உலக இந்துக்களை அவமதித்த யுடிஎம்மிற்கு இந்திய அரசாங்கம் கண்டனம் தெரிவிக்க வேண்டும்

-மு. குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், ஜூன் 23, 2016.

 

IMG-20160330-WA0004 (1)அண்மையில்,  யுடிஎம்  எனப்படும் மலேசிய தொழிநுட்ப பல்கலைக்கழகம் அதன் மாணவர்களுக்கு போதிக்கும் இஸ்லாமிய நாகரீகம் மற்றும் ஆசியா நாகரீகம் என்கின்ற  பாடத்திட்டங்களின் உள்ளடக்கமாக  இஸ்லாம் மதம் இந்தியவிற்கு வந்த பிறகு அங்குள்ள இந்துக்களுக்கு சுத்தத்தை கற்றுக்கொடுத்ததாகவும் ,அதற்கு முன்பு அங்கு வாழ்ந்து வந்த மக்களுக்கு  இந்து மதம் சுத்தத்தை கடைபிடிக்க போதிக்கவில்லை என்று கூறியுள்ளது.

 

இந்து மதத்தை மட்டுமில்லாமல் சீக்கிய மதத்தையும் அப்பாடத்திட்டம் புண்படுத்தியுள்ளது. சீக்கிய மதம் இஸ்லாமிய மதக் கொள்கையை அதிகப்படியாக பின்பற்றியுள்ளது என்றும், அம்மதத்தை தோற்றுவித்தவர் இஸ்லாத்தில் அதிக புலமை இல்லாதவர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்திகள்  ஊடகங்களில் வெளியானது முதல் பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவரகளில்  மலேசியாவிற்கான இந்திய தூதர்  திருமூர்த்தியும் அடங்குவர். இதன் எதிரொலியாக அப்பல்கலைக்கழகம் மன்னிப்புக் கேட்டுகொண்டதுடன் இது குறித்து விசாரணை நடத்தவிருப்பதாக அதன் துணைவேந்தர் கூறியுள்ளார். இது போதாதென்பது எனது கருத்து. இது அரசியல் சம்பந்தப்பட்ட விசயமல்ல. மதம் சம்பந்தப்பட்டது. பல நாடுகளில் வாழுகின்ற இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இந்த பாடத்திட்டம் அமைந்துளதை கவனத்தில் கொள்வது அவசியம்.

 

வல்லரசு நாடான இந்தியா இவ்விசயத்தில் வாளாவிருப்பது ஏற்புடையதல்ல என்று நான் நினைக்கிறேன்.  புதுடில்லியிலுள்ள இந்தியாவிற்கான மலேசிய தூதர் உடனடியாக அழைக்கப்பட்டு இந்திய அரசின் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்படவேண்டும். இது மலேசியாவின் உள்நாட்டு விவகாரம் என்று சொல்லி இதனை கண்டிக்காமல் வாளா இருந்துவிடக்கூடாது

 

மற்ற நாடுகளில் உள்ள இந்து இயக்கங்களும் அந்தந்த நாடுகளில் உள்ள மலேசிய தூதர்களை அழைத்து அவர்களின் கண்டனத்தையும் அதிருப்தியையும் தெரிவிக்க வேண்டும்.

 

5 ஆயிரம்  வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றையுடைய ஒரு மதம் ஆயிரத்து நானூறு ஆண்டுகளான இஸ்லாம் மதத்தில் இருந்து சுத்தத்தை கற்றுக்கொண்டது என்பது ஆதரபூர்வமற்றதும் அறிவிற்கெட்டாத கூற்றாகும். இதை முன்வைத்த விரிவுரையாளர்களின் முட்டாள்தனத்தை இது மெய்பிக்கிறது. உலகின் மூத்த இரண்டு மொழிகளின் பிறப்பிடம் இந்தியா. உலகின் முதல் நாகரீகம் இந்தியாவில்தான் உருவானது என்பதை மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா போன்ற நாகரீகங்கள்  அறிவியல்பூர்வமாக நிரூபிக்கின்றன.

 

நாகரீகம் என்பது  சுத்தத்தினை அடிப்படையாக கொண்டு  உருவாகும் சமுதாயத்தின் உயர்நிலை விரிவாக்கமாகும். சுத்தத்தோடு கூடிய நாகரீகத்தின் உச்சியில் வாழ்ந்தவர்கள் இந்தியர்கள் என்பதான் உண்மை. அப்படிபட்டவர்கள் இஸ்லாம் மதம் இந்தியாவிற்கு வந்த பின்புதான்  சுத்தம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டார்கள் என்று சொல்வது அப்பட்டமான பொய்யின் உச்சகட்டம்.

 

இது போன்ற அறிவற்ற கருத்துக்கள் மேலும் தோன்றாமலிருக்கவும் உலக இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்கவும் இந்து சமயத்தின் புனிதத்தை காக்கும் தார்மீக பொறுப்படைய இந்திய அரசு இதற்கு  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

அக்கண்டனம் எந்த ஒரு நாடும் இனிமேல் இந்து மதம் பற்றிய தவறான தகவல்களை வெளியிட அஞ்சும் வகையில் இருத்தல் வேண்டும். மலேசியா கல்வி திட்டத்தில் புரையோடியிருக்கும் மூளைச்சலவை செய்யும் பாடத்திட்டங்களே இது போன்ற ஒரு தலைபட்சமான, உண்மைக்கு புறம்பான கருத்துக்கள் வெளிவரக் காரணமாக இருக்கின்றன.

 

சுயமாக சிந்திக்க தெரியாத அரசியல் தலைவர்களைத் திருப்திப்படுத்த, பதவி உயர்வு  பெறுவதையே முதன்மை இலக்காகக் கொண்ட கல்வியாளர்கள்  பல்கலைக்கழகங்களை ஆக்கிரமித்து கொண்டு  இருக்கும் வரை இந்நாட்டில் அறிவும் ஆற்றலும் மிக்க மனித மூலதனங்கள் வெளிவருவது என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும் என்பதை இவர்களின் செயல் குறிக்கிறது.

 

“உங்கள் மதம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என்னும் திடமான கொள்கை கொண்ட மதம் இஸ்லாம். இந்த அடிப்படை உண்மையைக்கூட உணராத படிப்பாளிகள் எப்படி ஒரு பல்கலைக் கழகத்தில் பணியாற்றமுடியும்?

 

பல சமயங்கள் பின்பற்றப்படும் மலேசிய நாட்டில் ஒரு சமயத்தை முன்னிலைப்படுத்த வேண்டி இந்து சமயத்தை களங்கப்படுத்த நினைக்கும்  இந்த யுடிஎம்மின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. அந்தப் பாடத்திட்டத்தை தயாரித்தவர்கள், அதனைச் சரி பார்த்தவர்கள், இறுதியாக அது மாணவர்களுக்கு  போதிக்க ஏற்றதுதான் என்று தணிக்கை செய்து அதனைப் பாடமாக அங்கீகரித்தவர்கள் போன்ற அனைத்து தரப்பினரையும் அவரவர் பதவியில் இருந்தது தூக்கியெறிய வேண்டும். அது அவர்களைப் போன்றவர்களுக்குப் பாடமாக அமையும்.