மலேசியாகினி தவறான வாசகத்தை வெளியிட்டது – பசுபதி

pathi“ஒரு தமிழ்ப்பள்ளிக்கு போய், அங்குள்ள கழிவறைக்கு போனால்  அங்கு குண்டர் கும்பல் அடையாளங்களை காண்பீர்கள்”, என்ற வாசகத்தை நான் சொன்னதாக வெளியிட்ட  மலேசியாகினி அவ்வாசகத்தை மீட்டுக்கொண்டதாக பசுபதி சிதம்பரம் கூறினார். இந்தத் தவறான பதிவை அடிப்படையாகக் கொண்டு மலேசிய நண்பன் நாளிதழ் பல அவதூறான செய்திகளை வெளியிட்டிருப்பது வருந்தத்தக்கது என்றார்.

கடந்த 26.8.2016 இல் மலேசியாகினியில் அலியா என்ற நிருபர் எழுதி பதிவு செய்த அந்தச் செய்தி  வெளியானது. தாம் அப்படிச் சொல்லவில்லை என்று தம்முடன் தொடர்பு கொண்ட பலரிடம் தெளிவுபடுத்தியதாக பசுபதி கூறினார். ஆனால், அவதூறான செய்திகளை வெளியிட்ட மலேசிய நண்பன் இதுவரையில் தம்முடன் தொடர்பு கொண்டு எந்த விளக்கமும் பெறவில்லை என்றாரவர்.

இது சார்பாக தாம் மலேசியாகினியுடன்  தொடர்பு கொண்டு உண்மையில் தாம் பேசியதை முழுமையாக வெளியிடுமாறு கேட்டுக்கொண்டதாக பசுபதி கூறினார். அதன் அடிப்படையில், அவர்கள் தாம் பேசியதை ஒப்புக்கொண்டு அதனை இன்று பிற்பகல் 2.44 மணியளவில் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“கபாலி திரைப்படம்: நிழலா, நிஜமா?” என்ற கலந்துரையாடலின் போது நான் பல தகவல்களை பகிர்ந்து கொண்டேன்.  வறுமைச் சூழலுக்கும் வன்முறைக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசும் போது வறுமைச் சூழலில் உள்ள குழந்தைகள் தேசியப்பள்ளியில் படித்தாலும்  தமிழ்ப்பள்ளியில் படித்தாலும் அவர்களுக்கு ஏற்படும் தாக்கம் ஒன்றுதான்.”

“மேலும், ஒரு தமிழ்ப்பள்ளிக்கு  போய், இங்கே அருகாமையில் உள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, கழிவறையைப் பாருங்கள்.  அங்கு  36, 18, 04, மற்றும் தேள் போன்ற சின்னங்கள் இல்லாவிட்டால் நல்லதுதான்.  ஆனால், தமிழ்ப்பள்ளி மாணவர்களும்  இத்தாக்கத்திற்கு உள்ளாகிறார்கள்”, என்று கூறியதாக பசுபதி தெரிவித்தார்.

மேலும், தமிழ்ப்பள்ளியில் குண்டர்கும்பலின் தாக்கம் பற்றி கருத்துரைக்க முற்பட்ட  ஒரு நபரை தாம் அவ்வாறு தமிழ்ப்பள்ளி  என்று தனிமைப்படுத்த இயலாது என்றும்  இதனை வறுமைக் கலாச்சார அடிப்படையில் காண வேண்டும் என்றும் தாம் அவருக்கு   தெளிவுப்படுத்தியதாக பசுபதி விளக்கம் அளித்தார்.

தாம் சொல்லாத ஒன்றை சொன்னதாக அவதூறு பரப்புரை செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பீர்களா என வினவிய போது, “எதற்கும் ஓர் எல்லை உண்டு, பொறுத்திருங்கள்”, என்றார் மைஸ்கில்ஸ் வாரியத்தின் நிருவாகியான வழக்கறிஞர் பசுபதி  சிதம்பரம்.