“கஃபீர் ஹார்பி” மீது கருத்துரைக்க மசீச தலைவர் மறுத்து விட்டார்

mcanocommentபகாங் மாநில முப்தி அப்துல் ரஹ்மான் ஓஸ்மான் டிஎபி கட்சியை “கஃபீர் ஹார்பி” என்று முத்திரை குத்தி இருப்பது குறித்து கருத்துரைக்க மசீச தலைவர் லியோ தியோங் லாய் மறித்து விட்டார்.

தமது கருத்தை பின்னொரு சமயத்தில் தெரிவிப்பதாக அவர் கோலாலம்பூரில் செய்தியாளர்கள் இரண்டாவது தடவையாக கேட்ட கேள்விக்கு பதிலாக கூறினார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில் முதலில் முப்தி அப்துல் ரஹ்மானின் அறிக்கை குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது லியோ பதில் அளிக்க மறுத்ததோடு அரசியலை தவிர்த்து விட்டு அன்றை நிகழ்ச்சி பற்றி கேள்வி கேட்குமாறு கேட்டுக் கொண்டார்.

முன்னதாக, உத்துசான் மலேசியா அதன் கட்டுரையில் டிஎபி உறுப்பினர்கள் “கஃபீர் ஹார்பி” என்றும் இஸ்லாமிய குற்றவியல் ஹூடுட் சட்டம் அமலாக்கம் செய்யப்படுவதை எதிர்க்கும் அந்த கட்சியுடன் ஒத்துழைப்பது ஒரு மாபெரும் பாவம் என்றும் அந்த முப்தியை மேற்கோள்காட்டி எழுதியிருந்தது.

“கஃபீர் ஹார்பி” என்ற முத்திரை டிஎபிக்கு மட்டுமல்ல, இஸ்லாத்தை எதிர்க்கும் எந்த ஒரு நாத்திகருக்கும் பொருந்தும் என்று அந்த முப்தி பின்னர் விளக்கம் அளித்திருந்தார்.

“கஃபீர் ஹார்பி” என்ற சொல் இஸ்லாத்துடன் போரில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களை குறிப்பிடுகிறது, அவ்வாறானவர்களை கொல்வது அனுமதிக்கப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது.

முப்தியின் கருத்துப்படி பிஎன் கட்சிகளான மசீச மற்றும் மஇகாவும் ஹூடுட் சட்டம் அமலாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆகவே அக்கட்சிகளும் “கஃபீர் ஹார்பி” எனக் கருதப்படும் என்று முப்தியை குறைகூறுவோர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கெராக்கன் கட்சியின் தலைவர் மா சியு சியோங்கும் அவரது எதிர்ப்பை கவனமுடன் தெரிவித்துள்ளார்.