பிரதமரும் துணைப் பிரதமரும் வாக்குகளை விலைகொடுத்து வாங்குவதாக பெர்சே குற்றச்சாட்டு

vote buyதேர்தல்  கண்காணிப்பு  அமைப்பான  பெர்சே  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கும்  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியும்  தேர்தல்  விதிகளை  மீறியிருப்பதாகக்  குற்றஞ்  சாட்டியுள்ளது.

பெர்சே  ‘கையூட்டு  கொடுத்த  துணைப்  பிரதமர்  ஜாஹிட் ஹமிடியைத்  தேர்தல்  ஆணையம்(இசி)  விசாரிக்க  வேண்டும்’  என்ற  தலைப்பில்  வெளியிட்டிருக்கும்  ஊடக  அறிக்கையில்,    வாக்குகள்  வாங்கவும்  ஊழல்  நடவடிக்கைகளில்  ஈடுபடவும்  இசி  அரசியல்  கட்சிகளுக்குக்  கட்டற்ற  சுதந்திரம்  வழங்கியிருப்பதாகவும்  கூறியுள்ளது.

அஹ்மட் ஜாஹிட்டும்  மற்ற  அமைச்சர்களும்,  எதிர்வரும்  தேர்தலில்  வாக்குகள்  பெறும்  நோக்கத்தில்  சரவாக்  மக்களுக்கு பொருளாகவும்  ரொக்கமாகவும்  வாக்குறுதிகளாகவும்  வாரிக் கொடுப்பதை நிறுத்த  வேண்டும்  என்று  அது  கோரிக்கை  விடுத்தது.

“இது  அரசியல்  பண உதவியாகும்.  மாநில  நிதிகளும்  கூட்டரசு  நிதிகளும் (எல்லாமே  மக்கள்  பணம்) வேட்பாளர்களின்  வெற்றிக்காகச்  செலவிடப்படுகின்றன”, எனப்  பெர்சே  கூறிற்று.

தவறு  செய்தவர்கள்மீது  இசி  நடவடிக்கை  எடுக்க  வேண்டும்  என்று  வலியுறுத்திய  பெர்சே,  தேர்தல் ஒழுங்கீனங்கள்  தொடர்பான  ஆதாரங்களை  மக்கள்  தொடர்ந்து  திரட்டி  வர  வேண்டும்  என்றும் அவை  பற்றி  போலீசில்  புகார்  செய்து  அவ்விவகாரங்களை  வெளிச்சத்துக்குக்  கொண்டு  வ்ர  வேண்டும்  என்றும்  கேட்டுக்கொண்டது.

“இசி  நடவடிக்கை  எடுக்காது  போனால்  தேர்தலுக்குப்  பிறகுகூட  வழக்கு  தொடர  முடியும்”,  என்று  அது  கூறியது.