இன்று ‘காணாமல் போன குழந்தைகள் தினம்’… இந்தியாவிலேயே மேற்கு வங்காளம்தான் மோசம்

strett_child_001கொல்கத்தா: இன்று சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிகமாக குழந்தைகள் காணாமல் போவது மேற்கு வங்காள மாநிலத்தில் தான் என புள்ளிவிவரத் தகவல் தெரிவிக்கிறது. இந்திய அளவில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில்தான் அதிக அளவில் சிறார்கள், மைனர் பெண்கள் காணாமல் போகின்றனர். இந்தியாவில் காணாமல் போகும் சிறார்களில் 60 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மைனர் சிறுமிகள் அதிக அளவில் இங்கு காணாமல் போகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சகம் தயாரித்துள்ள இந்த புள்ளி விவரத்தைப் பார்த்தால் மேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாக இருப்பதை உணர முடியும்.

மேற்கு வங்காளத்தில் கடந்த 2014ம் ஆண்டு காணாமல் போன சிறார்களின் எண்ணிக்கை 14,671 ஆகும். இது நாட்டின் மொத்த காணாமல் போனோரின் எண்ணிக்கையில் 21 சதவீதத்திற்கும் அதிகமாகும்.

இந்தியாவில் காணாமல் போகும் 5 சிறார்களில் ஒருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிரா இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. இங்கு 2014ல் 13,090 சிறார்கள் காணாமல் போனார்கள். டெல்லியில் 7599, ஆந்திராவில் 7072 பேர் காணாமல் போயுள்ளனர்.

கடந்த 2010-14 காலகட்டத்தில் மேற்கு வங்காளத்தில் குழந்தைகள் காணாமல் போவது சற்று குறைந்துள்ளது. அதாவது 7.4 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும் நிலைமை மோசம் என்ற நிலையிலிருந்து இன்றும் மாறவில்லை.

குழந்தைக் கடத்தலில் மேற்கு வங்காளமே நாட்டில் முதலிடத்தில் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது 608 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2010ல் கடத்தப்பட்டோர் எண்ணிக்கை 332 ஆக இருந்தது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 2351 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 2010-14 காலகட்டத்தில் கடத்தப்பட்ட சிறார்களில் 61 சதவீதம் பேர் சிறுமிகள் ஆவர். இதுதான் கவலையை அதகரிப்பதாக உள்ளதாக தேசிய குற்ற ஆவண பதிவகம் கூறியுள்ளது.

2010-14 காலகட்டத்தில் நாடுமுழுவதும் 3.85 லட்சம் சிறார்கள் காணாமல் போனார்கள். இவர்களில் 61 சதவீதம் பேர் சிறுமிகள். கடந்த ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் காணாமல் போன சிறார்களில் 70 சதவீதம் பேர் சிறுமிகள் என்று புள்ளிவிவரம் கூறுகிறது. காணாமல் போவோரில் 40 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்படாமலேயே போகின்றனர்.

மேலும் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மேற்கு வங்கம், அஸ்ஸாம், பீகார், ஒடிஷாவில்தான் சிறுமிகள் அதிக அளவில் கடத்தப்படுகின்றனர் என்பது இன்னொரு கவலைக்குரிய அம்சமாகும்.

tamil.oneindia.com

TAGS: