ஒரு மாதத்திற்குள் ரூ. 1 கோடி தரவேண்டும்… இல்லாவிட்டால் போராட்டம்… ரஜினிக்கு விவசாயிகள் கெடு

rajiniரூ. 1 கோடி தராவிட்டால் ரஜினி வீட்டின் முன் போராட்டம்… தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் அதிரடி சென்னை: முன்னர் அளித்த வாக்குறுதியின்படி, நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ஒரு மாதத்திற்குள் ரூ. ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்காவிட்டால், நடிகர் ரஜினி வீட்டிற்கு முன் போராட்டம் நடத்த இருப்பதாக தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கெடு விதித்துள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பாக கர்நாடகா அரசைக் கண்டித்து, சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடிகர் ரஜினி உண்ணாவிரதம் இருந்தார். பின், கவர்னரை சந்தித்து மனு அளித்த ரஜினி, ‘நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, என்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருகிறேன்’ என அறிவித்தார். ஆனால், 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்னமும் ரஜினி அந்த நிதியைத் தரவில்லை. எனவே, அடுத்த ஒரு மாதத்திற்குள் ரஜினி தனது வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு கூறுகையில், “நதிநீர் இணைப்பு திட்டத்துக்கு, தன்னுடைய சொந்த நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாய் தருவதாக அறிவித்து, 14 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் கூட, ரஜினி இதுவரை அந்த நிதியை மாநில அரசிடமோ, மத்திய அரசிடமோ அளிக்கவில்லை.

இப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசும், முதல்வர் ஜெயலலிதாவும் நதிநீர் இணைப்பு விஷயத்தில் முனைப்பாக செயல்படுகின்றனர். எனவே, ரஜினி அறிவித்தபடி ஒரு கோடி ரூபாய் நிதியை உடனடியாக அளிக்க கோரி, அவரது வீட்டில் மனு கொடுத்துள்ளோம்.

ஒரு மாதத்துக்குள் அவர் நிதி கொடுக்காவிட்டால், அவரது வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம்’ என அவர் தெரிவித்துள்ளார்.

கபாலி படம் விரைவில் ரிலீசாக உள்ள நிலையில், இந்தப் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது, ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.