கர்நாடகா: ஓடும் நீரில் நின்று செல்ஃபி எடுத்த 3 மருத்துவ மாணவர்கள் பலி

selfie-deathபெங்களூரு: செல்ஃபி எடுத்தபோது 3 மருத்துவ மாணவியர் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சோகம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர். (படத்தில், இறப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட கடைசி செல்பி) மருத்துவ முகாம் முடிவடைந்த பிறகு மூன்று மாணவர்கள், இரண்டு மாணவிகள் மட்டும் ஹூலிவானா கிராமத்திற்குச் சென்றனர்.

அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஒரு மாணவர் மட்டும் கால்வாய் கரையோரம் நின்றும், நான்கு பேர் கால்வாய் தண்ணீரில் இறங்கியும் செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் நால்வரும் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த கெரகோடு காவல்நிலைய போலீசார், தண்ணீரில் மூழ்கிய மாணவர்கள் நால்வரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஜீவன் ,சுருதி ஆகியோரை போலீசார் கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர்.

இதில் மாணவி சுருதி சடலமாக மீட்கப்பட்டார். உயிருக்கு போராடிய ஜீவனை, போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜீவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு மாணவி சிந்து, காயங்களுடன் மீட்கப்பட்டார். மேலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இன்னொரு மாணவரான கிரீசின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

இதுகுறித்து, கெரகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் செல்ஃபியினால் அதிக மரணங்கள் நடைபெற்று வரும் நிலையில் மருத்துவ மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

tamil.oneindia.com

TAGS: