இன்று இலங்கை வரும் பான் கீ மூன் வடக்கு முதல்வரை சந்திக்கப் போவதில்லை என தெரிவிப்பு!

ban kee moonஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று புதன்கிழமை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.

இன்று இலங்கை வரும் இவர் எதிர்வரும் 2ம் திகதி வரை தங்கியிருந்து பல்வேறு தரப்பினர்களைச் சந்திக்கவுள்ளார்.

இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை அவர் கொழும்பில் சந்திக்கின்றார்.

நாளை வியாழக்கிழமை காலிக்கு விஜயம் செய்யும் பான் கீ மூன், ‘நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வுக்கு- இளைஞர்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் நடைபெறும் இளைஞர் மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

vikneswaran01வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் எனப் பல தரப்பினரையும் ஐ.நா செயலாளர் நாயகம் தனது இலங்கை விஜயத்தில் சந்திக்கின்றார்.

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் செல்லும் பான் கீ மூன், மீள்குடியேற்ற இடங்களைப் பார்வையிடவுள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இவரின் யாழ்ப்பாண விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனைத் தனியாகச் சந்திக்கப் போவதில்லையென்றும், எனினும் கூட்டமைப்பின் பிரதிநிதிநிதிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தம்முடன் வந்து பான் கீ மூனை சந்திக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேநேரம், அன்றைய தினம் கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ‘நிலையான சமாதானம் – நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்தி இலக்குகளை அடைதல்’ என்ற தலைப்பில் அவர் விசேட உரையாற்றவிருக்கின்றார்.

கடந்த வருடம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐ.நா பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனை இலங்கைக்கு வருமாறு அழைத்திருந்தார்.

தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் இலங்கை வருவதாக வழங்கிய உறுதிமொழிக்கு அமையவே பான் கீ மூன் இலங்கை வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட விடயங்கள் பற்றியோ அல்லது இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கிலோ அவர் இலங்கை வரவில்லையென அமைச்சர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பான் கீ மூனின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இனவாத சக்திகள் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளன.

அதேநேரம், காணாமல்போனவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் குடும்பத்தார் தமக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

மறுபக்கத்தில் ஐ.நா.செயலாளர் நாயகம் கிழக்கு மாகாணத்தை புறக்கணிக்கின்றார். அவர் அங்கும் வரவேண்டும் என வலியுறுத்தி முஸ்லிம் சமூகத்தினரும் கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: