சொல்லுக்கும், செயலுக்கும் பெருந்தொலைவு வித்தியாசம் கொண்ட ‘மகா கலைஞன்’ கமல்ஹாசன்

kamalHassan.cmsசாதியின் கோரப் பிடியில் இருந்து தமிழகத்தையும், தமிழகத்து இளைஞர்களையும் மீட்டுக் கரையேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு பெருவாரியான இளைஞர் படையை அணி சேர்த்து வைத்திருக்கிற தலைவர்களுக்கு, கலைஞர்களுக்கு இருக்கிறது. தன்னை ஒரு ரோல் மாடல் கலைஞனாக அறிவித்துக் கொள்வதில் கமலுக்கு எப்போதுமே அலாதிப் பிரியம் உண்டு. ‘வருமான வரி செலுத்துகிறேன். ஓட்டுப் போடுகிறேன். குழந்தைகளுக்கான கல்விச் சான்றிதழில் சாதி, மதம் குறிப்பிடவில்லை…’ என்றெல்லாம் பரபரப்பாக அறிவித்துக் கொள்கிறவர் அவர். ஸ்வச் பாரத் (swachh bharat) எனப்படுகிற தூய்மை இந்தியா திட்டம் வந்ததும் குப்பைத் தொட்டியும், விளக்குமாறும் எடுத்துக் கொண்டு வீதிக்குச் சென்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் அவர்.

ஆக, அவர் ஒரு self-styled ரோல் மாடல். அப்படிப்பட்ட ரோல் மாடல் கலைஞர், ‘‘தெருவின் பெயரிலிருந்தும், உங்களின் பெயரிலிருந்தும் ஜாதிப்பெயரை எடுக்க முடியுமா? அப்படிச் செய்தப் பிறகு படத்தில் இருந்து எடுக்கலாம்…’’ என்றெல்லாம் சொல்லக்கூடாது. ‘‘முதலில் நான் செய்கிறேன்… எனக்கப்புறமாக, நீங்கள் செய்யுங்கள்…’’ என்று கூறி, மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும். ‘ஊரெல்லாம் செய்து முடித்தப் பிறகு, கடைசியாக நான் செய்கிறேன்…’ என்றால், ‘ரோல் மாடல்’ கமலுக்கும், லோக்கல் சாதி சங்க மெம்பருக்கு என்ன வித்தியாசம் பார்க்க முடியும்?

புரட்சி பேசுகிற, கமல்ஹாசனை ஒரு புரட்சியாளராக, விஷயம் தெரிந்த யாரும் என்றைக்கும் ஏற்றுக் கொண்டதில்லை. சொல்லுக்கும், செயலுக்கும் பெருந்தொலைவு வித்தியாசம் கொண்ட ‘மகா கலைஞன்’ அவர். மதங்களையும், கடவுள் நம்பிக்கையையும் அடிக்கடி கேள்விக்குள்ளாக்குவார். ‘கடவுள் இல்லைனு சொல்லலை… இருந்தா நல்லா இருக்கும்ல!’ என்று வசனம் வைப்பார். அவரது படங்களை கவனித்து பார்த்திருந்தால் இன்னொரு மேட்டர் தெரிந்திருக்கும். 1990க்கு முன்பு வரையிலும் கமலஹாசனாக (Kamalahasan) இருந்தவர், அதற்குப் பிறகு கமல்ஹாசனாக (KamalHasan) புதிய முகம் பெற்றார். இதற்கான பின்னணியில் நியூமராலஜி எதுவும் இருக்காது என்றே நம்பி வைப்போம்!

தமிழ், தமிழ் என்று உருகுவார். தமிழில் கவிதைகள் எழுதுவார். இடிக்கிறது பெருமாள் கோயில் என்ற கதையாக, நடவடிக்கைகள் அத்தனையும் தமிழைப் பழிப்பதாகவே இருக்கும். தனது உதவியாளராக இருந்து இயக்குனராக (தூங்காவனம்) மாறிய ராஜேஷின் குழந்தைக்கு மிகச் சமீபத்தில் பெயர் சூட்டினார். நல்ல தமிழிலா சூட்டினார். ‘ஹோஷிகா ம்ருணாளினி’ என்று சம்ஸ்க்ருதப் பெயர் வைத்தார். ராஜேஷ் பரவாயில்லை. டான்ஸ் மாஸ்டர் ஷோபி – லலிதா தம்பதி தான் பாவம். இவர்களது குழந்தைக்கு ஸ்யமந்தகமனி அஷ்விகா (SYAMANTAKAMANI ASHVIKA) என்று பெயர் வைத்து கலங்கடித்திருக்கிறார் உலக நாயகன். பள்ளிக்கூடத்தில் எப்படிக் கூப்பிடப் போகிறார்களோ… பாவம்!இப்போது ‘சபாஷ் நாயுடு’ என்று சாதிப் பெயர் வைத்து படம் எடுக்கிறார். கடந்த காலங்களில் அவரது சினிமா பெயர்கள் பல சர்ச்சைகளைக் கடந்து வந்திருக்கின்றன. என்பதால், இந்த முறை வெகு கவனமாக ஒரு தடுப்பணை கட்டி தயாராக வைத்திருக்கிறார். நீங்கள் பத்திரிகைகளில் படித்திருந்தால் தெரிந்திருக்கும். ‘‘புதிய படம் சம்பந்தமாக இசைஞானி இளையராஜாவிடம் கமல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, புதிய படத்துக்கு இளையராஜா வைத்த பெயர்தான் இந்த சபாஷ் நாயுடு…’’ – நாளைக்கு படத்தலைப்பு தொடர்பாக ஏதாவது சர்ச்சை வெடித்தால், ரொம்ப வசதியாக இளையராஜா தலையில் பழியைப் போட்டு விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் பாருங்கள்…!

சபாஷ் உத்தம வில்லன்!

நன்றி – பூனைக்குட்டி –