இனப்பிரச்சினைக்கு தீர்வை காணாவிடின் சர்வதேசம் எம்மை கைவிட்டுவிடும்!

maithiri_ranil_001இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசம் எம்மை ஒதுக்கித் தள்ளிவிடும்.

இன்றைய ஜனாதிபதி மைத்திரி – பிரதமர் ரணில் தலைமையிலான இணக்கப்பாட்டு அரசில் இனப்பிரச்சினைக்குதீர்வு காணப்படாவிட்டால் என்றுமே தீர்வைக் காணமுடியாது என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதி தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற விழாவில் உரையாற்றுகையிலேயே உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டிருக்க வேண்டும்.

ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் எவரும் எந்த அரசாங்கத்தினரும் அனைத்து கட்சிகளுடனும் இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காணத் தவறிவிட்டனர்.

இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காண்பதன் மூலமே நாட்டை அபிவிருத்திப் பாதையில் முன்னோக்கி நகர்த்த முடியும். இதற்கு தீர்வை காணாததன் காரணமாகவே 30 வருடகால யுத்தம் ஏற்பட்டது.

இனப்பிரச்சினைக்கு தீர்வைக் கண்டால் மட்டுமே சர்வதேசம் எமக்கு ஆதரவை வழங்கும். அத்தோடு எமது நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளும்.

இனப்பிரச்சினைக்கு தீர்வை காணாது இழுத்தடித்தால் சர்வதேசம் எம்மை கைவிட்டுவிடும்.

சுதந்திரத்திற்குப் பின்னர் இன்று நாட்டில் புதிய அரசியல் கலாசாரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நாட்டின் ஜனாதிபதியாகவுள்ளார்.

ஐ.தே.கட்சித் தலைவர் பிரதமராக பதவி வகிக்கிறார். எமது எதிராளிகள் இந்த இணக்கப்பாட்டு அரசாங்கத்திற்கு எதிராக என்ன விமர்சனம் செய்தாலும் இந்த இணக்கப்பாட்டு அரசை எதுவும் செய்ய முடியாது.

எனவே இன்றைய இணக்கப்பாட்டு அரசில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வைக் காணமுடியும்.இவ்வரசாங்கத்தில் நாம் இதற்கு தீர்வை பெற்றுக் கொள்ளாவிட்டால் எந்தவொரு அரசிலும் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியாது. இன்று அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: