கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது பற்றி ஊகங்கள் செய்யாதீர், ஐஜிபி கூறுகிறார்

 

IGPnospeculationஈப்போவில் ஓர் இந்து கோயிலில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து ஊகங்கள் செய்ய வேண்டாம் என்று போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) அனைத்துத் தரப்பினருக்கும் ஆலோசனை கூறியுள்ளார்.

இதில் சம்பந்தப்பட்டவர் ஒரு மருத்துவர், அவர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கும் அதிகாராப்பூர்வ தகவல் குறித்து சில தரப்பினர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து ஐஜிபி இவ்வாறு கூறியுள்ளார்.

தங்களுடைய விசாரனையிலிருந்து சந்தேகத்திற்குரிய அந்நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இது சம்பந்தமான மருத்துவ அறிக்கைகள் இருக்கின்றன என்று மலேசியகினியிடம் கூறிய ஐஜிபி காலிட், இச்சம்பவம் குறித்து எதையும் மறைக்க வேண்டிய காரணம் ஏதும் போலீசுக்கு கிடையாது. இது ஒரு நோயாளி சம்பந்தப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றார்.

இந்த நபருக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும், அவர் தாமாகவே இதைச் செய்துள்ளார் என்றும் காலிட் விளக்கமளித்தார்.
வதந்திகளைப் பரப்பினால் நடவடிக்கை
இவ்விவகாரம் குறித்து வதந்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காலிட் எச்சரிக்கை விடுத்தார்.

“இச்சம்பவம் ஒரு வழிபாட்டுத்தலம் சம்பந்தப்பட்டது. பொறுப்பற்ற அறிக்கைகளால் அமைதியின்மை ஏற்படுவதோடு விரும்பத்தகாத விளைவுகளுக்கு இட்டுச் செல்லும். நாங்கள் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்”, என்று காலிட் கூறினார்.

இன்று முன்நேரத்தில், இச்சம்பவம் குறித்து ஒரு முழுமையான விசாரணையை போலீஸ் மேற்கொண்டு சம்பந்தப்பட்டவருக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மஇகாவின் தகவல் பிரிவுத் தலைவர் வி.எஸ். மோகன் ஓர் அறிக்கையில் போலீசை கேட்டுக் கொண்டார்.
உண்மையைத் தெரிவிக்க வேண்டும்
இதனிடையே, சம்பவம் நடந்த கோயிலுக்கு பினான்கு மாநில துணை முதலமைச்சர் II ப. இராமசாமி சென்று அப்பகுதியிலுல்ள மக்களைச் சந்தித்தார்.

“சம்பந்தப்பட்ட அந்த நபர் ஒரு மன நோயாளி என்று எப்படி போலீசார் இவ்வளவு விரைவாக ஒரு முடிவெடுத்தனர் என்றும், அந்த நபர் தீவிரவாத கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரா” என்றும் மக்கள் வினவியதாக இராமசாமி தெரிவித்தார்.

இச்சம்பவம் கட்டுப்பாட்டை மீறிவிடக் கூடாது என்பது போலீசாரின் நோக்கம் என்பது நமக்குப் புரிகிறது. அதே நேரத்தில் மக்களுக்கு உண்மை தெரிய வேண்டிய அவசியம் இருக்கிறது என்று அவர் ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.