மலையகத் தமிழ் மக்கள் புறம் தள்ளப்படுகிறார்கள் – ஸ்ரீதரன்

sritharan-mpஇலங்கையில் 200 வருடகால வரலாறு கொண்ட மலையகத் தமிழ் மக்களின் நிலவுரிமை, வீட்டுரிமைக்கான கோஷம் தற்போது வலுப்பெற்றுள்ளமைக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயற்பாடுகளே காரணமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் த.மு.கூட்டணியின் இணை உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை மாரத்தென்ன தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 50 குடும்பங்களுக்கான தனிவீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வு ,மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் நிதியொதுக்கீட்டில் 27 ம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் மத்திய மாகாணசபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் உட்பட த.மு.கூட்டணி முக்கியஸ்தர்களும் ட்ரஸட் நிறுவனத்தின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும் அவர் உரையாற்றுகையில் மலையகத் தமிழ் சமூகம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து இந்த வருடத்துடன் 200 வருடங்கள் பூர்த்தியடைகின்றது. நீண்டகாலமாக எமது சமூகம் அரசியல் அநாதைகளாக இருந்தது. எமது சமூகத்திற்கு தலைமை வகித்த தலைவர்களால் எமது சமூகத்துக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற்றுக் கொடுக்காத வரலாறே உள்ளது. நிலவுரிமை, வீட்டுரிமை குறித்து வலுவான கோஷம் நீண்டகாலமாக முன்வைக்கப்படவில்லை.

தற்போதைய நல்லாட்சியில் இந்தக்கோஷங்கள் வலுப்பெற்று நடைமுறைப்படுத்துவதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெருந்தோட்ட பகுதிகளில் லயன் வாழ்க்கை ஒழிக்கப்பட்டு புதிய கிராமங்களை ஏற்படுத்துவதற்காக மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஒன்று புதிதாக ஏற்படுத்தப்பட்டு அந்தப்பொறுப்பு அமைச்சர் திகாம்பரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. இன்று தோட்டங்களில் அனர்த்தங்கள் ஏற்படுகின்ற போது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் நிதியுதவியில் எப்படியாவது வீடொன்று கிடைக்குமென்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை கடந்தகாலங்களில் எமது மக்களிடத்தில் காணப்படவில்லை.

வடக்கு – கிழக்குக்கு வெளியே வாழுகின்ற தமிழ் மக்களின் ஏகத் தலைமையாக தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தோட்டத் தொழிலாளர்களை வீதிக்கு இழுக்காமல் தலைமைகள் களத்தில் இறங்கி போராடுகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களைக் கொடுக்கின்ற அதே வேளை கம்பனிக்கெதிரான போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றது. இன்று மலையகத் தமிழ் மக்கள் நலன்சார்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து செயற்படுவது போல மலையகத் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பிரிவான ரோயல் கல்லூரியின் கட்டிடத்தில் ஒரு பகுதி மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் அங்கு சென்ற மத்திய மாகாண கல்வியமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் ஸ்ரீதரன் பாடசாலை அதிபரோடு கலந்துரையாடி முதலமைச்சருடன் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சனையினை நுவரெலியா கல்விப்பணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: