ஐஜிபி-க்கு எதிராக போலீஸ் புகார் செய்யலாமா என ரபிசி ஆலோசிக்கிறார்

rafizi1எம்டிபி  ஊழலுடன்   தொடர்புள்ள    ஜோ  லோ,  உள்பட    மற்ற  தனிப்பட்டவர்கள்மீது     எத்தனையோ  புகார்கள்   செய்யப்பட்டும்   நடவடிக்கை   எடுக்காத   இன்ஸ்பெக்டர்- ஜெனரல்  அப்  போலீஸ்,  காலிட்  அபு  பக்கார்மீது    போலீஸ்  புகார்  செய்ய   திட்டமிடுகிறார்   பிகேஆர்   உதவித்   தலைவர்   ரபிசி   ரம்லி.

இவ்வளவு  மெதுவாக   செயல்படும்   போலீஸ்   1எம்டிபி  ஊழலைக் குறைகூறுவோர்மீது  மட்டும்   விரைந்து  நடவடிக்கை   எடுத்து  விடுகிறது   என்று    கூறிய    ரபிசி    தம்மீதும்   போலீஸ்   நடவடிக்கை   எடுத்துள்ளது   என்றார்.

“நேற்றிரவு   சுங்கை  பூலோ    மாவட்ட   போலீஸ்  நிலையத்தைச்  சேர்ந்த  இன்ஸ்பெக்டர்   ஹனிப்  என்னைத்   தொடர்பு  கொண்டார்.  ஆகஸ்ட்  10-இல்   சுங்கை   பூலோ   சிறைச்சாலைக்கு    வெளியில்     அன்வார்  இப்ராகிமின்   69வது   பிறந்த   நாளைக்   கொண்டாடும்    கூட்டத்தில்   நான்    ஆற்றிய  உரைக்காக   என்மீது   விசாரணை    நடப்பதாகக்  கூறினார்.

“விசாரணை  ஆவணங்கள்   வரும்  ஆகஸ்ட்   25-இல்   அரசுத்  தரப்பு   வழக்குரைஞரிடம்   ஒப்படைக்கப்படும்  என்றும்   எனக்குத்   தகவல்   தெரிவிக்கப்பட்டது”,  என  பாண்டான்  எம்பி   ஓர்   அறிக்கையில்   கூறினார்.

போலீசார்,  கடந்த   சனிக்கிழமை    யுனிவர்சிடி   இன்ஸ்டிடுயுட்   மாரா   ஸ்ரீ இஸ்கண்டார்   வளாகத்தில்   #TangkapMO1  கூட்டமைப்பில்   இடம்பெற்றுள்ள   மாணவர்களைக்  கைது    செய்வதிலும்   வேகமாக   செயல்பட்டிருக்கிறார்கள்   என  ரபிசி    தெரிவித்தார்.

ஆனால்,  1எம்டிபி  ஊழலுடன்   தொடர்புகொண்டுள்ள    தனிப்பட்டவர்கள்மீது    எவ்வளவோ  காலத்துக்குமுன்  எத்தனையோ   புகார்கள்     செய்யப்பட்டிருந்தாலும்    அதேபோன்று    நடவடிக்கை  எடுக்கப்படவில்லை  என்றவர்    சாடினார்..