ஸிக்கா வைரசுக்கு எதிரான உயர் விழிப்புநிலையில் அமெரிக்கா

zikaஅமெரிக்க  நோய்க்  கட்டுப்பாட்டு, தடுப்பு  மையம் (சிடிசி),  ஸிக்கா  வைரஸ்  பரவலை  எதிர்க்க  அதன்  அவசர  நடவடிக்கை  மையத்தை உயர்  விழிப்பு  நிலையில்  வைத்துள்ளது.

கொசுவால் பரப்பப்படும்  ஸிக்கா  வைரசை  எதிர்த்துப்  போராட  காங்கிரசிடம்  யுஎஸ்$1.8  பில்லியன்  கேட்கப்போவதாக   வெள்ளை  மாளிகை    அறிவித்துள்ள  வேளையில்  சிடிசியும்  விழிப்புநிலையை  முடுக்கிவிட  முடிவு  செய்துள்ளது.

யுனைடட்  ஸ்டேட்சிலும்  கொசுக்களால்  ஸிக்கா வைரஸ்  பரப்பப்படும்  என்று   எதிர்பார்ப்பதால்  அதனை  எதிர்கொள்வதற்கான  நடவடிக்கைகளை  முடுக்கி  விட்டிருப்பதாக  சிடிசி  கூறியது.

வெள்ளை  மாளிகை,  கொசுக்களைக்  கட்டுப்படுத்தும்  திட்டங்களை  விரிவுபடுத்தவும்,  ஸிக்காவுக்கு  எதிராக  தடுப்பூசி  தயாரிக்கும்  ஆராய்ச்சிகளை  விரைவுபடுத்தவும்,  ஸிக்காவால்  பாதிக்கப்பட்ட  நாடுகளில்  நோய்ப்பரவல்  தடுப்பு  நடவடிக்கைகளுக்கு  உதவவும் காங்கிரசிடம்  பணம்  கேட்டிருப்பதாக  தெரிவித்தது.

அதிபர்  பராக்  ஒபாமா  ஸிக்கா வைரசை  எண்ணி  மக்கள்  பீதி  அடைய  வேண்டாம்  என்று  கேட்டுக்கொண்டிருக்கிறார்.

“ஒரு  நல்ல  செய்தி  என்னவென்றால்  இது  ஈபோலா  போன்றது  அல்ல. ஸிக்கா-வால்  மக்கள்  இறப்பதில்லை. பெரும்பாலோருக்கு  அப்படி  ஒரு  நோயால்  பாதிக்கப்பட்டிருப்பதுகூட  தெரியாது”, என  ஒபாமா  கூறினார்.

உலக  சுகாதார  நிறுவனம்,  ஸிக்கா  வைரஸ்  அனைத்துலக  அளவில்  பொதுச்  சுகாதாரத்துக்குப்  பெரும்  நெருக்கடியை  ஏற்படுத்தி  இருப்பதாக  அறிவித்துள்ளது. அடுத்த  12 மாதங்களில்  அமெரிக்க  நாடுகளில்  நான்கு  மில்லியன்  பேர்  அந்நோயால்  பாதிக்கப்படலாம்  என்று  அது  கூறிற்று.