ஹிண்ட்ராப் ஒப்பந்தம் என்னானது? – கா. ஆறுமுகம்

hindrafmou waythaபிரிட்டீஷ் அரசின் மீது ஒரு மலேசிய இந்தியருக்கு அமெரிக்க டாலர் 20 லட்சம் என்ற வகையில் 4 டிரிலியன் (4,000,000,000,000) அமெரிக்க டாலருக்கு நஷ்டஈடு கோரி 2007-ஆம் ஆண்டின் சுதந்திர தினத்தன்று ஹிண்ட்ராப் அமைப்பின் வழக்கறிஞர்கள் ஒரு வழக்கைத்தொடுத்தனர்.

பிரிட்டீஷ் ஆட் சியாளர்கள்  நமது நாட்டுக்கு விடுதலை கொடுத்து விட்டு செல்லும் போது இனவாத அரசியலை அமைத்ததோடு அதில் பெரும்பான்மை இனதிற்கான ஆதிக்கச்சூழலை உண்டாக்கியதுதான் நமது ஏழ்மைக்கும் நாம் இரண்டாம் தர சமூகமாக வாழ்வதற்கும் காரணம் என்ற வகையில் ஒரு வரலாற்றுக்கடனை உருவாக்கி அதை நஷ்ட ஈடாக கோரப்பட்டதுதான் அந்த வழக்கின் அம்சமாகும்.

அதன் பின்னணியில் 2007 நவம்பர் 25 இல் ஹிண்ராப் போராட்டம் வெடித்தது. இது மலேசிய அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை உருவாக்கிதை நாம் அறிவோம்.

ஹிண்ட்ராப் பேரணி முடிந்த அடுத்த நாளே அந்த 4 டிரிலியன் வழக்கு சம்பந்தமாக  லண்டன் பயணமான வேதமூர்த்தி 56 மாதகாலம் லண்டனில் தஞ்சம் புகுந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்த வழக்கு சார்பாக பல நுண்ணிய பணிகளையும் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

hindraf mou1அதன் பிறகு, 2013-இல் நடைபெற்ற 13வது பொது தேர்தலின் போது வேதமூர்த்தியின் தலைமையில் செயல்பட்ட ஹிண்ட்ராப்  அமைப்பு தேசிய முன்னணியுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் சாரம் ஹிண்ட்ராப் முன்னணிக்கு ஆதரவாக  இந்திய வாக்காளர்களிடன் பிரச்சாரம் செய்யும். அதற்கு பிரதிபலனாக தேசிய முன்னணி ஆட்சியை கைப்பற்றினால் அது வறுமையில் உள்ள இந்தியர்களுக்கு பல மறுமலர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும்.

2013  ஏப்ரல் 18ஆம் தேதி ஹிண்ட்ராப் – தேசிய முண்ணனி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் வழி தேசிய முன்னணி அரசாங்கம் சுமார் ரிம 4.5 பில்லியன் (4,500,000,000) மதிப்புள்ள விசேசமான முதலீட்டை வறுமையில் வாழும் இந்தியர்களுக்காக ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டும்.

மலேசியாவின் கட்சி அரசியல் சார்பற்ற வகையில் இந்தியர்களின் முதலாவது துணை அமைச்சராக 2013 மே 16-இல் பதவியேற்ற  பொ. வேதமூர்த்தி 2014  பிப்ரவரி 8-இல் தனது பதவியைத் துறந்தார்.  சுமார் 268 நாட்கள் நீடித்த அந்தப் பதவி காலத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் ஹிண்ட்ராப் அமைப்புடன் செய்த ஒப்பந்தத்தை நடைமுறையாக்கத் தவறி விட்டதாக வேதமூர்த்தி கூறியிருந்தார்.

அதோடு பதவி விலகிய வேதமூர்த்தி ஹிண்ட்ராப்-தேசிய முன்னணி கூட்டு ஒப்பந்தத்தைக் காப்பாற்ற தவறிய பிரதமர் நஜிப் பதவி விலக வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஹிண்ட்ராப்-தேசிய முன்னணி கூட்டு ஒப்பந்தத்தை அரசாங்கம் மீறியுள்ளது. சுமார் 160,000 இந்திய குடும்பங்கள் கீழ்மட்டத்தில் உள்ள 40 சதவிகித மக்கள் தொகையில் உள்ளனர். இவர்களின் சராசரி குடும்ப மாத வருமானம் ரிம 2,672 ஆகும் (2014 தகவல்).   இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி  ரிம. 3000 க்கு குறைவாக மாத வருமானம் பெருபவர்களின் வருமானத்தை இன்னும் சில ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்த்த வேண்டும்.

இதுவரையில் இதற்கான முயற்சிகள் எதுவும் கொள்கை அளவில் மேற்கொள்ளப்பட வில்லை. ஒப்பந்தம் மீறப்பட்டதால் ஹிண்ட்ராப் ஒப்பந்தத்தை நம்பி தேசிய முன்னணிக்கு வாக்களித்த ஏழை இந்தியர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

waythaவேதமூர்த்தி பதவி விலகி இரண்டாண்டுகள் ஆகியும் இன்னமும் அது சார்பாக எந்த நடவடிக்கையையும்  எடுக்காமல்  இருப்பது வியப்பளிக்கிறது. மக்களை அரசாங்கம் ஏமாற்றி வருகிறது என்ற அடிப்படையில் போராடும் ஹிண்ட்ராப்,  அதே கொள்கையுடன் இந்த ஏமாற்றப்பட்ட மக்களுக்காக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், அரசாங்கத்தின் மீது வழக்கு தொடுக்க வேண்டுமென்றால் அதற்கான காலக்கட்டம் மூன்று ஆண்டுகள் ஆகும். அவர் பதவி விலகி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதியோடு மூன்றாண்டுகள் முடிவடைகிறது. அதோடு இந்த வழக்குத் தொடுக்கும் வாய்ப்பு நழுவி விடும்.

சமத்துவம் அல்லது அனைவரும் சமமே என்பது நடைமுறையில் மலேசியாவில் கிடையாது. அதனால்தான் உரிமைகள் அடிப்டையில்தான்  ஹிண்ட்ராப் போராட்டம் உருவானது. ஆனால், சமத்துவம் இல்லாவிட்டாலும் மாற்று வழியாக கொள்கை மாற்றம் கோரும் ஓர் ஒப்பந்தத்தை ஹிண்ட்ராப் மேற்கொண்டது ஒரு தோல்வி கண்ட வியூகமாகும். மஇகா – அதைத்தான் காலம்காலமாக செய்து வந்தது. அம்னோவுக்கு அடிபணிந்து அடங்கிக்கிடக்கிறது.

ஹிண்ட்ராப் போராட்டம், மஇகா போன்றதல்ல. அதற்கும் அப்பாற்பட்டது என்பதை நிலைநிறுத்த ஹிண்ட்ராப் இயக்கம் முன்வரவேண்டும்.