அன்வாரின் சிறைத்தண்டனையை முடிவுக்குக் கொண்டு வருவீர்: மனித உரிமைக் கண்காணிப்பு அமைப்பு கோரிக்கை

anwarஅன்வார்  இப்ராகிம்  சிறை  வைக்கப்பட்டு  ஒராண்டு  நிறைவுபெறும்  வேளையில்  மலேசிய  அரசாங்கம்  முன்னாள்  துணைப்  பிரதமரும்  எதிரணித்  தலைவருமான  அவரை  நிபந்தனையின்றி  விடுவிக்க  வேண்டும்  என  மனித  உரிமை  கண்காணிப்பு  அமைப்பு  கேட்டுக்  கொண்டிருக்கிறது.

சிறையில்  இருக்கும்  காலத்தில்  அன்வாருக்கு  முறையான  மருத்துவச்  சிகிச்சை  கிடைப்பதை   அரசாங்கம் உறுதி  செய்வதுடன்  தேவையானால்  அவருக்கேற்பட்டுள்ள  கடுமையான  நோய்களுக்குச்  சிகிச்சை  பெற  அவரை  வெளிநாடுகளுக்கு  அனுப்பவும்  வேண்டும்.

“அரசியல்  நோக்கத்துடன்  குற்றஞ்சாட்டப்பட்ட  அன்வார்  ஓராண்டுக் காலம்  சிறையில்  பல  துன்பங்களை  அனுபவித்து விட்டார்”, என  மனித  உரிமைக்  கண்காணிப்பு  அமைப்பின்  ஆசிய   துணை  இயக்குனர்  பில்  ரோபர்ட்சன்  கூறினார்.

“அன்வார்  சிறையில்  இருக்கும்  ஒவ்வொரு  நாளும்  மலேசிய  நீதித்  துறை  மீதான  நம்பிக்கை  தேய்ந்து  கொண்டே  வருகிறது.  அரசாங்கம்  அன்வாரை  விடுவிக்க  வேண்டும். வழக்கொழிந்துபோன  குதப்புணர்ச்சி  சட்டங்களையும்  இரத்துச்  செய்ய  வேண்டும்”, என்றார்.