புதிய தளத்துக்குள் நுழைகிறதா தமிழ் கூட்டமைப்பு!

tnamythiriதடம் மாறுகிறதா தமிழ் தேசியம் என்ற தலைப்பில் மன்னாரில் கடந்த வாரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியமான தலைவர்கள் பகிரங்கமாக குற்றச்சாட்டுகள்ஹ பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தக் கருத்தரங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சூழல் மற்றும் இங்கு சுமத்தப்பட்டிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகள் அவற்றுக்கு கூட்டமைப்பின் தலைவர்கள் அளித்திருந்த பதில்கள் எல்லாமே முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஏனென்றால் இதுபோன்ற ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் தமிழர் அரசியல் அரங்கில் நடப்பது அரிது. சில காலத்துக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் இதுபோன்ற ஒரு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. ஆனால் அது தொடரவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை ஒருங்கிணைத்து சமூக, சமயத் தலைவர்களையும், பொது பிரதிநிதிகளையும் ஒரே அரங்கிற்குள் கொண்டுவந்து நடத்தப்பட்டிருக்கின்ற கலந்துரையாடல் இது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறித்தும் அதன் செயற்பாடுகள் குறித்தும் மக்களுக்கு இருக்கின்ற சந்தேகங்கள், கேள்விகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய அது போன்ற கருத்தரங்குகள் பரவலாக நடத்தப்படுவது ஆரோக்கியமான ஜனநாயக சூழல் ஒன்றை ஏற்படுத்தும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது இன்று எல்லா விமர்சனங்களுக்கும் அப்பால் தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரதிநிதி என்ற நிலையைப் பெற்றிருப்பதை எவரும் மறக்க முடியாது.

கூட்டமைப்பின் செயற்பாடுகள் மீது அதிருப்தியும் விமர்சனங்களும் முன்வைப்பவர்கள் கூட தேர்தல்களின் போது மீண்டும் கூட்டமைப்பை ஆதரிப்பது என்பது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை வழிப்படுத்துவதற்கும் வழிநடத்துவதற்கும் இதுபோன்ற கலந்துரையாடல்கள் முக்கியமானவை.

மக்களின் கருத்துக்கள் என்ன விமர்சனங்கள் என்ன என்பதை வெளிப்படையாக கூறுவதற்கும் தலைவர்கள் செவிமடுப்பதற்குமான வாய்ப்புகளை இவை வழங்குவனவாக இருக்கும்.

மன்னாரில் நடந்த கருத்தரங்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக பொது வெளியில் இருக்கின்ற விமர்சனங்கள் நேரடியாகவே முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

சர்வதேச அரங்கில் தமிழர் பிரச்சினையை சரியாகக் கொண்டு செல்வதற்கு கூட்டமைப்புத் தலைவர்கள் தவறிவிட்டனர்

கூட்டமைப்புக்குள் இருக்கும் முரண்பாடுகள், வவுனியா பொருளாதார மத்திய நிலைய விவகாரத்தில் கூட்டமைப்புக்குள் இருக்கும் இரண்டுபட்ட நிலை, வடக்கு மாகாண சபையை நிர்வகிப்பதில் உள்ள குறைபாடுகள் என்பன முக்கியமாக குற்றச்சாட்டுகளாக கூட்டமைப்பு மீது முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டுகள் பலவற்றையும், பதிலளித்து உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா போன்றவர்கள் நிராகரித்திருக்கிறார்கள்ஹ.

இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாமே சரியானவை அல்லது தவறானவை என்ற நிலைக்குச் செல்வதற்கு முன்னதாக கூட்டமைப்பை வழிநடத்திச் செல்வதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதாக இருந்தன என்றே கூற வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது தொடர்ச்சியாக பொது வெளியில் இருக்கின்ற விமர்சனங்களை இரண்டு வகைப்படுத்தலாம்.

ஒன்று, கூட்டமைப்பின் மீது காழ்ப்பையும், வன்மத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே மேற்கொள்ளப்படுகின்ற விமர்சனங்கள்.

இத்தகைய விமர்சனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் போட்டியாளர்களும், முகநூல் கருத்துப் பகிர்வாளர்களும் தான் அதிகளவில் முன்வைக்கின்றனர்.

இத்தகைய விமர்சனங்களில் பெரும்பாலும் அரசியல் சாகரிகம் பின்பற்றப்படுவதில்லை தனிமனித ஒழுக்கத்தையோ அரசியல் பண்பாடடையோ கொண்டிருப்பதில்லை.

பொது வெளியில் எவ்வாறு விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்ற அடிப்படையான அறிவு கூடப் பலரிடம் இருப்பதில்லை.

இத்தகைய விமர்சனங்களை கூட்டமைப்பு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கருதுவதற்கில்லை.

ஆனால் இரண்டாவது வகை விமர்சனங்கள் முக்கியமானவை. கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

இந்தவகை விமர்சனங்களின் பின்னால் ஆக்கபூர்வமான விடயங்கள் இருக்கும் கூட்டமைப்பு சரியான வழியில் செல்ல வேண்டும். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

இத்தகைய விமர்சனங்கள் உதாசீனம் செய்யப்பட்டால் அது பொது வெளியில் கூட்டமைப்புக்கான ஆதரவுத் தளத்தில் சேதத்தை விளைவிக்கும் என்பதுடன், விமர்சனங்களுக்கு அப்பால் செயலாற்றுவதற்கான சூழலை உருவாக்கிக் கொள்ள முடியாத நிலையையும் ஏற்படுத்தும்.

இறுதியில் இது மக்களிடமிருந்து அந்நியப்பட்டு அவர்களின் ஆதரவையும் நம்பிக்கையையும் இழக்கின்ற நிலை வரைக்கும் கொண்டு செல்லும்.

ஆக்கபூர்வமான விமர்சனங்களை செவிமடுக்கத்தக்க அரசியல் கலாசாரம் கொண்ட ஒரு நிலைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னைத் தயார்படுத்த ஆரம்பித்திருக்கிறது என்பதற்கு மன்னாரில் நடந்த கருத்தரங்கு முக்கிய சான்று.

இந்தக் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் அவற்றுக்கான பதில்களில் உள்ள நியாயங்கள் சரியா தவறா என்று விவாதிக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் இது அவரவர் நிலையில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள். இவை எல்லாவற்றையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றில்லை.

இத்தகைய பல்வேறு கருத்துக்களில் இருந்து பொது நிலையில் எவ்வாறான கருத்துக்கள் உலாவுகின்றன எத்தகைய மாற்றங்கள் மக்களால் விரும்பப்படுகின்றன என்பனவற்றைத் தெரிந்து கொள்ளும் வாயப்புகளை இதுபோன்ற கருத்தரங்குள், கூட்டமைப்புத் தலைமைக்கு கொடுக்கக் கூடும்.

கூட்டமைப்புக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கின்ற கருத்துக்களை மக்கள் அறிந்து கொள்வதற்கும் அதுபற்றிப் பொது அரங்கில் உரையாடப்படுவதற்கும் இதுபோன்ற களங்கள் தான் வாய்பபை ஏற்படுத்திக் கொடுக்கும்.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தன்னை ஒரு முழுமையான ஜனநாயக வாதி என்று அவ்வப்போது கூறிவந்திருக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் எப்போதும் இருந்து வரும் முரண்பாடுகள் விமர்சனங்களையெல்லாம் உட்கட்சி ஜனநாயகம் என்று அவர் குறிப்பிடுவது வழக்கம்.

ஆனாலும் இதுபோன்ற பகிரங்க விவாதங்களை எதிர்கொள்வதற்கு அவர் இதற்கு முன்னர் தயாராக இருந்ததில்லை அல்லது அத்தகைய களங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதில்லை.

இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், பொது அரங்கில் விவாதங்களுக்குத் தயாராகியிருப்பது முக்கியமான மாற்றம் தான்.

கடந்த ஆண்டு இறுதியில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட போது அது கூட்டமைப்பின் அரசியல் போட்டியாளராக உருவெடுக்கும் என்றே கருதப்பட்டது. அதற்கான முயற்சிகளும் தான் முன்னெடுக்கப்பட்டன.

அது கூட்டமைப்புக்கு கடுமையான அழுத்தங்களையும் கொடுத்திருந்தது. ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகள் கால ஓட்டத்தில் குறைந்து போயிருக்கின்றன.

இந்தச் சூழலில் தான் ஆரோக்கியமான அரசியல் கலந்துரையாடல்களை நடத்தும் ஒரு பதிய புறச்சூழலுக்குள் கூட்டமைப்பு காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்த முதல் கலந்துரையாடலில் பகிரப்பட்ட கருத்துக்களும், எல்லாமே சரியானவை என்று கருதக்கூடியவையன்று.

ஆனால் எல்லாவற்றையும் தொகுத்து கூட்டமைப்பு செல்லுகின்ற வழி சரியானதா என்று ஒரு மீளாய்வை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை கூட்டமைப்புத் தலைமைக்குப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதும், இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொளவதும் கூட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா, அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகளில் உள்ள பெரிய கட்சிகள் தமக்கென்று இதுபோன்ற குழாம்கள், கலந்துரையாடல் அமைப்புகளை கொண்டிருக்கின்றன.

அவை தேர்தல் நலன்களுக்கு அப்பாற்பட்டு, தேச நலன் மற்றும் தேசத்தின் அரசியல் கொள்கைகளைத் தீர்மானிக்கும் அளவுக்கு செல்வாக்கைச் செலுத்துகின்றன.

அத்தகையதொரு நிலைக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பிரவேசிக்குமானால், தமிழர் பிரச்சினையைச் சரியான தளத்துக்குள் கொண்டு செல்வதற்கான வழிகளும் கூட்டமைப்புக்குக் கிடைக்கக்கூடும்.

-http://www.tamilwin.com

TAGS: