அமெரிக்க கூட்டுப்படை அட்டூழியம்: ஐ.நா.விடம் முறையிடும் சிரியா

aleppoஅமெரிக்க கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து சிரியா ஐ.நா.விடம் முறையிட்டுள்ளது.

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியாவின் அலெப்போ நகரின் அருகாமையில் அமைந்துள்ளது மான்பிஜ் நகரம்.

இங்கு ஐ.எஸ் ஆதிக்கம் அதிகமிருப்பதாக கூறி அமெரிக்க கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல் தொடுத்துள்ளன.

இதில் அப்பாவி பொதுமக்கள் 45 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் சிரியா அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள சிரியா தமது எதிர்ப்பை இரண்டு கடிதங்கள் மூலம் ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளது.

அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதல் நடவடிக்கையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும், அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான அட்டூழியத்தை நிறுத்த வேண்டும் எனவும் சிரியா கேட்டுக்கொண்டுள்ளது.

சிரியா அரசுடன் இணைந்து சர்வதேச சட்டத்திட்டத்திற்கு உட்பட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளாதவரை கூட்டுப்படைகளின் நடவடிக்கைகள் பின்னடைவை மட்டுமே சந்திக்கும் என ஐ.நா.மன்றத்திற்கு எழுதிய கடிதத்தில் சிரியா குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா, பலியானவர்களின் எண்ணிக்கையை வெளியிட மறுத்துள்ளது.

மட்டுமின்றி ஐ.எஸ் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் மட்டுமே தாக்குதல் மேற்கொண்டதாகவும் இதனால் மான்பிஜ் நகரில் இருந்து பெருவாரியான தீவிரவாதிகள் வெளியேறி வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலால் கடந்த 19 ஆம் திகதி கொல்லப்பட்ட 73 அப்பாவிகள் குறித்து நீதி விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com