சியாச்சினில் 6 நாட்கள் மரண போராட்டம்: ஜவான் உயிருடன் மீட்பு!

siachen2ஸ்ரீநகர்: சியாச்சின் பனிமலையில் கடந்த 3ம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்தில், நேற்று ஒரு வீரர் உயிருடன் மீட்கப்பட்டார். கர்நாடகாவைச் சேர்ந்த லான்ஸி நாயக் ஹனுமந்தப்பா என்ற அந்த வீரரை மீட்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

இமயமலைத் தொடரின் உயரமாக பகுதி சியாசன் ஆகும். உலகின் மிகஉயரமான போர்க்களமான இப்பகுதி, இந்திய-பாக்.எல்லையில் 19,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு பிப்ரவரி 3ம் தேதி ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி, தவித்து வந்த 10 ராணுவ வீரர்களும் உயிரிழந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது. இவர்கள் 10 பேரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த உடனேயே அப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்து பனிச்சரிவில் சிக்கிய வீரர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருப்பினும் வீரர்களை கண்டுபிடிக்க முடியாததால் விமானப்படையின் உதவியுடன் தேடுதல் பணிகள் நடைபெற்றது. இருப்பினும் அவர்களை கண்டுபிடிக்க முடியாததால், அவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவு என்பதால், அவர்கள் 10 பேரும் உயிரிழந்து விட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

மரணத்தி்ன் வாசலை தொட்டு மீண்ட மாவீரர்:
எனினும் வீரர்கள் உடல்களை மீட்டு வர மோப்ப நாய் உதவியுடன் ராணுவ மீட்புபடையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பனிச்சரிவு நிகழ்ந்த இடத்தில் 25அடி ஆழத்தில் சிக்கி உயிருக்கு போராடிய வீரர் ஒருவரை உயிருடன் இருப்பதையறிந்து அவரை உயிருடன் மீட்டனர்.

இது குறித்து வடக்கு ராணுவத்தின் கமாண்டர் லெப்டினட் ஜெனரல் டி,எஸ்.ஹுடா கூறுகையில், மீட்புபடையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 5 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. 4 பேர் அடையாளம் தெரிந்தது. உயிருடன் மீட்கப்பட்ட வீரர் கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தைச் சேர்ந்த லான்ஸி நாயக் ஹனுமந்தப்பா என தெரியவந்தது. கடும் உறை பனியால் அவர் மயக்கநிலையில் இருந்தார். தற்போது ஆர்.ஆர்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: