ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அறிமுகம் காண்கிறது

– கி .தமிழ்செல்வன், ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம், தலைமைச் சபை உறுப்பினர், ஏப்ரல் 13, 2016.

Hindraf People's Movement Logoஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி நாட்டு மக்களுக்கு அறிமுகம் செய்யப்படவிருக்கிறது.

கொள்கை அடிப்படையில் பதிவு பெற்ற பி. வேதமூர்த்தியின் பெர்சத்துவான் ஹிண்ட்ராப் மலேசியா அமைப்பிலிருந்து அதன் முக்கிய தலைவர்கள் வெளியேறி ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் ஒன்றை தோற்றுவிக்க தீர்மானித்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்..

சமூக மற்றும் பொருளாதார ரீதியான சவால்களை எதிர்நோக்கி இருக்கும் மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தரும் என்ற பெரும் நம்பிக்கையில் மக்களால் உயிர்பிக்கப்பட்ட  ஹிண்ட்ராப் அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் புத்துயிர் அளிக்கும் வகையில் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் அதன் செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

இதே நோக்கத்திற்காக இந்நாட்டில் செயல்படும் பொறுப்பான இதர அமைப்புகளோடு இணைந்து செயல்பட்டு மலேசிய குடிமக்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கு தங்களாலான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துச்  செல்வதற்கான வைராக்கியத்தை ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கம் கொண்டுள்ளது.

Tamil Selvan Hindrafஅந்த வைராக்கியத்திற்கு வடிவம் அளிக்கும் வகையில் எதிர்வரும் ஏப்ரல் 17 ஆம் தேதி, ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.00 மணி அளவில் சிலாங்கூர், ரவாங், கம்போங் பெங்காளி அருள்மிகு அகோர வீரபத்திரர் சங்கிலி கறுப்பர் ஆலய வளாகத்தில் ஹிண்ட்ராப் மக்கள் பேரியக்கத்தின் அறிமுக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசிய இந்தியர்கள் எதிர்கொண்டிருக்கும் சமூக மற்றும் பொருளாதார சவால்களுக்கு விவேகமான முறையில் ஒரு தீர்வை எட்ட எத்தனிக்கும் தன்னலம் கருதாத அனைவரும் இந்த அறிமுக நிகச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர்.

மிகவும் எளிய முறையில் நடக்கவிருக்கும் இந்த அறிமுக நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களும் மற்ற அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ள ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சி குறித்து மேல்விவரங்கள் அறிந்துகொள்ள விரும்புவர்கள் 012 206 5424 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளும்படி தாழ்மையாகவும் பணிவன்புடனும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.