பள்ளியில் ‘அதிர்ஷ்ட நீர்’ விநியோகமா? மசீச சாடல்

blessகிள்ளானில்  தொடக்கப்  பள்ளி  ஒன்றின்  தலைமையாசிரியர்  பல  ஆண்டுகளாகவே  தம்  பள்ளி  மாணவர்களிடையே  “அதிர்ஷ்ட  நீர்”  விநியோகம்  செய்யப்படுவதற்கு  அனுமதி  அளித்து  வந்திருப்பதற்கு  எதிராக  மசீச  புகார்  செய்யவுள்ளது.

இதனைத்  தெரிவித்த  கிள்ளான்  மசீச  பொதுமக்கள்  புகார்  பிரிவு  துணைத்  தலைவர்  டான்  பொக்  கூன்,  கல்வி  அமைச்சு  விசாரணை  மேற்கொள்ள  வேண்டும்  என்றும்  விசாரணை  முடியும்வரையில்  தலைமையாசிரியரை  இடைநீக்கம்  செய்ய  வேண்டும்  என்றும் விரும்புகிறார். அது  மீண்டும்  நிகழ்ந்தால்  போலீசில்  புகார்  செய்யப்போவதாகவும்  அவர்  எச்சரித்தார்.

அந்த “அதிர்ஷ்ட  நீர்”  மாணவர்கள்  கெட்டிக்காரர்களாவதற்கும்  தேர்வுகளில்   சிறந்த  மதிப்பெண்களைப்  பெறவும்  உதவும்  என்றும்  கூறப்படுகிறதாம்.

“இச்செயலைக்  கண்டிக்கிறேன். சொந்த  சமயங்களைப்  பரப்புவதற்குப்  பள்ளிகள்  பொருத்தமான  இடங்கள்  அல்ல.

“நம்  பிள்ளைகளும்  ஆசிரியர்களும்  கடுமையாக  பாடுபட்டு  சிறப்பாக  தேர்ச்சி  பெற்றால்  பெருமையெல்லாம் ‘அதிர்ஷ்ட  நீரு’க்குப்  போய்விடும்;  இது  நியாயமல்ல”,  என  கிள்ளான்  மசீச  அலுவலகத்தில்  டான்  கூறினார்.

மேலும்,    கடின  உழைப்பின்றி   நல்ல  மதிப்பெண்களைப்  பெறலாம்  என்ற  தப்பான  நம்பிக்கையையும்  அது  மாணவர்களுக்குக்  கொடுத்து  விடும்  என்றாரவர்.