தமிழகத்தில் அதிகரிக்கும் கூலிப்படையினர் அட்டகாசம்.. சுட்டுத்தள்ள போலீசாருக்கு ரகசிய உத்தரவு?

murderசென்னை: கூலிப்படையினர் அட்டகாசம் அதிகரித்துள்ளதால், அவர்களை சுட்டு வீழ்த்த அரசு ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த அதிமுக ஆட்சியின்போது, உடுமலைப்பேட்டையில் மக்கள் கண் எதிரில் தலித் வாலிபர் சங்கர் கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் இரு பகுதிகளில் வழக்கறிஞர்கள் இருவர் நடு ரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்டனர். ஒசூரில், வழிப்பறி கொள்ளையர்களால், போலீஸ் கான்ஸ்டபிள் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் காலையில், இன்போசிஸ் ஊழியர் சுவாதி அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின்போது கோவையில் குழந்தைகளை பணம் கேட்டு கடத்தி சென்ற கும்பல் 2 குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்றது. அப்போது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

கோவையில் ஒட்டுமொத்த மக்களும் தென் எழுச்சியடைந்து கடையடைப்பு நடத்தி தங்களின் ஆக்ரோஷத்தை அரசுக்கு எதிராக வெளிப்படுத்தினர். இதையடுத்து குழந்தைகளை கொன்றவனை, போலீசார் சுட்டு பொசுக்கினர். தங்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றபோது, குற்றவாளி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

உண்மையோ, இல்லையோ ஆனால், சட்டம்-ஒழுங்கை பேணி காப்பவர் என்று ஜெயலலிதா மீது ஒரு இமேஜ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இமேஜை சுமந்து கொண்டிருக்கும் ஜெயலலிதா இப்போதுள்ள கொந்தளிப்பை அடக்க, கூலிப்படையினரை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்துறை செயலர், டி.ஜி.பி., அனைத்து மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி. உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு, ஜெயலலிதா சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.

இதுகுறித்து காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, அதிக தகவல்களை வெளிப்படுத்த தயங்கினர். இருப்பினும், ஒசூர், சென்னை பக்கம் விரைவில், வேட்டு சத்தம் கேட்கலாம் என்று சிலர் கிசுகிசுத்தனர். மக்கள் கொந்தளிப்பில் இருக்கும்போது மனித உரிமை ஆர்வலர்கள் சத்தம் எடுபடாது என்பதால், துப்பாக்கியை துடைத்து ரெடி செய்து வருகிறார்கள் போலீசார் என்கிறார்கள், விவரம் அறிந்தோர்.

tamil.oneindia.com

TAGS: