இனப்படுகொலைக்குத் துணை நின்றது தலைவரா? தளபதியா?

stalin-karunanidhiஇலங்கை ராணுவத்தால், 2008-2009ல், விலங்குகளைப் போல் தமிழர்கள் வேட்டையாடப்பட்ட போது, அங்கே அதிபராக இருந்தது மகிந்த ராஜபக்ச. இங்கே முதல்வராக இருந்தவர், கலைஞர் கருணாநிதி. 26வது மைலில் நடந்த இனப்படுகொலையைத் தடுத்துநிறுத்த கருணாநிதி தவறிவிட்டார் – என்கிற குற்றச்சாட்டை அவரது ஆதரவாளர்களாலேயே கூட மறுக்க முடியவில்லை. அதேசமயம், அவரைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளையும் அவர்கள் விட்டுவிடவில்லை.

‘இந்தியாவே மறைமுகமாகப் போரை நடத்திய நிலையில், கலைஞரால் என்னதான் செய்திருக்க முடியும்’ என்பது ஆதரவாளர்களின் கேள்வி. ‘இனப்படுகொலை நடந்த கடைசி 5 மாதங்களில், உடல்நலக்குறைவின் காரணமாக, பதவி நாற்காலியில் உட்கார்ந்திருந்தாரே தவிர, முதல்வர் பணியில் கலைஞரால் முழுமையாக ஈடுபட முடிந்ததா’ – என்கிற துணைக்கேள்வியையும் தூக்கிவைக்கிறார்கள்.

அவர்கள் சொல்வதை ஒரேயடியாக மறுத்துவிட முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில், ஸ்டாலின் கையில் தான் லகான் இருந்தது. இதுதான் உண்மை.

மனித உரிமை மீறல்களுக்காக மகிந்த ராஜபக்ச மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், தம்பி கோதபாய ராஜபக்ச மீதும் வைக்கப்படுகின்றன. ‘மகிந்த ராஜபக்ச வெறும் டம்மி, கோதபாய தான் சூத்திரதாரி’ என்கிற குற்றச்சாட்டு வலுவடைந்து வருகிறது. சற்றேறக்குறைய தமிழ்நாட்டுக்கும் இது பொருந்துவதுதான் கொடுமை.

அங்கே இனப்படுகொலை தீவிரமாக நடைபெற்ற சமயத்தில், இங்கே தொடர்ச்சியாக 34 நாட்கள் மருத்துவமனையில் இருந்தார் கலைஞர். அதைத் தொடர்ந்து கட்டாய ஓய்வு. அந்தக் காலக்கட்டத்தில் ஸ்டாலினைத் தவிர வேறு எவர் கையில் லகான் இருந்திருக்க முடியாது. லகான் கையிலிருந்தபோது அவர் என்ன செய்தார் என்பதுதான் கேள்வி.

2009 ஜனவரி 26ம் தேதி ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், முதல்வர் கருணாநிதி. மூன்றாவது நாள், 29ம் தேதி ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தீக்குளிக்கிறான், முத்துக்குமார் என்கிற அறிவாற்றல் மிக்க இளைஞன். உயிர் பிரியும் தருவாயிலும், ‘என் சாதி தமிழ்ச்சாதி’ என்று பிரகடனம் செய்த அவனது உடல் அன்று இரவே சென்னை கொளத்தூரில் வைக்கப்படுகிறது. அன்று நடந்த எதையுமே மறக்க முடியவில்லை, இன்று வரை!

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் முன்தான் தீக்குளிக்கிறான் முத்துக்குமார். பதற்றம் சிறிதுமின்றித் தன் உடலுக்குத் தானே கொள்ளிவைத்துக் கொள்கிறான். அதற்குமுன் ‘எதற்காகத் தீக்குளிக்கிறேன்’ என்கிற விரிவான அறிக்கை ஒன்றை அந்தப் பகுதி முழுக்க விநியோகிக்கிறான்.

தீயில் கருகிய முத்துக்குமாரை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிற அவசரத்தில் கூட, அவனது அறிக்கையின் நகல்களை வைத்திருந்தவர்களிடமிருந்து அதைப் பறித்தது காவல்துறை. விசுவாசப் பிராணிகளான காவல்துறை அதிகாரிகள் எவராவது அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்பதால், இன்னார்தான் காரணம் என்று குற்றஞ்சாட்ட முடியவில்லை.

ஆனால், அன்று மாலை, முத்துக்குமாரின் உடல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து கொளத்தூருக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி நடந்து கொண்டதற்கு யார் காரணம்? அதற்கான உத்தரவு கோட்டையிலிருந்து வராமல், ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்தா வந்திருக்க முடியும்! அப்போது கோட்டையில் கொலுவிருந்த பிரகஸ்பதி யார்?

அன்று இரவு, அடுத்த தாக்குதலை ஆரம்பித்தது காவல்துறை. கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கப்பட்ட இடத்திலேயே, ‘உங்களுக்கு அவரைத் தெரியுமா’ ‘காதல் தோல்வி ஏதாவது காரணமா’ என்றெல்லாம் உளவுத்துறை விசாரிக்கத் தொடங்க, திரண்டிருந்த மக்கள் அவர்களை விரட்டியடித்தார்கள்.

தீக்குளிக்கும் முன் முத்துக்குமார் எழுதியிருந்த மரண சாசனம், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த சுருக்கமான ஆய்வறிக்கை. இதயத்தை உலுக்கும் அந்த மரண சாசனத்தைப் படித்த பிறகும், ‘காதல் தோல்வி காரணமா’ என்றெல்லாம் காவல்துறை விசாரித்ததென்றால், அதற்கு யார் காரணம்? அதற்கான உத்தரவு கோட்டையிலிருந்து வந்ததா? மருத்துவமனையிலிருந்து வந்ததா? அப்போது லகான் யார் கையில் இருந்தது?

ஜனவரி 31ம் தேதி, பேப்பர் மில்ஸ் ரோடு – குக்ஸ் ரோடு – ஓட்டேரி – புரசைவாக்கம் – சூளை வழியாக மூலக்கொத்தளம் மயானத்துக்கு அவனது தியாகத் திருவுடல் எடுத்துச் செல்லப்படும் என்று காவல்துறைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் அதற்கு எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை.

இறுதி ஊர்வலம் ஆரம்பித்தபிறகு, கடைசி நொடியில், பேப்பர் மில்ஸ் ரோடு திருப்பத்தில் இறுதி ஊர்வலத்தை மறித்து, ஓட்டேரி – புரசைவாக்கம் பகுதிக்குள் நுழையவிடாமல் தடுத்து, ‘ஆளரவமற்ற பேசின்பிரிட்ஜ் பாலம் வழியாகத்தான் போகவேண்டும்’ என்று வலுக்கட்டாயமாகக் காவல்துறை திருப்பி விட்டதே…… அந்தத் திடீர்த் திருப்பத்துக்கு யார் காரணம்? அப்போது லகான் யார் கையில் இருந்தது?

‘ஈழத்து உறவுகளுக்காக ஓர் இளைஞன் உயிர்த்தியாகம் செய்திருக்கிறான்’ – என்கிற செய்தி கூட மக்களைப் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்பதுதான் இறுதி ஊர்வலத்தைத் திருப்பி விட்டவர்களின் நோக்கம். அவர்கள் யார்? அதற்கான உத்தரவு கோட்டையிலிருந்து வந்ததா? மருத்துவமனையிலிருந்து வந்ததா? அப்போது லகான் யார் கையில் இருந்தது?

முத்துக்குமார் ஏற்படுத்திய எழுச்சி மாணவர்களிடையே தீப்பொறியாகப் பரவிய நிலையில், அதைத் தடுத்துநிறுத்த, கல்லூரிகளை மூடியதுடன் நின்றுவிடாது, கல்லூரி விடுதிகளையும் மூடுவதென்ற முடிவை யார் எடுத்தது? ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து முதல்வர் கருணாநிதியே அந்த முடிவை எடுத்தாரா? லகானைக் கையில் வைத்திருந்தவர் எடுத்தாரா?

மாணவர் போராட்டங்கள் மூலம், இனப்படுகொலைக்கு எதிரான எழுச்சி கூர்மையடைந்துவிடக் கூடாது – என்கிற அந்த இரக்கமற்ற முடிவுக்கு இருவரில் யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்?

முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்ட அன்று, திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரவி என்கிற ஈழ ஆதரவாளர், தீக்குளித்தார். 80 சதவிகித தீக்காயம். மதுரை அரசினர் மருத்துவமனையில் பிப்ரவரி 2ம் தேதி அவர் உயிர் பிரிந்தது.

ரவி விஷயத்திலும் காவல்துறை மூக்கை நீட்டியது. குடும்பப் பிரச்சினைகளாலேயே ரவி தீக்குளித்தார், ஸ்டவ் வெடித்துத் தீப்பிடித்தது – என்றெல்லாம் கட்டுக்கதைகளைப் பரப்பப் பார்த்தது. கணவனின் தியாகத்தைக் கொச்சைப்படுத்த முயன்ற காவல்துறையின் அராஜகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அந்தச் சூழலிலும், ரவியின் மனைவி சித்ரா பேசவேண்டியிருந்தது.

கணவருடன் எந்தப் பிரச்சினையும் இல்லை, வீட்டில் ஸ்டவ் இல்லை, முத்துக்குமாரின் உயிர்த் தியாகத்தால் ரவி மனமுடைந்து போயிருந்தார் – என்கிற உண்மைகளை சித்ரா தெரிவித்தபோதுதான் காவல்துறையின் கயமைத்தனம் அம்பலமானது. தனது மகனுக்கு பிரபாகரன் என்று ரவி பெயரிட்டிருந்தார். சித்ரா தெரிவித்த தகவல் அனைத்துக்கும் சான்றாகத் திகழ்ந்தது, அந்தப் பெயர்.

ஈழத் தமிழருக்காக உயிர்த் தியாகம் செய்கிற போக்கு, அத்துடன் நின்றுவிடவில்லை. கலைஞர் மருத்துவமனையிலிருந்து வெளியே வருவதற்குள், சீர்காழியில் ரவிச்சந்திரன், சென்னையில் அமரேசன் – சிவப்பிரகாசம், கடலூரில் தமிழ்வேந்தன், விருதுநகரில் கோகுலகிருஷ்ணன் என்று உயிர்த்தியாகம் தொடர்ந்தது. மருத்துவமனையிலிருந்து கலைஞர் வெளியே வந்த மார்ச் ஒன்றாம் தேதியன்று கூட, வாணியம்பாடியில் சீனிவாசன் தீக்குளித்தார்.

தீக்குளித்த ஒவ்வொருவரையும் கொச்சைப்படுத்தவே முயன்றது காவல்துறை. முத்துக்குமாரைப் போலவே, பெரியவர் அமரேசனும் மரண சாசனம் எழுதிவைத்திருந்தார். அதன் நகல்களைக் கைப்பற்றி அழித்தேவிட்டது காவல்துறை.

சொந்த இனத்துக்காக உயிரையே நீத்த தியாகிகளை மதிப்பதோ மதிக்காததோ தனிநபர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. ஆனால், அவர்களை அவமதிக்க எவருக்கும் அதிகாரமில்லை. அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் காவல்துறை செயல்பட்டதற்கு யார் காரணம்? அப்போது லகான் யார் கையில் இருந்தது?

முக்கடல் சங்கமிக்கும் குமரிமுனையில் கரைப்பதற்காக, சென்னையிலிருந்து முத்துக்குமாரின் அஸ்தி எடுத்துச் செல்லப்பட்டபோது என்ன நடந்ததென்பது பலருக்கும் நினைவிருக்கும். திருநெல்வேலியில் வைத்து, அந்த அஸ்தியைக் கைப்பற்ற காவல்துறை முயன்றது.

அஸ்திக்கலசங்களுடன் சென்னையிலிருந்து வந்திருந்த உணர்வாளர்கள் தங்கியிருந்த திருமண மண்டபம், ஆயுதம் தாங்கிய காவலர்களால் நள்ளிரவில் சுற்றிவளைக்கப்பட்டது. மண்டபம் உள்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், கதவைத் திறக்கும்படி உள்ளேயிருந்தவர்களை மிரட்டினர் காவல்துறை அதிகாரிகள்.

ஒரு மாவீரனின் அஸ்தியை ஆயுதங்களைக் காட்டி அபகரிக்க மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான நடவடிக்கை அது. முத்துக்குமாரின் மரணசாசனத்தைப் பார்த்து மிரண்டவர்கள், அவனது அஸ்தியைக் கண்டும் மிரண்டார்கள்.

காவல்துறையின் அந்த அடாவடித்தனத்தைத் தகர்த்தவர்கள், சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்தான்! அந்த நள்ளிரவில், அவர்களது முயற்சியால், அரைமணி நேரத்துக்குள் நெல்லை பத்திரிகையாளர்கள், அந்தத் திருமண மண்டபத்தின் முன் திரண்டுவிட்டனர். பத்திரிகையாளர்களைப் பார்த்தவுடன், காற்றால் கிழிக்கப்பட்ட மேகம் போல காவல்துறையினர் காணாதுபோய்விட்டனர்.

பத்திரிகையாளனான முத்துக்குமாரின் மரணசாசனம் நம் கைக்குக் கிடைக்கக் காரணமாக இருந்தவர்கள், சென்னைப் பத்திரிகையாளர்கள் தான். அவனது அஸ்தியை, நெல்லைப் பத்திரிகையாளர்களுடன் இணைந்து காப்பாற்றினார்கள் அவர்கள். காவல்துறையின் கோழைத்தனமான முற்றுகையைப் பத்திரிகையாளர்கள் உடைத்த வரலாறு இது.

முத்துக்குமாரின் அஸ்தியைக் கைப்பற்ற, தமிழகக் காவல்துறை தலைகீழாக நின்றதற்கு யார் காரணம்? மிக மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவராக நாம் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய கலைஞர் கருணாநிதி அப்போது மருத்துவமனையில் தான் இருந்தார். அந்த நிலையில், அப்படியொரு கோழைத்தனத்தை அரங்கேற்றுவதற்கான உத்தரவு ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து தான் வந்ததா? லகானைக் கையில் வைத்திருந்தவர்களின் கோட்டைக்குள்ளிருந்து வந்ததா?

கலைஞர் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் நிகழ்ந்த இன்னொரு கொடூரமான சம்பவம், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது பிப்ரவரி 19ம் தேதி நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல். நிராயுதபாணிகளாக இருந்த வழக்கறிஞர்களை, வெறிபிடித்தவர்களைப் போல அடித்து நொறுக்கியது காவல்துறை. நீதிமன்ற வளாகம் ரத்தக் களரியானது.

அது, ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கக் கோரி போராடிய குற்றத்துக்காக வழக்கறிஞர்களுக்கு அரசு கொடுத்த தண்டனை. கோட்டையிலிருந்து அனுமதி பெறாமல் அந்தக் கொலைவெறித் தாக்குதல் எப்படி நடந்திருக்கும்? அப்போது கோட்டையில் இருந்தவர் யார்? லகான் யார் கையில் இருந்தது?

இனப்படுகொலையை நிறுத்த ராஜபக்சவே கொடுத்த ஒரே ஒரு வாய்ப்பும் அந்தக் காலக்கட்டத்தில்தான் வீணடிக்கப்பட்டது. ‘இனப்படுகொலையெல்லாம் நடக்கவில்லை…. வேண்டுமானால் தமிழக முதல்வரே நேரில் வந்து பார்க்கட்டும்…. அவரை வரவேற்கக் காத்திருக்கிறோம்’ என்று இலங்கை அரசு அழைத்தது. ‘உடல்நலமின்றி இருக்கும் கலைஞர் வரப்போவதில்லை’ என்கிற திமிரில் அப்படி அழைத்தது அது.

‘இந்த வாய்ப்பைத் தவற விடக்கூடாது. ஸ்டாலின் தலைமையில், மத்திய அமைச்சர் அன்புமணி உள்ளிட்டோரை அடக்கிய ஒரு குழு உடனடியாக இலங்கை போகட்டும். சாலை வழியாகப் போனால்தான் போர்ப் பகுதிகளைப் பார்க்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தால், இலங்கை அதை மறுக்க முடியாது. அப்படிப் பார்வையிட ஒரு வார காலமாகலாம். அதுவரை தாக்குதல் நிறுத்தப்படும். ஸ்டாலின் முதலானோர் அங்கே நிற்கிறபோது, வானிலிருந்து குண்டுவீச இலங்கை நிச்சயமாக முயலாது’ என்பதையெல்லாம் தகுதி வாய்ந்த ஒரு பேராசிரியர் மூலம் அரசின் கவனத்துக்குக் கொண்டுசெல்ல முயன்றோம்.

பேராசிரியர் சொன்னதை ஆட்சியாளர்கள் காதில் வாங்கவில்லையோ என்னவோ, அதற்குப் பிறகு அவர் எங்களுடன் பேசவேயில்லை. அந்த முயற்சி வெற்றி பெற்றிருந்தால், இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்திய பெருமை ஸ்டாலினுக்குக் கிடைத்திருக்கும். செய்த துரோகத்தை மறைப்பதற்காக, ஆசிரியர்களுடன் போய் ஐ.நா.வில் மனுகொடுக்கும் போலி நாடகமெல்லாம் தேவைப்பட்டிருக்காது.

இனப்படுகொலை நிகழ்ந்த காலக்கட்டத்தில், கலைஞர் மருத்துவமனையிலோ ஓய்விலோ இருக்க, பெருமளவு நாட்கள் ஸ்டாலின் கையில்தான் லகான் இருந்தது. ராஜபக்சக்களை ஆயுதங்களால் ஆசீர்வதித்தவர்களின் ஏஜென்டுகளோடு சேர்ந்து பேரணி நடத்தியபடியே, இனப்படுகொலையை நிறுத்தக் குரல் கொடுத்தவர்களின் மென்னியை முறித்தார் அவர்.

இனப்படுகொலைக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த கொந்தளிப்பை இரும்புக்கரம் கொண்டு அடக்கியதற்காகவோ என்னவோ, அது முடிந்த கையோடு மே 29ம் தேதி துணை முதல்வர் பொறுப்பு ஸ்டாலினுக்குத் தரப்பட்டது. அதற்குமுன்பு அதிகாரபூர்வமற்ற முதல்வராகவே இருந்தவர், அதிகாரபூர்வ துணை முதல்வரானது இப்படித்தான்!

ஈழப் பிரச்சினைக்காக தமிழகத்திலிருந்து யாரும் குரல் கொடுத்துவிடக் கூடாது – என்று ஸ்டாலின் நினைத்தது எதனாலென்று இன்றுவரை புரியவில்லை. அப்பாவைப் போலவே, ‘பிரபாகரன்தான் பிரச்சினை’ என்கிற தவறான புரிதல் அவருக்கும் இருந்ததா? தெரியவில்லை.

இவ்வளவுக்குப் பிறகும், கொளத்தூரில் தான் நிற்பேனென்று பிடிவாதம் பிடிக்கிறார் தளபதி. உண்மையில், அது முத்துக்குமாரின் தொகுதி. அந்த மாவீரனின் உடலை மூன்று நாட்கள் மடியில் கிடத்தியிருந்த மண். அந்த மண்ணை மிதிப்பதற்கான தார்மீக உரிமை தலைவர் கருணாநிதியின் தளபதியான மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா?

– புகழேந்தி தங்கராஜ்

-http://www.tamilwin.com

TAGS: