திருமண வரவேற்பு நாளில் ஆணவக் கொலை செய்யப்பட்ட நாமக்கல் சுமதி… நெஞ்சை உருக்கும் தகவல்கள்!

murderசாதி வெறியின் காரணமாக, நாமக்கல் சுமதியை அவரது மாமனாரும், மாமியாரும் கொலை செய்தது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கோட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். ராயவேலூர் சத்துவாசாரி தெருவை சேர்ந்தவர் சுமதி.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவருக்கும் காதல் மலர, இரு வீட்டு எதிர்ப்பையும் மீறி 2008-ல் திருமணம் செய்து கொண்டு, நாமக்கல் தில்லைபுரம், விநாயகர் கோவில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.

சந்தோஷ், நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். கடந்த 1 மாதத்திற்கு முன்பு சந்தோஷூக்கு ஓசூர் கிளையில் மேலாளர் பதவி உயர்வு கிடைத்திருந்தது. இதனால் வீட்டை ஓசூருக்கு மாற்றும் வேலையும் நடந்து கொண்டிருந்திருக்கிறது.

இந்நிலையில், சந்தோஷின் பெற்றோர்கள் சந்தோஷுக்கும், சுமதிக்கும் 8 வருடங்களுக்கு பிறகு திருமண வரவேற்பு நடத்தப்போவதாக கூறியிருக்கின்றனர்.

இதற்கான வேலையும், திருச்செங்கோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி மதியம், சுமதி தன் வீட்டில் உள்ள படுக்கை அறையில் கழுத்து அறுபட்டு, ரத்த வெள்ளத்தில் மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

இது சாதிக்கான ஆணவத்தில் செய்யப்பட்ட கொலையாக இருக்கலாம் என அப்போது செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று சந்தோஷின் பெற்றோர் பழனிவேலு – மாதேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

இதுகுறித்து, காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘‘சாதி வெறி மற்றும் திருமணம் ஆகியும் 4 ஆண்டுகள் குழந்தைகள் இல்லை என்ற காரணத்தால் சந்தோஷின் அம்மா மாதேஸ்வரியும், அப்பா பழனிவேலும் திட்டம் போட்டுதான் சுமதியை கொன்றிருக்கிறார்கள்.

20-ம் தேதி சந்தோஷ், திருச்செங்கோட்டில் தன் பெற்றோர் வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கும்போது, சந்தோஷின் பெற்றோர் மாதேஸ்வரியும் பழனிவேலுவும், காலை 11 மணிக்கு சுமதி வீட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

தன் மாமனார், மாமியாரை பார்த்ததும் சுமதி டீ போட்டுக் கொடுத்திருக்கிறார். அப்போது, பெட்டின் மீது அமர்ந்திருந்த மாதேஸ்வரி, மருமகளான சுமதியை கூப்பிட்டு தன் அருகே அக்ச் சொல்லி இருக்கிறார். எதுவும் அறியாத சுமதி, மாமியாரின் அருகில் அமர்ந்திருக்கிறார்.

அப்போது, மாமனார் பழனிவேல் பின்புறமாக சென்று துண்டால் வாயை பொத்திக் கொள்ள, மாதேஸ்வரி தன் பையில் வைத்திருந்த கத்தியால் சுமதியின் கழுத்தை அறுத்து கொன்றிருக்கிறார். அதன் பிறகு பழனிவேலை முதலில் போகச் சொல்லி விட்டு, பிறகு மதேஸ்வரி சென்றிருக்கிறார்” என்றனர்.

சுமதி கொலை வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி தாமரைசெல்வன், ‘‘சந்தோஷின் பெற்றோர் தான் இந்த கொலையை செய்திருக்கிறார்கள். தற்போது அவர்களை கைது செய்திருக்கிறோம். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில், முழுமையான தகவல் கிடைத்து விடும்’’ என்றார்.

– Vikatan

TAGS: