ஈழத்தில் சிறுவர்களுக்கு கஞ்ச கொடுத்து கெடுப்பது யார் ?

jaffகிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் வசிக்கும் சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளனர்.

கிளிநொச்சி, பாரதிபுரம், இரணைமடு ஆகிய பகுதிகளில் சிறுவர்கள் கஞ்சாப் பாவனையில் அதிகமாக ஈடுபடுவதாக சிறுவர் தொடர்பான புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

போருக்குப் பின்னர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மது மற்றும் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளமை குறித்து பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இது சமூகத்தில் பல்வேறு பாதிப்புக்களை உருவாக்கும் என்றும் எச்சரித்தனர்.

இளைஞர்கள் மத்தியில் போதைப்  பொருள் பாவனையை அதிகரித்து அவர்களின் சிந்தனையை மாற்றி தமிழர் கலாசாரங்களை திட்டமிட்டு அழிக்க முயற்சிககள் இடம்பெறுவதாக வடக்கு முதல்வர் சி.வி. விக்கினேஸ்வரன் சுட்டிக் காட்டியிருந்தார். அண்மையில் இடம்பெறும் வன்முறைகளின் பின்னால் இருப்பவர்களும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர் என கூறப்படுகிறது.

இதேவேளை கிளிநொச்சியில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் நிலையில் இதனை தடுத்து நிறுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

கிளிநொச்சி, பாரதிபுரம், இரணைமடு ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களும் சிறுவர்களும் போதைப் பொருள் விற்பனை செய்தமைக்காக அதிகளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸ் நிலைய வட்டாரங்கள் கூறுகின்றன.

இதேவேளை கிளிநொச்சியில் குற்றச் செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் குறித்த பதிவுகளில் அதிகளவானோர்  போதைப் பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விடயத்தில் உரிய தரப்பினர் சரியான நடவடிக்கையை எடுக்கத் தவறும் பட்சத்தில் இது சமூகத்தில் பாரிய பாதக விளைவுகளை உண்டு பண்ணும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

-http://www.athirvu.com

TAGS: