பதிலளிப்பேன் என்றார்.

கேள்வி:- உங்களின் சந்திப்பு தொடர்பில் செய்தி சேகரிக்க நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இது நியாயமா? இது எமது மனித உரிமையை மீறுவதாக உள்ளதே?

பதில்:- நான் பாரிய வேலைப்பளுவுக்கு மத்தியில் சந்திப்புக்களை நடத்தி வருகின்றேன். எனவே இறுதியாக நடத்தும் செய்தியாளர் சந்திப்பில் அனைத்து விடயங்களையும் கூறுகின்றேன்.

கேள்வி:- ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் எங்களது உரிமை மீறப்பட்டுள்ளதே?

பதில்:- செய்தியாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை தான் நடக்கும். அதில் உங்கள் அனைவரினதும் கேள்விகளுக்கும் நான் பதிலளிப்பேன் என்றார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் அரசியல், சிவில் சமூக பிரதிநிதிகளின் பாதுகாப்பு தரப்பினரின் பாதிக்கப்பட்ட தரப்பினரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: