கபாலியில் பாட்டெழுத வாய்ப்புத் தராததால் வைரமுத்துவுக்கு வந்த கடுப்பு இது!- கலைப்புலி தாணு பதிலடி

thanuபாட்டெழுத வாய்ப்புத் தராததாலேயே தான் தயாரித்த ரஜினியின் கபாலியைப் பற்றி மோசமாக விமர்சித்துள்ளார் வைரமுத்து என்று கலைப்புலி தாணு பதிலடி கொடுத்துள்ளார்.

கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகியுள்ள கபாலி பல்வேறு விமர்சனங்களைத் தாண்டி மக்களின் அமோக வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது.

இந்தப் படம் குறித்து சாதகமான விமர்சனங்கள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று அரிமா சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, கபாலி குறித்து கிண்டலடித்ததோடு, அந்தப் படத்தை தோல்விப் படம் என்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.  நிகழ்ச்சியில் அவர் பேசியது:

கபாலிக்கு முன்னாடி கோட் போட்டது நீங்கதான்னு நினைக்கிறேன். உங்களைப் பாரத்துதான் ரஜினிக்கு கோட் போட்டு ரஞ்சித் கபாலியை எடுத்துட்டாரு. நான் புரிந்து கொள்கிறேன் ஒவ்வொருவரையும், இந்தக் கூட்டத்தை, வந்திருக்கிற பெருமக்களை, அரசியலை, விஞ்ஞானத்தை, இல்லறத்தை, வாழ்வியலை, ஆணை, பெண்ணை, தொலைந்து போன விமானத்தை, கபாலியின் தோல்வியை (இரு முறை)…. -இப்படிப் போகிறது அவரது பேச்சு. வைரமுத்துவின் வீடியோ பேச்சு சமூக வலைத் தளங்களில் வைரவலாகப் பரவியது.

இதைத் தொடர்ந்து வைரமுதத்துவைக் கண்டித்து பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக பல பத்திரிகையாளர்களே வைரமுத்துவைக் கடுமையாக விமர்சித்திருந்தனர். இந்த நிலையில் வைரமுத்துவின் விமர்சனம் குறித்து கபாலி தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த தாணு, வைரமுத்துவுக்கு ஏன் இத்தனை கோபம் என்பது புரிகிறது.

அவருக்கு பாட்டெழுத வாய்ப்பளித்திருந்தால் ஓஹோ என்று புகழ்ந்திருப்பார். ஆனால் வாய்ப்புத் தராததால் வாய்க்கு வந்தபடி பேசுகிறார். விஜய்யை வைத்து சச்சின் படத்தை நான் எடுத்தபோது, அஜீத் படத்தில் எவனா இருந்தா எனக்கென்ன என்று பாட்டெழுதி, விஜய் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதித்துவிட்டேன். எனவே சச்சினில் ஒரு வாய்ப்புக் கொடுங்கள். விஜய் ரசிகர்களை குளிர்விக்க விரும்புகிறேன் என்று கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்புக் கொடுக்க முடியாத நிலை. அடுத்து துப்பாக்கி தயாரித்துக் கொண்டிருந்த போதும் கேட்டார். முடியவில்லை. கபாலியில் வாய்ப்புத் தர முடியாத சூழல்.

இதெல்லாம் புரியாமல் அவர் விஷம் கக்கி இருக்கிறார். கபாலியை தோல்விப் படம் எனும் இவர்தான், அந்தப் படத்துக்கு முதல் நாளில் 4000 டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றார். ஒரு நயா பைசா நான் வாங்கவில்லை… யார் என்ன சொன்னாலும் கபாலி வெற்றியைத் தடுக்க முடிந்ததா.. இன்று அது மாபெரும் வெற்றிப் படம். மக்கள் தந்துள்ள வரவேற்பு மலைக்க வைக்கிறது. இந்திய திரையுலக வரலாற்றில் இதுவரை பார்த்திராத வெற்றி இது, என்றார்.

tamil.filmibeat.com