‘முஸ்லிம் பூமிகள்’ மட்டுமே சரவாக்கை ஆளலாம் என்ற ஹாடியைச் சாடினார் குவான் எங்

had-limபாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  தேர்தல்  பரப்புரை  ஒன்றின்போது  முஸ்லிம்-அல்லாத  பூமிபுத்ராக்கள்  தலைவர்களாக  இருக்கலாம்  ஆனால்   சாபா,  சரவாக்கை   முஸ்லிம்  பூமிபுத்ராக்களே  ஆள  வேண்டும்  என்று  கூறியதைப் பலரும்  சாடியுள்ளனர்.

டிஏபி  தலைமைச்  செயலாளர்  லிம்  குவான்  எங், அது  “கடுமையான,   தீவிரவாதம்  நிறைந்த  அரசியல்  கருத்து”  என்று  வருணித்தார்.

அது  ஹாடி  முஸ்லிம்- அல்லாதாருக்கு  எதிரி  என்பதைக்  காண்பிக்கிறது  என்றார்.

அது,  சரவாக்கில்   மக்கள்தொகையில்  பெரும்பான்மையாக உள்ள  முஸ்லிம்- அல்லாத  பூமிபுத்ராக்களுக்கு   “சினத்தை”  உண்டு  பண்ணலாம்  என  லிம்  குறிப்பிட்டார்.

“முஸ்லிம்- அல்லாத  பூமிபுத்ராக்கள் சரவாக்கின்  மிக  உயர்ந்த பதவியான  முதலமைச்சர்  பதவிக்குத்  தகுதியற்றவர்கள்  ஆனது  ஏன்,  அவர்கள்  முஸ்லிம்  அல்லாதவர்கள்  என்பதாலா?”,  என்றவர்  வினவினார்.

ஒரு  முஸ்லிம் பூமிபுத்ராவான  அடினான்  சாதேமைத்  தங்களின்  முதலைமைச்சராக  ஏற்றுக்கொண்டிருக்கும்  முஸ்லிம்- அல்லாத  பூமிபுத்ராக்கள்  ஹாடியைக்  காட்டிலும் திறந்த  மனமும்  மலேசிய  உணர்வும்  கொண்டவர்கள்  என  பினாங்கு  முதலமைச்சருமான  லிம்  கூறினார்.

ஒரு  சீனர்  சரவாக்  முதலமைச்சர்  ஆக  வேண்டுமென  என்றும் தாம்   சொன்னதில்லை  எனவும் லிம்  குறிப்பிட்டார்.

ஹாடி  ஏன்  ஒரு  சீனர்  சரவாக்  முதலமைச்சர்  ஆகப்  போகிறார்  என்று  பூச்சாண்டி காட்டி  வாக்காளர்களைப்  பயமுறுத்துகிறார்  என்பதும்  தமக்குப்  புரியவில்லை  என்றாரவர்.