‘காஃபீர் ஹர்பி’சர்ச்சை கவனத்தைத் திசைதிருப்பும் மலிவான அரசியல் உத்தி

harbiஹுடுட்டை  எதிர்க்கும்  டிஏபி-யையும்  மற்றவர்களையும்  காஃபீர் ஹர்பி  என்று பகாங்  முப்தி  பிரகடனம்  செய்ததும்  அதைத் தொடர்ந்து   எழுந்துள்ள  சர்ச்சையும்  நாட்டின்  கவனத்தைத்  திசைதிருப்பும்  ஒரு  மலிவான  அரசியல்  தந்திரம்  என  பிகேஆர்  தலைவர்  ஒருவர்  வருணித்துள்ளார்.

“அம்னோ  பரிதவிக்கிறது,  மலேசிய   மக்களைக்  கவரவும்  அவர்களின்  ஆதரவைப்  பெறவும்  அதற்கு  வழிவகை  தெரியவில்லை   அதனால்தான்  இப்படிப்பட்ட  ஒரு  கருத்தை  ஒரு  மலிவான  அரசியல்  பிரச்சார  நாடகமாகக்  கையில்  எடுத்துக்  கொண்டிருக்கிறது”,  என்று  பிகேஆர்  செனட்டர்  முகம்மட் நூர்   மனுட்டி  கூறினார்.

“ முப்தி  சொன்ன  ஒன்றை  ஊதிப்  பெரிதாக்கி  அம்னோ   முஸ்லிம்களையும்  மற்றவர்களையும்  குழப்பி  வருவது  தெளிவு”.

மக்கள்  உண்மையான  பிரச்னைகள்-  1எம்டிபி  விவகாரம்,  பொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி), ரிம2.6பில்லியன்  ஊழல்,  உயர்ந்து   வரும்  வாழ்க்கைச்  செலவினம்  போன்றவை,  பற்றி  விவாதிப்பதைத்  தவிர்க்கவும்   அவர்களின்  கவனத்தைத்  திசைதிருப்பவும்  அம்னோ  இப்படிப்பட்ட  சந்தர்ப்பங்களைப்  பயன்படுத்திக்  கொள்கிறது  என்றாரவர்.