இந்தியாவில் பயங்கரவாதம் அதிகரிக்கும் ஆபத்து: முன்னாள் ராணுவ அதிகாரி ஜி.பி.ரெட்டி எச்சரிக்கை

iii”இந்தியாவில், வி.ஐ.பி.,க்கள் மற்றும், ‘இசட்’ பிரிவினருக்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவதை விடுத்து, உள்நாட்டு மக்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்த வேண்டும்; இல்லையெனில், பயங்கரவாதம் பெரிய அளவில் தலைதுாக்கும்,” என, முன்னாள் ராணுவ அதிகாரி ஜி.பி.ரெட்டி எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்புக்கான சர்வதேச கருத்தரங்கம், சென்னை, குருநானக் கல்லுாரி வளாகத்தில், உள்நாட்டு பாதுகாப்பு பாடப்பிரிவு சார்பில் நடந்தது.

இதில், இந்திய ராணுவத்தில் நாகாலாந்து பிரிவுக்கு பிரிகேடியர் என்ற தலைமை அதிகாரியாக இருந்து, ஓய்வு பெற்ற ஜி.பி.ரெட்டி பேசியதாவது:

பலதரப்பட்ட கலாசாரம் உடைய இந்தியாவில், உள்நாட்டு பாதுகாப்புக்கு முழுமையான திட்டம் அவசியம். இளைய தலைமுறையினரிடம் தற்போது சகிப்புத்தன்மை இல்லை. நாங்கள் பணியாற்றிய போது, கொரில்லா போர் முறைகளை சமாளிப்பது; எந்த இடத்தில், படையில் எப்படி வியூகம் அமைத்து தாக்குவது என, பயிற்சி அளிக்கப்பட்டது.பல நேரங்களில், பொது இடங்களில் தாக்குதல் நடக்கும் போது, ‘யாராக இருந்தாலும், சுட்டுத் தள்ளு’ என்ற இலக்கே தரப்பட்டது. எல்லாரையும் கொன்று குவிக்க முடியாது; அப்பாவிகளும் இருப்பர். தற்போது, ராணுவத்தினருக்கு சாதுர்யமாகச் செயல்படும் பயிற்சி அளிக்கப்படுவதில்லை.

இன்னும், 20 ஆண்டுகளில், இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்பில் பெரும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஒற்றுமை குலையும் அபாயம் உள்ளது. அதற்கு தற்போதே முன்னெச்சரிக்கையுடன் திட்டங்கள் வகுக்க வேண்டும். நாட்டுக்கு அச்சுறுத்தலாக, 179 பயங்கரவாத குழுக்கள் செயல்படுவதாகவும், அவற்றில், மத ரீதியான குழுக்கள், 71 என்றும், ஆவணங்களின் அடிப்படையில் தகவல்கள் கிடைத்துள்ளன. ஆவணப்படுத்தப்படாத குழுக்கள், இன்னும் எத்தனையோ உள்ளன.பாதுகாப்புக்கான சவால்களை, இயற்கையாகவே எழுந்துள்ள காரணங்களை, நாம் ஆராயவில்லை. மக்கள் தொகையில், 2025ல் இந்தியா, சீனாவை மிஞ்சி விடும். ஆனால், அதை சமாளிக்க இன்னும் திட்டங்கள் வகுக்கவில்லை.

இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த யுக்தியே இன்னும் தயாரிக்கப்படவில்லை. தேசிய மயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு திட்டம் வகுக்கப்பட்டது. அதன் தற்போதைய நிலை என்னவென்றே தெரியவில்லை. சமீபத்தில், பாதுகாப்புத் துறையின் பார்லிமென்ட் நிலைக்குழு உறுப்பினர் தருண் விஜயிடம், ‘பாதுகாப்பு யுக்தி திட்டம் என்ன ஆனது’ எனக் கேட்ட போது, ‘இன்னும் ஒரு தெளிவுக்கு வரவில்லை’ என்கிறார்.

நம் நாட்டில், தொழில் நிறுவனங்களை பாதுகாக்க அரசு அதிக அக்கறை எடுக்கிறது. வி.ஐ.பி.,க்களையும், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு பெறும் முக்கிய பிரமுகர்களை பாதுகாக்கவும் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், அடிப்படை பிரச்னைகளை கண்டறிந்து, மக்களை பாதுகாக்க திட்டமில்லை. தற்போது, ‘சைபர் கிரைம்’ தொழில்நுட்ப அச்சுறுத்தலும் வளர்ந்து விட்டது. தற்போதைய நிலையில், உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்த, பாதுகாப்பு கவுன்சிலை நவீனப்படுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பு யுக்தி திட்டத்தை தயாரிக்க வேண்டும். ராணுவத்தினருக்கு மன ரீதியாக, இடங்களுக்கு ஏற்ற வகையில் செயல்படும் பயிற்சி அளிக்க
வேண்டும். தற்போதைய படைகளின் செயல் விவரங்களை முழுமையாக ஆராய்ந்து குறைகளை சரிசெய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

‘போலீஸ் நிலையங்களை நவீனப்படுத்த வேண்டும்’:

ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின், முன்னாள் இயக்குனர் கமல் குமார் பேசியதாவது:உள்நாட்டு பாதுகாப்பில், முப்படைகளை விட, உள்ளூர் போலீசுக்கு தான் அதிக பங்கு உள்ளது. படைகள் நேரடியாக களத்தில் இறங்க முடியாது; மாறாக, போலீசின் கட்டுப்பாட்டில் தான், உள்நாட்டு பாதுகாப்பில் செயல்பட முடியும். எனவே, உள்ளூர் போலீசார், பயங்கரவாத அச்சுறுத்தலின் உண்மையான மூலத்தை கண்டறிந்து, அதை ஒழிக்க போராட வேண்டும்; போலீஸ் நிலையங்களை நவீனப்படுத்த வேண்டும். உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான குழுக்களை கண்டறிந்து, முன்னெச்சரிக்கையுடன் அவர்களின் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தலைவர் பற்றாக்குறை:

ஊழலை ஒழிக்கவில்லை. அதனால், வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டு, பயங்கரவாதம் வணிகமயமாகி விட்டது. நாட்டை வழி நடத்தும் தலைவர்களுக்கு மத்தியிலும், மாநிலங்களிலும் பற்றாக்குறை உள்ளது. பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டு அச்சுறுத்தலில், ஊடகங்களுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அவை, மக்களை பீதிக்குள்ளாக்கும் விவாதங்களுக்கு தரும் முக்கியத்துவத்தை, ஆக்கப்பூர்வமான தகவல்களுக்கு கொடுப்பதில்லை. சமூகத்தை சில ஊடகங்கள் பிரிக்கின்றன.

-http://www.dinamalar.com

TAGS: