துங்கு அசீஸ்: மகாதிருக்குக் கல்-இதயம், சீனர்கள் வெற்றி பெறுவார்களே என்ற கவலை அவருக்கில்லை

tunku azizமலாய்க்காரர்கள்  தங்களுக்கு  அடித்துக்கொள்ளும்  வேளையில்  சீனர்கள்  வெற்றி  பெறுவார்களே  என்ற  கவலை  டாக்டர்  மகாதிர்  முகமட்டுக்கு  இல்லை  என்று  கடிந்து  கொண்டிருக்கிறார்  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணைய (எம்ஏசிசி)  ஆலோசனை  வாரியத்  தலைவர்  துங்கு  அப்துல்  அசீஸ்  துங்கு  இப்ராகிம்.

ஏனென்றால்,  அவரது  இதயம்  “கல்லாகி  விட்டது”.  சொந்த  நோக்கத்தை  நிறைவேற்றிக்  கொள்ள  எதையும்   செய்யத்   தயாராகி  விட்டார்  என்றவர்  சாடினார்.

மகாதிர்  நடப்பு  ஆட்சிக்குத்  தொல்லை  கொடுத்து  வருவதைச்  சுட்டிக்  காட்டிய  துங்கு  அசீஸ்,  அவர்  “இரண்டாவது  பிரதமர்”போன்று  நடந்து  கொள்கிறார்  என்றார்.

மற்ற  உலகத்   தலைவர்கள்  பணி  முடிந்து  விலகியதும்  குடும்பத்துக்காக  நேரத்தைச்  செலவிடுகிறார்கள்,  விரிவுரை  ஆற்றுகிறார்கள்,  பின்னணியில்  இருந்துகொண்டு  தத்தம்  அரசாங்கங்களுக்கு  உதவுகிறார்கள்.

ஆனால்,  மகாதிர்  அதைச்  செய்வதில்லை.

“(முன்னாள்)  அமெரிக்க  அதிபர்  பில்  கிளிண்டனைப்  பாருங்கள். பணிஓய்வுக்குப்  பின்னர்  பேச்சாளராக  அழைக்கப்படுகிறார்,  எழுதுகிறார்,  இப்போது  அதிபர்  தேர்தலில்  தம்  துணைவியாருக்கு  உதவியாக  இருக்கிறார்.

“நமக்கு  மிக  நெருக்கமான  தெற்கத்தி  அண்டைநாடான  சிங்கப்பூரில்  காலஞ்சென்ற  லீ  குவான்  இயு  மகாதிரைவிட  நீண்ட  காலம்  பிரதமராக  இருந்தவர்….பின்னர்  மூத்த  அமைச்சரானார்.

“அவர்  எப்போதாவது  மகாதிர்போல்  நடந்து  கொண்டதை  மலேசியர்கள்  பார்த்ததுண்டா?”,  என  துங்கு  அசீஸ்  வினவியதாக  உத்துசான்  ஆன்லைன்  கூறிற்று.

“2003-இல்  அவர்  பதவியை  அப்துல்லா  படாவியிடம்  ஒப்படைத்து  இப்போது  13  ஆண்டுகளுக்குப்  பின்னரும்   அவருக்குப்  பின்வந்த  பிரதமர்களுக்குத்  தொந்திரவு  கொடுப்பதை  நிறுத்தவில்லை”,  என்றாரவர்.

மகாதிர்  டிஏபி-யுடனும்   பார்டி  அமனா  நெகாராவுடனும்  ஒத்துழைப்பது  மலாய்க்காரர்களுக்குக்  கேடாக  முடியும்  என   முன்னாள்  தலைமை  நீதிபதி   அப்துல்  ஹமிட்  முகம்மட்   எச்சரிப்பது  பற்றிக்  கருத்துரைத்தபோது   துங்கு  அசீஸ்  இவ்வாறு  கூறினார்.