வவுனியா இராணுவ முகாமிலுள்ள சித்திரவதை கூடங்களை கண்காணித்த ஐ.நா பிரதிநிதி!

vavuniyaஐக்கிய நாடுகள் பிரதிநிதி வவுனியா இராணுவ முகாம் ஒன்றை கண்காணித்தார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் சித்திரவதைகள் தொடர்பான விசேட பிரதிநிதி ஜூவான் டெஸ்டஸ், இந்த முகாமை கண்காணித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள வன்னிப் பாதுகாப்பு தலைமையகம் எனப்படும் ஜோசப் முகாமே இவ்வாறு கண்காணிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமில் பெருமளவிலான சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யாஸ்மீன் சூகா, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்திருந்தார்.

உண்மையை கண்டறிந்து கொள்வதற்காக இந்த முகாமை கண்காணிப்பதற்கு, ஜூவான் டெஸ்டஸிற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்த முகாமில் சந்தேக நபர்கள் எவரும் தடுத்து வைத்திருப்பதனை டெஸ்டஸினால் அவதானிக்க முடியவில்லை. இதனால் சூகாவின் முறைப்பாடு பொய்யானது என இதன் ஊடாக புலனாகியுள்ளது எனவும் சிங்களப் பத்திரிகையான திவயின இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் தங்களது விஜயத்தின் இறுதியில், நாட்டில் மேற்கொள்ளப்பட்ட விஜயங்கள் அவதானிப்புக்கள் பற்றி கருத்து வெளியிட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: