இதற்குமுன் நிகழ்ந்திராத’ மிகப் பெரிய ஊழல்; மேலும் 30 டிபிகேஎல் அதிகாரிகளிடம் விசாரணை

macc‘கடந்த  வாரம்    கோலாலும்பூர்  மாநகர்  மன்றத்தின்  ‘டத்தோ  ஸ்ரீ’  பெற்ற   நிர்வாக   இயக்குனர்  ஒருவரைக்  கைது   செய்த  மலேசிய  ஊழல்தடுப்பு   ஆணையம் (எம்ஏசிசி)     அம்மன்றத்தைச்  சேர்ந்த   மேலும்  30  அதிகாரிகளை  விசாரணைக்கு  அழைக்கும்.

மாநகர்  மன்றத்தில்   “இதற்குமுன்  நிகழ்ந்திராத”  அளவுக்கு  மிகப்  பெரிய ஊழல்  நிகழ்ந்திருப்பதாக    எம்ஏசிசி    நம்புவதாக    பத்திரிகைச்  செய்திகள்  கூறுகின்றன.

அதிகாரிகள்   டத்தோ  ஸ்ரீயுடன்   சேர்ந்து   பணியாற்றி    மேம்பாட்டாளர்களிடமிருந்து  கையூட்டு  பெற்றிருக்கிறார்கள்   என  நியு   ஸ்ரேய்ட்ஸ்   டைம்ஸ்  கூறியது.

டிபிகேஎல்லிடமிருந்து  பல்வேறு   அனுமதிகளைப்  பெற  வேண்டியிருந்த   மேம்பாட்டாளர்களிடம்   அதிகாரிகள்  பேரம்பேசி   இலவசமாக  கொண்டோமினிய  வீடுகளைப்  பெற்றார்கள்  என    சந்தேகிக்கப்படுவதாக  எம்ஏசிசி -இன்  புலன்விசாரணை  இயக்குனர்   அஸாம்  பாகி  கூறினார்.

“30க்கும்  குறையாத   மாநகர்  மன்ற   அதிகாரிகள்   எவ்வித  முன்பணமும்   செலுத்தாமல்    ஊழல்முறையில்     கொண்டோமினிய    வீடுகளைப்  பெற்றது   எங்கள்  விசாரணையில்   தெரிய  வந்துள்ளது.

“நூதனமாக   செயல்பட்டிருக்கிறார்கள்.   இரு  தரப்பும்,   பணம்   கொடுக்கப்படாமலும்  வாங்கப்படாமலும்   விற்பனை-  கொள்முதல்  ஒப்பந்தம்  செய்து  கொள்வார்கள்.   வீடுகள்  கட்டி  முடிக்கப்பட்டதும்  கொண்டோமினியம்களைச்  சந்தை  விலைக்கு  விற்று  விடுவார்கள்”,  என்று  அஸாம்  கூறியதாக    அறிவிக்கப்பட்டுள்ளது.

கையூட்டு  வழங்கிய   வீடமைப்பாளர்களையும்   எம்ஏசிசி   விட்டு  வைக்காது.   அவர்களும்  விசாரணைக்கு  அழைக்கப்படுவார்கள்  எனத்   தெரிகிறது.