காணமல் போனவர்கள் எங்கே? செஞ்சிலுவை சங்கம் வலியுறுத்தல்

missingஇலங்கையில் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தின் போது காணாமல் போனதாக கூறப்படும் 16000 தமிழர்களின் நிலைமை என்ன?

இது தொடர்பிலான விபரங்களை இலங்கை அரசாங்கம் விரைவில் வெளியிட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.சி.ஆர்.சி) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் கடந்த 14 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையினை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கொழும்பில் வெளியிட்டுள்ளது.

34 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறுதிக்கட்ட யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன.

எனினும், இறுதிகட்ட யுத்தத்தில் காணமல் போனதாக கூறப்படும் 16,000 பேர் குறித்து இதுவரையில் தகவல் எதுவும் இல்லை.

அவர்களது நிலை என்ன ஆனது? தற்போது எங்குள்ளனர்? அவர்கள் சந்திக்கும் பொருளாதார, சட்ட, நிர்வாக பிரச்னைகள் உள்ளிட்ட விவரங்களை அவர்களின் குடும்பத்தினர் அறிய விரும்புகின்றனர்.

எனவே, காணாமல் போனோரின் நிலை குறித்த முழு விவரங்களையும் இலங்கை அரசாங்கம் வெளியிட வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, 1989ஆம் ஆண்டு இலங்கையில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கிளை ஆரம்பிக்கப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் நபர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்து வருகிறது.

உலகில் அதிகளவில் காணாமல் போன நபர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் காணப்படுகின்றது.

கடந்த 1994ஆம் ஆண்டு மாத்திரம் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு 65 ஆயிரம் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன.

குறித்த முறைப்பாடுகளில் விடுதலைப்புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல் போனோவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: