குவான் எங்-கினால் 14வது பொதுத் தேர்தலில் பக்கத்தான் வெற்றி வாய்ப்பு மங்கிப்போனது

slimபினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்  கைது  செய்யப்பட்டுக்  குற்றம்  சாட்டப்பட்டிருப்பது   டிஏபி-இல் ஒரு  நெருக்கடியை  உருவாக்குவதோடு   அடுத்த  பொதுத்  தேர்தலில்  எதிரணியின்  வெற்றி  வாய்ப்பையும்   கெடுக்கப்  போகிறது   என்கிறார்கள்  அரசியல்  ஆய்வாளர்கள்.

ஏனென்றால்,  டிஏபி  தலைமைச்  செயலாளர்  குற்றவாளி  என்று  தீர்ப்பளிக்கப்பட்டு முதலமைச்சர்  பதவியையும்  சட்டமன்ற  உறுப்பினர்  பதவியையும்  இழக்க  நேர்ந்தால்  அடுத்த  பொதுத்  தேர்தலில்  அவரால்  கட்சிக்குத்  தலைமையேற்று  தேர்தலில்  போட்டியிட  இயலாது  என்றவர்கள்  மலேசியாகினியிடம்  தெரிவித்தனர்.

ஏற்கனவே,  எதிரணி பக்கத்தான்  ரக்யாட்  கடந்த  ஆண்டு  உடைந்ததாலும்  அன்வார்  இப்ராகிம்  குற்றவாளிக்கப்பட்டு  சிறைக்கு அனுப்பப்பட்டதாலும் புண்பட்டுக்  கிடக்கிறது..  இந்நிலையில்  வெந்த  புண்ணில்  வேல்  பாய்ச்சுவது  போன்று  லிம்  சிறைக்கு  அனுப்பப்படும்    ஒரு  சூழலும்  உருவாகி  வருகிறது  என்றவர்கள்  எச்சரித்தனர்.

“லிம்  ஐந்தாண்டுகளுக்குத்  தேர்தலில்  போட்டிபோட  முடியாமல்  போனால்  அது  அவரையும்  கட்சியையும்  பாதிக்கும்.  ஏனென்றால்  அவரால்  அரசாங்கத்தில்  அல்லது  கட்சியில்  பதவி   வகிக்க  முடியாது”,  என  அரசியல்  விமர்சகர்  தாங்  ஆ  சாய்  கூறினார்.

அதன்  விளைவாக  டிஏபி  தலைமைத்துவத்தில்   மாற்றம்  செய்ய  வேண்டியிருக்கும். அது  அவ்வளவு  எளிதாக  இராது.  ஏனென்றால்,  லிம்  மக்களையும்  கட்சியினரையும்  ஒருங்கே  கவரக்கூடிய  கவர்ச்சித்  தலைவராக  விளங்கியவர்.

“ஒரு  தலைவர்  இல்லை  என்கிறபோதுதான்  அவரது  இழப்பை   உணர்வோம். அன்வாரைப்  போலத்தான்.  அவர்  சிறைக்குச்  சென்ற  பின்னர்தானே  அவர்  இருந்திருந்தால்  எதிரணி  ஒற்றுமையைப்  பாதுகாத்திருப்பார்  என்பதை   உணர்ந்தோம்”,  என்றாரவர்.

ஆனாலும் எதிரணிக்கு  முழு  இழப்பு  என்றும்  சொல்லிவிட  முடியாது.  இவ்வழக்கே,  சட்டத்துறைத்  தலைவர் அலுவலகமும்  மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையமும்   நடந்து  கொண்ட  விதத்தை  மக்கள்  மதிப்பிட  ஒரு  வாய்ப்பாகவும்  அமையும்  என்றும்  அவர்  சொன்னார்.

“ரிம2.6 பில்லியன்  விவகாரத்தில்  அதிகாரிகள்  எதுவும்  செய்யவில்லை   ஆனால் இந்த  வழக்கில்  மட்டும்  விரைந்து  செயல்பட்டது  ஏன்  என்ற  சந்தேகம்  மக்களுக்கு  வரலாம்”,  என்றார்.

இது,  அடுத்த  பொதுத்  தேர்தலில்  எதிரணிக்கு  அனுதாப  வாக்குகளைப்  பெற்றுத் தரக்கூடும்  என்றார்.

எவ்வாறாயினும்  பினாங்கில்  பக்கத்தான்  ஹராபானே  ஆட்சியைத்  தக்க  வைத்துக்  கொள்ளக்கூடும்  என்று   தாங்  குறிப்பிட்டார்.  ஆனால்,  தேசிய  அளவில்  அவருக்கு  அந்த  நம்பிக்கை  இல்லை.  ஏனென்றால், அங்கு  பல்முனைப் போட்டி  நிலவும்  என்கிறார்.

இதனிடையே,  இன்னொரு  அரசியல்  ஆய்வாளரான   பூன்  விங்  கியோங், பிஎன்   அடுத்த   பொதுத்  தேர்தலுக்கு   முன்னதாக  எதிரணியைப்  போட்டுத்தாக்க மேலும்  ஓர்  ஆயுதமாக  லிம்மின்  வழக்கு  வந்து  வாய்த்துள்ளது  என்றார்.

“பிஎன்  இந்த  வழக்கை  வைத்து  டிஏபி  மற்றும்  லிம்மின்  பெயரைக்  கெடுக்க  முனையும். டிஏபி  1எம்டிபி  ஊழல்  பற்றியே  பேசுகிறதல்லவா. இப்போது  பிஎன் இதைப்  பயன்படுத்திக்  கொள்ளும்”, என்றார்.

லிம்மீதான  ஊழல்  குற்றச்சாட்டை  ஊதிப்  பெரிதாக்கி  1எம்டிபி  விவகாரத்தையே  மற்றகடிக்கவும்  பிஎன்  முயலலாம்.
இந்த  வழக்கு  எதிரணிக்குக்  களங்கம்  கற்பிக்க  பிஎன்  வகுத்துள்ள  வியூகத்தில்  ஒரு  பகுதி.  இது    யதார்த்தமாக  நடந்த  ஒன்றல்ல.

லிம்முக்கு  முன்பே  அன்வார்மீது  குற்றம்  சாட்டப்பட்டு  சிறைக்கு  அனுப்பப்பட்டதன்  விளைவாக  பக்கத்தான்  ரக்யாட்  உடைந்தது  நினைவிருக்கலாம்.

இது,  நஜிப்  தம்  எதிரிகளத்  தனித்தனியாகவும்  விரைவாகவும்  ஒழித்துக்கட்ட  விரும்புகிறார்  என்பதைக்  காண்பிக்கிறது.

“சரவாக்  மாநிலத்  தேர்தல்களிலும்  இரட்டை  இடைத்  தேர்தல்களிலும்  கிடைத்த  வெற்றிகளைத்  தொடர்ந்து  தமக்குச்  சாதகமான  சூழல்  நிலவுவதை  உணர்ந்து   எதிரணியை  எதிர்கொள்ள அவர்  முடிவு  செய்து  விட்டார்”,  என்றாரவர்.

இன்னொரு  கல்வியாளர்,  லிம்  இல்லாத  டிஏபி  பிகேஆர்  போல்  ஆகிவிடும்  என்று  எச்சரிக்கிறார். அன்வார்  சிறை  சென்றதும்  பிகேஆரில்  மூண்டதுபோன்ற  சர்ச்சைகள்  டிஏபி-இலும்  மூளலாம்  என்று  மலேசிய  பேராசிரியர்  மன்ற  அரசியல்,  பாதுகாப்பு,  அனைத்துலக  விவகாரப்  பிரிவுத்  தலைவர்  முகம்மட்  முஸ்டபா  இஷாக்  கூறினார்.

டிஏபி  நிலைமையைக்  கட்டுக்குள்  வைத்துக்கொள்ளத்  தவறினால்   பிகேஆரில்  ஏற்பட்ட  நிலைதான்  ஏற்படும்.

“அன்வார்  இல்லாத  பிகேஆர்  பலவீனமடைந்துள்ளது.

“டிஏபியும்  பினாங்கு  மாநில  அரசும்  மாநில  நிர்வாகமும்  கட்சிப்  பணிகளும்  சீராக  நடப்பதை  உறுதிப்படுத்த  வேண்ம்”,  என்றாரவர்.

லிம்,  வழக்கில்  முழுக்  கவனம்  செலுத்த  விடுப்பில்  செல்வதுகூட  நல்லது  என்று  அவர்  ஆலோசனை  கூறினார்.  நீதிமன்ற  வழக்கையும்  மாநில  அரசுப்  பணிகளையும்  போட்டு  உழப்பிக்  கொண்டிருக்கக்  கூடாது.

இதனால்  அவர்மீதுள்ள  நம்பிக்கை  உயரும்.

ஒருங்கிணப்பு  இல்லை   என்பதுதான்  எதிரணியின்  பிரச்னை  என்று  குறிப்பிட்ட  முஸ்டபா,  லிம்மின்  வழக்கை  “அரசியல்  நோக்கம்  கொண்டது”  என்று  சொல்வது  நியாயமல்ல  என்றார்.