காஷ்மீர் நிலவரம்: ராஜ்நாத் சிங் நேரில் ஆய்வு

ஜம்மு – காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாநிலத்தின் தற்போதைய சூழ்நிலை குறித்து நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதி பர்ஹான் வானியை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் மாநிலமே வன்முறைக் களமாக மாறியது. பர்ஹான் வானியின் ஆதரவாளர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அண்மையில் நிகழ்ந்த மோதலில் 65 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

இதையடுத்து மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், பதற்றம் நிறைந்த இடங்களைப் பார்வையிடவும், மாநிலத்தின் நிலைமை குறித்து ஆய்வு செய்யவும் ராஜ்நாத் சிங் காஷ்மீருக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்ரீநகருக்குச் சென்றடைந்த அவரிடம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், மாநில உள்துறைச் செயலர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் காஷ்மீரின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கிக் கூறினர்.

இதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சி ஒருங்கிணைப்பாளருமான ஒமர் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 6 பேர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்துப் பேசினர். சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பின்போது, ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த காற்றழுத்தத் துப்பாக்கியை (பெல்லட் கன்) பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்தப் பயணத்தின்போது மாநில ஆளுநர் என்.என்.வோரா, முதல்வர் மெஹபூபா முஃப்தி ஆகியோரை ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, காஷ்மீருக்குப் புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், “இந்திய அரசைப் பொறுத்தவரையில் காஷ்மீருடன் உணர்வுரீதியான உறவை வலுப்படுத்தவே விரும்புகிறது. தேவைப்படும் நேரத்தில் மட்டும் காஷ்மீரை பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. காஷ்மீரில் அமைதி திரும்பி மக்கள் இயல்பாக வாழ்க்கையை நடத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்று கூறினார்.

-http://www.dinamani.com

TAGS: