‘உச்சமன்றத் தீர்ப்பு ஒரு அபாயகரமான முன்மாதிரி’

teoஇஸ்வான்  அப்துல்லாவுக்கு  அவரின்  மகனைப்  பராமரிக்கும்  உரிமையைக்  கொடுக்கும் கூட்டரசு  நீதிமன்றத்தின்   தீர்ப்பு  அபாயகரமான  முன்மாதிரியாகும்.

தந்தையுடன்  தங்கி  இருந்தான்  என்பதற்காக  எட்டு-வயது  சிறுவனை  இஸ்வானின்  பொறுப்பிலேயே  விடுவது  தப்பான  முடிவாகும்  என  கூலாய்  எம்பி  தியோ  நை  சிங்  கூறினார்.

இஸ்வானும்  அவரின்  முன்னாள்  மனைவி எஸ்.தீபாவும்  இந்து  முறைப்படி  2003-இல்  திருமணம்  செய்து  கொண்டனர்.

2011-இல் மனைவியிடம்  மணவிலக்கு  பெற்ற  இஸ்வான்  இஸ்லாத்துக்கு  மதமாறியதுடன்  அவர்களின்  பிள்ளைகள்  இருவரையும்  இஸ்லாத்துக்கு  மதமாற்றினார்.

தீபா,  2014-இல்  சிரம்பான்  உயர்  நீதிமன்றத்தில்   வழக்கு  தொடுத்து  பிள்ளைகளைப்  பராமரிக்கும்  உரிமையைப்  பெற்றார்.  உயர்  நீதிமன்றத்  தீர்ப்பை  முறையீட்டு  நீதிமன்றமும்  கடந்த  ஆண்டு  மே23-இல்  உறுதிப்படுத்தியது.

ஆனால்,  சிரம்பான்  உயர்  நீதிமன்றம்  தீர்ப்பு  வழங்கிய  இரண்டாவது  நாள்  இஸ்வான்  அப்போது  6-வயதான  மகனைக்  கடத்திச்  சென்றார்.

இப்போது  உச்ச  நீதிமன்றத்தின்  தீர்ப்பின்படி  பார்த்தால் குழந்தையைப்  பராமரிக்கும்  உரிமையை  இழந்த  பெற்றோரில்  ஒருவர்,  பிள்ளையைக்  கடத்திச் சென்று  சில  ஆண்டுகளுக்கு  ஒளிந்து  வாழலாம்  என்பதை  தியோ  சுட்டிக்காட்டினார்.

“பிறகு  நீதிமன்றம்  வந்து.  பிள்ளை   தன்னுடன்  இருக்க  விரும்புகிறது  என்று காரணம்காட்டி  முந்தைய  தீர்ப்பை  மாற்றுவதற்கு  மனு  செய்து  கொள்ளலாம்  என்றாகிறது.

“இது  அபாயகரமான  முன்மாதிரி”,  என்றாரவர்.